Published:Updated:

நீர்மின் திட்டத்தின் நீண்டகால சர்ச்சை...

கொரோனாவைப் பயன்படுத்திக் கொண்டதா கேரள அரசு!?

பிரீமியம் ஸ்டோரி

‘கொரோனா பேரிடர் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, `நீர்மின் திட்டம்’ என்ற பெயரில் சூழலியல் அழிவுத் திட்டத்தை கேரள அரசு செயல்படுத்தப் பார்க்கிறது’ என்ற குரல்கள் கேரளாவில் உரத்து ஒலிக்கின்றன.

கடந்த 1996-ம் ஆண்டு, 163 மெகாவாட் மின்சார உற்பத்திக்காகச் சாலக்குடி நதியில் அணை கட்டவும், நீர்மின் நிலையம் அமைக்கவும் அனுமதி வேண்டி கேரள அரசிடம் அந்த மாநில மின்சார வாரியம் ஒரு திட்ட முன்மொழிதலைக் கொடுத்தது. அந்தத் திட்டத்தின்படி 23 மீட்டர் உயரத்தில், 311 மீட்டர் நீளத்தில் சாலக்குடி நதியில் கான்கிரீட் அணை கட்டப்படும். அணையின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதியின் பரப்பளவு 104 ஹெக்டேர். இந்தத் திட்டத்துக்காக எடுத்துக்கொள்ளப் போகும் மொத்த பரப்பளவு 168 ஹெக்டேர்.

1997-ம் ஆண்டு முதலே இந்தத் திட்டத்தை அனுமதிக்குமாறு நிறைய அழுத்தங்கள் வந்து கொண்டிருந்தன. ஆகவே, மேற்குத் தொடர்ச்சி மலையை ஆய்வு செய்ய அமர்த்தப்பட்ட மாதவ் காட்கில் தலைமையிலான ஆய்வுக்குழுவை, இந்தத் திட்டம் குறித்தும் ஆய்வு செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வலியுறுத்தியது. அந்த ஆய்வுக்குழுவும், ‘இந்தத் திட்டம் மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது’ என்று கூறி, இதை நிராகரிக்குமாறு அறிவுறுத்தியது. இருந்தும், 2016-ம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது. இந்தத் திட்டத்துக்கு கேரள மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவியதால், அதைச் செயல்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

நீர்மின் திட்டத்தின் நீண்டகால சர்ச்சை...

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் கொள்ளைநோய்ப் பேரிடர் போன்றவற்றின் மீது மக்களின் கவனம் இருக்கும் நேரத்தில், ‘இந்தத் திட்டத்துக்குத் தேவைப்படும் சூழலியல் தாக்க மதிப்பீடு, தொழில்நுட்ப அனுமதி வாங்குவது உள்ளிட்ட வேலைகளை மேற்கொள்ள ஆட்சேபனை இல்லை’ என்று கேரள அரசாங்கம் அந்த மாநில மின்சார வாரியத்துக்கு என்.ஓ.சி வழங்கியுள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இந்த என்.ஓ.சி உயிர்ப்புடன் இருக்கும்.

இது குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘இந்த அனுமதி, அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டத்தைப் போன்ற வலிமையான மற்றுமொரு போராட்டத்துக்கு வழிவகுக்கும்’’ என்று எச்சரித்துள்ளார்.

சாலக்குடி நதியும், அதைச் சார்ந்துள்ள இயற்கைக் காடுகளும் அந்த நிலத்துக்கே உரிய தாவர வளத்தைக் கொண்டுள்ளன. அணை வரவிருக்கும் பகுதியிலேயே, உலகில் அங்கு மட்டுமே காணப்படும் 155 ஓரிடவாழ் தாவரங்கள் உள்ளன. அவற்றில் 33 வகைகள் அரிய மற்றும் அழியும் நிலையில் உள்ளவை. மலபார் சாம்பல் நிற இருவாச்சி, மலபார் கறுப்பு வெள்ளை இருவாச்சி, இந்திய இருவாச்சி ஆகிய பறவைகள் இந்தப் பகுதியில் வாழ்கின்றன. மலபார் கறுப்பு வெள்ளை இருவாச்சியின் இரண்டு முக்கிய இனப் பெருக்கப் பகுதிகளில், இந்தப் பகுதியின் ஆற்றுப்படுகைக் காடுகளும் ஒன்று.

திட்டம் வரவுள்ள வாழச்சல்-சோலையார் பகுதி, கேம்பிரிட்ஜிலுள்ள பேர்டுலைஃப் இன்டர்நேஷனல் (Birdlife International, Cambridge) அமைப்பால் சர்வதேச அளவில் முக்கியமான பறவை வாழிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ‘‘இவ்வளவு சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அணை கட்டி, நீர்மின் நிலையம் அமைத்தால் அது மிகப்பெரிய சூழலியல் பேரழிவுக்கு வழிவகுக்கும்’’ என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

நீர்மின் திட்டத்தின் நீண்டகால சர்ச்சை...

