அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

என்னை வச்சுக்கோ.. என் மகளை கட்டிக்கோ... - தகாத உறவினால் தடம் மாறிய குடும்பம்!

சலைத்ராணி
பிரீமியம் ஸ்டோரி
News
சலைத்ராணி

கார்த்திக், அவனோட காரை எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் நிறுத்துவான். அப்படியே எங்களுக்குள்ள ‘பழக்கம்’ ஆகிடுச்சு.

திருமணம் மீறிய உறவைத் தொடர, ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே கணவனை அடித்துக் கொலைசெய்து, உடலைத் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள குருவிநத்தத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர். மீன் வியாபாரம் செய்துவந்த இவருக்கு சலைத்ராணி என்ற மனைவியும், 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்களும் உள்ளனர். தினமும் இரவில் லோடு ஆட்டோவில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்துக்குச் சென்று மீன் வாங்கிவந்து, குருவிநத்தத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வியாபாரம் செய்துவந்திருக்கிறார்.

ஞானசேகர்
ஞானசேகர்

வீட்டுக்கு எதிரே மரப்பட்டறை நடத்திவந்த கார்த்திக்குடன் சலைத்ராணி திருமணம் மீறிய உறவில் இருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சலைத்ராணியின் மூத்த மகளும் கார்த்திக்கைக் காதலித்திருக்கிறார். இதையடுத்து ஞானசேகர் தன் மனைவி, மகளைக் கண்டித்திருக்கிறார். அடுத்த சில நாள்களில் அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டார் ஞானசேகர். விசாரணையில் சலைத்ராணியே தன் மகளுடனும், ஆண் நண்பர் கார்த்திக்குடனும் இணைந்து கணவனை அடித்துக் கொலை செய்து தீ வைத்துக் கொளுத்திய ‘பகீர்’ தகவல் வெளியானது.

‘‘கார்த்திக், அவனோட காரை எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் நிறுத்துவான். அப்படியே எங்களுக்குள்ள ‘பழக்கம்’ ஆகிடுச்சு. நானும் கார்த்திக்கும் ரெண்டு வருஷமாவே ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தோம். ‘கார்த்திக், உன்னை என்னால மறக்க முடியாதுடா... நீ என்னை வச்சுக்கோ, என் மூத்த மகளை லவ் பண்ணி கல்யாணம் முடிச்சுக்கோ. நாம எப்பவுமே ஜாலியா இருக்கலாம்டா’னு சொன்னேன். அவனும் சரின்னு சொன்னான். அப்புறம் ‘கார்த்திக் உன்னை லவ் பண்றானாம். நீயும் அவனை லவ் பண்ணுடி. வெளியூர்ல கட்டிக்கொடுத்துட்டு அம்மாவால உன்னைப் பார்க்காம இருக்க முடியாதும்மா’ன்னு சொல்லி என் மகளையும் கார்த்திக்கைக் காதலிக்கச் சொன்னேன். ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சாங்க. நானும் கார்த்திக்கும் எப்பவும் போல ஜாலியா இருந்தோம்.

சலைத்ராணி
சலைத்ராணி

ஒருநாள், கார்த்திக்குடன் நான் ஒண்ணா இருந்ததை என் கணவர் பார்த்துட்டார். சத்தம் போட்டு என்னை அடிச்சார். மகளோட லவ் மேட்டரும் தெரிஞ்சு அவளையும் கண்டிச்சார். இதையடுத்து ‘நீ கார்த்திக்கைக் கல்யாணம் பண்ணிக்க உங்க அப்பா சம்மதிக்க மாட்டார். உங்க அப்பா இருக்குற வரைக்கும் நீங்க ஒண்ணு சேர முடியாது. அதனால அவரைக் கொன்னுடுவோம் பாப்பா’னு என் மகளிடம் சொல்லிச் சம்மதிக்க வெச்சேன்.

சம்பவத்தன்று என் கணவர் தூங்கினதும் கார்த்திக்குக்கு போன் போட்டு வரவெச்சேன். பிறகு தலைகாணியை கணவரோட முகத்துலவெச்சு அமுக்குனேன். கால் ரெண்டையும் மக பிடிச்சுக்கிட்டா. இரும்புக்கம்பியால அவர் தலையில மூணு நாலு தடவை ஓங்கி அடிச்சான் கார்த்திக். அவர் செத்ததும் பெரிய சாக்குக்குள்ளே போட்டு மூட்டையா கட்டி கார்த்திக்கோட கார்லயே கொண்டு போனோம். ஆள் அரவமில்லாத முள்ளுக்காட்டுக்குள்ள சாக்கு மூட்டையை இறக்கி, பெட்ரோல் ஊத்தி தீ வெச்சுட்டுக் கிளம்பிட்டோம். ரெண்டு தடவை வீட்டையும் நல்லா அலசிவிட்டுட்டு தலைக்குக் குளிச்சுட்டோம்” என விவரித்து போலீஸாரையே அதிரவைத்திருக்கிறார் சலைத்ராணி.

என்னை வச்சுக்கோ.. என் மகளை கட்டிக்கோ... - தகாத உறவினால் தடம் மாறிய குடும்பம்!

ஊர்க்காரர்களிடம் பேசியபோது, “சின்ன வயசுலயே மீன் வியாபாரம் பார்த்து குடும்பத்தைக் காப்பாத்துனவன் ஞானசேகர். ஆனா, சலைத்ராணி கல்யாணமாகி முதல் குழந்தை பிறந்த மூணு மாசத்துலயே பிள்ளையப் போட்டுட்டு இன்னொருத்தன்கூட ஓடிப் போயிட்டா. ரெண்டு வருஷம் கழிச்சு திரும்ப வந்தவளை மன்னிச்சு ஏத்துக்கிட்டான். அவ நாசமாப்போனது மட்டுமில்லாம, பெத்த மகளையும் தவறான பாதைக்குக் கூட்டிட்டுப் போயிட்டா பாவி மவ. அப்பா மேல ரொம்ப பாசம் வெச்சிருக்குற ஞானசேகரோட ரெண்டாவது மகள், அப்பாவை நினைச்சு அழுதுக்கிட்டு சாப்பிடாம பட்டினியா கிடக்கு” என்றனர் வேதனையுடன்.

கார்த்திக்
கார்த்திக்

வழக்கை விசாரித்துவரும் பசுவந்தனை காவல் நிலையப் போலீஸாரிடம் பேசியபோது, “ஞானசேகர் தீயில் கருகி இறந்துபோன விஷயத்தைச் சொன்னதும், சலைத்ராணி முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. வீட்டுக்குள்ளேயும் ஓர் இடத்தில், ரத்தம் சிந்தியிருந்தது. ஞானசேகரின் இரண்டாவது பொண்ணு மட்டும் அழுதது. ஆனால், மூத்த பொண்ணு பதற்றமாகவே இருந்தது. தனித்தனியாக விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே... முறைப்படி விசாரித்தோம். உண்மையை ஒப்புக் கொண்டார்கள். சலைத்ராணி, அவருடைய மூத்த மகள், கார்த்திக் ஆகிய மூவரையும் கைதுசெய்துவிட்டோம். கொலை செய்வதற்குப் பயன்படுத்திய இரும்புக்கம்பி, உடலை எடுத்துச் சென்ற கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.

முறை தவறிய உறவு, ஒரு குடும்பத்தையே சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது!