இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. கொரோனா வைரஸின் முதலாம் அலையைக்காட்டிலும் இந்தியா தற்போது அதிக அளவிலான உயிர்ச்சேதங்களைச் சந்தித்துவருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துவருகிறது. மாநகரின் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர்.
ஹைதராபாத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்தபடி இருப்பதால், மையானங்களில் மக்கள் சடலங்களை வைத்துக்கொண்டு வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இந்தநிலையில், இடுகாடுகளில் சடலங்கள் தகனம் செய்யப்பட தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், பெரும்பாலான இடங்களில் எரியூட்டத் தேவைப்படும் மரக்கட்டைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நகரின் பல பகுதிகளில், மின்சாரச் சுடுகாடுகள் இல்லாததால் மக்கள் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துக்கொண்டு மயானங்களுக்கு விரைந்துகொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக நகரின் பெரும்பாலான மயானங்களில் சடலங்களை எரியூட்டுவதற்குத் தேவைப்படும் மரக்கட்டைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், மரக்கட்டைகளின் விலையும் கடந்த ஒரு வாரத்தில் பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பாக சைதாபாத்தில் இயங்கிவரும் இறுதிச் சடங்குகள் சேவை நிறுவனமான இந்து ஸ்மாஷனா வத்திகாவின் பொறுப்பாளர் மல்லேஷ் ஸ்ரீதர் ராவ் கூறுகையில், ``ஹைதராபாத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்துவருகிறது. உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்திருக்கிறது. ஹைதராபாத் நகர்ப்புற பகுதிகளில் மின் தகன மேடைகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்தாலும், சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின் தகன மேடைகள் இல்லை. அதனால், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பெரும்பாலும் மயானங்களுக்கே கொண்டுவரப்படுகின்றன.
பல மயானங்களில், மக்கள் இறந்தவர்களின் சடலங்களை வைத்துக்கொண்டு வரிசையில் எரியூட்டுவதற்குக் காத்திருக்கின்றனர். அதன் காரணமாக, மரக்கட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. ஹைதராபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரும்பாலான இடுகாடுகளுக்கு ஆந்திராவிலிருந்துதான் மரக்கட்டைகள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், தற்போது ஆந்திரத்திலும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுவருவதால் அங்கும் மரக்கட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹைதராபாத்துக்கு வழங்கப்படும் மரக்கட்டைகளின் விலை தற்போது பல மடங்கு உயர்ந்திருக்கிறது. தோராயமாக ஒரு சடலத்தை முழுமையாக எரியூட்டுவதற்கு 400-லிருந்து 600 கிலோ மரக்கட்டைகள் தேவைப்படும். சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், பற்றாக்குறை காரணமாக, ஒரு குவின்டால் மரக்கட்டையின் விலை ரூபாய் 400-லிருந்து தற்போது 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
அதேபோல், சில்லறை விற்பனையில் கிலோ 7 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மரக்கட்டைகள் தற்போது 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளன. நாங்கள் சைதாபாத்தின் இடுகாடுகளுக்கு முன்கூட்டியே கடந்த வாரம் 5,000 குவின்டால் மரக்கட்டைகளை ஆர்டர் செய்துவிட்டோம். ஆனால் தற்போதுள்ள நிலைமையில் எங்களுக்கு இன்னும் கூடுதலாகத் தேவைப்படும் என்று நினைக்கிறோம்" என்றார்.
நிலவும் அசாதாரண சூழலில், மரக்கட்டைகள் விற்பனை செய்யும் நிறுவனங்களும் அதிகரித்துள்ள தேவையைச் சந்திக்க முடியாமல் திணறிவருகின்றன. ஹைதராபாத்தைச் சேர்ந்த மரக்கட்டை வியாபாரி ஒருவர் கூறுகையில், ``எங்களால் இடுகாடுகளின் ஆர்டர்களைச் சமாளிக்க முடியவில்லை. எங்களுடைய விற்பனை தற்போது 50 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கிறது. எங்களால் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை" என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எரியூட்டப்படத் தேவைப்படும் மரக்கட்டைகளின் விலை உயர்ந்திருப்பதால் ஹைதராபாத்தில் சடலங்களை அடக்கம் செய்யும் இறுதி சேவை நிறுவனங்களும் இந்த நேரத்தில் தங்கள் பேக்கேஜ் தொகையை அதிகரித்திருக்கின்றன. வழக்கமாக 8,000 ரூபாய் வசூலிக்கும் நிறுவனங்கள் தற்போது உடல்களைத் தகனம் செய்வதற்கு 20,000 முதல் 30,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் வசூலித்துவிடுகின்றனவாம்.
ஹைதராபாத்தில் நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு ஹைதராபாத் மாநகராட்சி உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதற்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்துவருகின்றனர்.