இதன் பாதிப்புகள் நிலத்தில் மட்டுமன்றி, நீரிலும் பெரிய அளவில் இருக்கும். சாலக்குடி நதியின் மொத்த மீன் வளத்தையுமே இது பாதிக்கும். கேரளாவில் பதிவாகியுள்ள 210 வகையான நன்னீர் மீன்களில் 104 வகைகள் சாலக்குடியில் பதிவாகியுள்ளன. அவற்றில் 23 வகை மீன்கள், இந்த நதியில் மட்டுமே வாழ்பவை. இந்த நதியில் பதிவு செய்யப்பட்டுள்ள 99 வகை மீன்களில் 68 வகைகள் அதிரப்பள்ளி நீர்மின் திட்டம் அமையவுள்ள பகுதியிலேயே பதிவாகி யுள்ளன. இந்த அணை கட்டப்பட்டால், அவை அனைத்தின் இருப்புமே ஆபத்துக்கு உள்ளாகும். இந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுதான், ‘சாலக்குடி நதியை மீன்கள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்’ என்று மீன் வளத்துக்கான தேசிய ஆணையம் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது.

கேரள வனத்துறை முன்னாள் அமைச்சர் பினோய் விஸ்வம், ‘‘சுற்றுச்சூழல் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாத அதிகாரிகள் எடுத்துள்ள முடிவுதான் இது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதிரப்பள்ளி நீர்மின் திட்டம் அமல்படுத்தப்பட்டால், சூழலியல்ரீதியாகவும் அதன் விளைவாகப் பொருளாதாரரீதியாகவும் கேரளா இழப்புகளைச் சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரித்துள்ளார்.

இவைபோக, திட்டத்துக்காகப் பரிந்துரைக்கப் பட்ட மொத்த நிலப்பரப்புமே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானைகள் திட்டத்தின்கீழ், 9-வது யானைக் காப்பகமாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. அணை வந்தால் மூழ்கப்போகும் நிலம் முழுக்கவே பரம்பிக்குளத்திலிருந்து பூயம்குட்டி காட்டுக்குச் செல்லும் யானைகளின் வலசைப் பாதையாக இருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ் - பினோய் விஸ்வம்
ஜெய்ராம் ரமேஷ் - பினோய் விஸ்வம்

இது குறித்துப் பேசிய அதிரப்பள்ளியைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் அமிதாப்பச்சன்,

‘‘ `இந்தத் திட்டத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆட்சேபனை இல்லை’ என்று கேரள அரசு என்.ஓ.சி-தான் தந்துள்ளது. அதாவது, இந்தத் திட்டத்துக்காக முன்பு செய்த சூழலியல் தாக்க மதிப்பீடு போன்ற செயல்முறைகள் இப்போது காலவதியாகிவிட்டன. அடுத்த ஏழு ஆண்டுகளில் அவற்றை மீண்டும் செய்து அந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

`இங்கிருந்து 163 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்’ என்று அரசு கூறுகிறது. ஆனால், அவ்வளவு மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியுமா என்பதே சந்தேகம்தான். அதற்காக, இவ்வளவு சர்ச்சைகளுக்கு நடுவில் ஒரு மிகப்பெரிய சூழலியல் பேரழிவுக்கு வித்திட்டு அணைகட்ட வேண்டுமா?” என்று கேள்வியெழுப்பினார்.

மேற்கொண்டு பேசிய அவர், ‘‘தென்னிந்தியப் பழங்குடி இனங்களிலேயே காடர்கள்தான் மிகவும் பழைமையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆப்பிரிக்க மூதாதைகளோடு பெரிதும் ஒத்துப்போகும் ஆதாரங்கள் அவர்களிடம்தான் உள்ளன. சாலக்குடி நதிப்படுகையிலுள்ள மலைத்தடங்களிலும், வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட வனப்பகுதியிலும் 1,500 காடர்கள் வாழ்கிறார்கள். அதிரப்பள்ளி அணைத் திட்டத்துக்கு முன்னமே நிறைய அணைத் திட்டங்களால் தொடர்ந்து இடமாற்றத்துக்கு அவர்கள் ஆளாகிவருகிறார்கள்.

வாழச்சல் வனப்பகுதியில், 413 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எட்டு காடர் பழங்குடியினக் கிராமங்கள் அமைந்துள்ளன. மொத்தம் 160 குடும்பங்கள் வாழ்கின்றன. அதிரப்பள்ளி திட்டத்தால் தீவிர பாதிப்பைச் சந்திக்கக்கூடிய விதத்தில்தான் இந்தக் கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இதனால், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும். அணை நிரம்பும்போது, அவர்களின் குடியிருப்புகளும்கூட நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்’’ என்கிறார் மிகுந்த கவலையோடு.

2012-ம் ஆண்டுதான், இந்திய வன உரிமைச் சட்டத்தின்கீழ் காடர் பழங்குடிகளின் நில உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டன. சட்டபூர்வமாக அவர்களுடைய அனுமதியின்றி இந்தத் திட்டத்துக்கு அனுமதியளிக்க முடியாது. இந்நிலையில், தங்கள் பழங்குடியின கிராம சபைகளைக் கூட்டி, இந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று காடர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர்.

இந்த நிலப்பகுதி செய்யக்கூடிய சூழலியல் சேவைகளையோ, இந்தத் திட்டத்துக்கு விலையாகக் கொடுக்கப்போகும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அழிவையோ கேரள அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. ‘இவ்வளவு பெரிய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த அதிரப்பள்ளி-வாழச்சல் பகுதியை, நீர்மின் திட்டத்துக்காக கேரள அரசு அழித்துவிடக் கூடாது’ என்று கேரள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அத்துடன், ‘சாலக்குடி நதியின் மீன்வளத்தைப் பாதுகாக்க, அதை மீன்கள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

என்ன செய்யப்போகிறது கேரள அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு