அரசியல்
அலசல்
Published:Updated:

‘தண்ணி இருக்கு... மின்சாரம் எடுக்கலை...’ - முடங்கிய நீர்மின் நிலையங்கள்!

நீர்மின் நிலையங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீர்மின் நிலையங்கள்!

கோவை மாவட்டத்திலுள்ள காடம்பாறை நீர்மின் நிலையத்தில் 2 அலகுகள் செயல்படவில்லை. தேனி மாவட்டம், சுருளியாற்றில் 35 மெகாவாட் மின் உற்பத்தி அலகும் செயல்படவில்லை

வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே தமிழ்நாட்டில் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. ஆனால், முடங்கிக்கிடக்கும் நீர்மின் நிலையங்களால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மின் வாரியத்துக்குப் பல கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர் தொழிற்சங்கத்தினர்.

அனல்மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 4,320 மெகாவாட், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 8,618 மெகாவாட், சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 5,583 மெகாவாட், நீர்மின் நிலையங்கள் மூலம் 2,321 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன்பெற்றது தமிழ்நாடு. சொந்த உற்பத்தி போக, மத்திய தொகுப்பிலிருந்தும், தனியாரிடமிருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

‘தண்ணி இருக்கு... மின்சாரம் எடுக்கலை...’ - முடங்கிய நீர்மின் நிலையங்கள்!
‘தண்ணி இருக்கு... மின்சாரம் எடுக்கலை...’ - முடங்கிய நீர்மின் நிலையங்கள்!

மரபு சார்ந்த மின் உற்பத்தியைப் பொறுத்தவரை, நீர்மின் நிலையங்களிலிருந்து மட்டுமே மிகக் குறைவான செலவில் மின் உற்பத்தி செய்யப் படுவதாகச் சொல்கிறார்கள் மின்வாரியத்தினர். இங்கு மின் உற்பத்தி செய்ய யூனிட் ஒன்றுக்கு வெறும் 50 பைசா மட்டுமே செலவாகிறது. இதுவே அனல்மின் நிலையமாக இருந்தால் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய சராசரியாக ரூ.5 செலவு செய்ய வேண்டும். ஆனால், பல நீர்மின் நிலையங்கள் செயல்படாததால், தமிழ்நாடு அரசு மின் உற்பத்திக்காகக் கூடுதல் தொகை செலவிடவேண்டியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சுப்பிரமணி
சுப்பிரமணி

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.சுப்பிரமணி, “கோவை மாவட்டத்திலுள்ள காடம்பாறை நீர்மின் நிலையத்தில் 2 அலகுகள் செயல்படவில்லை. தேனி மாவட்டம், சுருளியாற்றில் 35 மெகாவாட் மின் உற்பத்தி அலகும் செயல்படவில்லை. மொத்தமாக 235 மெகாவாட் செயல்படவில்லை. இவை சரியாக இருந்திருந்தால் கடந்த நான்கு மாதங்களாக முழு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்திருக்கலாம். அணையில் நிறைய தண்ணீர் இருந்தும், மின் உற்பத்தி செய்யாமலேயே வீணாகத் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மின் உற்பத்தி வசதியை முறையாகப் பயன்படுத்தாததால், அதை வேறு வகையில் ஈடுகட்ட மின்வாரியம் பல கோடி ரூபாய் கூடுதலாகச் செலவிட்டிருக்கிறது. இந்தக் கோளாறுகளைச் சரிசெய்யத் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் மேலும் அரசு நிதி விரயமாகும்” என்றார்.

ராஜேஷ் லக்கானி
ராஜேஷ் லக்கானி

இது குறித்து தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானியிடம் பேசினோம். “காடம்பாறை நீர்மின் நிலையத்தில் 4 அலகுகள் உள்ளன. இவற்றில் 2 அலகுகளில் பைப்பில் ‘லீக்கேஜ்’ இருக்கிறது. மற்ற 2 அலகுகளும் இயங்கிக்கொண்டிருப்பதால் பழுதை உடனே சரி செய்ய முடியாது. மழை ஆரம்பித்த பிறகு மின் உற்பத்தி நிறுத்தப்படும். அப்போது பழுது சரிசெய்யப்பட்டு ஜனவரியிலிருந்து செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். சுருளியாற்றில் பைப் வெடித்துவிட்டது. பழுது நீக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதுவும் பொங்கலுக்குப் பிறகு செயல்பாட்டுக்கு வந்துவிடும். திடீரென்று ஏற்பட்ட கோளாறு இது. வேண்டுமென்றே சரிசெய்யாமல் இருந்தால்தான் இழப்பு என்று கூற முடியும்” என்றார்.