சினிமா
தொடர்கள்
Published:Updated:

பல்லாண்டு வாழட்டும் பாவேந்தன்!

பெற்றோருடன் பாவேந்தன்
News
பெற்றோருடன் பாவேந்தன்

இரண்டு பெண் குழந்தைகளுக்கு அடுத்த படியாகப் பாவேந்தன் பிறந்தான். பிறந்த முதல் நாளிலிருந்தே அவனுக்கு உடலில் பிரச்னைகள்.

கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே உள்ளது திம்மசமுத்திரம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த திருமேனி - சசிகலா தம்பதிக்குப் பாவனா, சக்தி என இரண்டு மகள்களும், பாவேந்தன் என ஒரு மகனும் இருக்கிறார்கள். திருமேனி தையற்கலைஞர்; சிறிது காலம் வெளிநாட்டிலும் வேலை பார்த்திருக்கிறார். தொழிலில் கெட்டிக்காரரான திருமேனி, சிறுகச் சிறுகச் சேமித்து ஒரு வீட்டைக் கட்டியுள்ளார். குடும்பத்தை ஓரளவு மேலே கொண்டுவந்து விட்டோம் என்ற நிம்மதியில், குழந்தைகளின் படிப்பு சார்ந்து தன்னுடைய கவனத்தைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்த நிலையில்தான் திருமேனியின் குடும்பம் மிக மோசமான பிரச்னைகளை எதிர்கொள்ள ஆரம்பித்தது.

இரண்டு பெண் குழந்தைகளுக்கு அடுத்த படியாகப் பாவேந்தன் பிறந்தான். பிறந்த முதல் நாளிலிருந்தே அவனுக்கு உடலில் பிரச்னைகள். பிரசவமாகி டிஸ்சார்ஜ் ஆகிவந்த மறுநாள் பாவேந்தனுக்குக் கையெல்லாம் உதறல் எடுத்திருக் கிறது. பால்கூடக் குடிக்காமல் தூங்கிக்கொண்டே இருந்திருக்கிறான்; கண் விழிக்கும்போதெல்லாம் நடுக்கம் வந்துகொண்டே இருந்திருக்கிறது. பயந்துபோன பெற்றோர், பிரசவம் பார்த்த ஆஸ்பத்திரிக்கே தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள்.

“உங்க மகனுக்கு வலிப்பு வருது, ஏதாவது ஒரு குழந்தைகள் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க. எதுவா இருந்தாலும், ஆறு மணி நேரத்துக்குள்ள சிகிச்சை கொடுக்க ஆரம்பிக்கணும். இல்லாட்டி பெரிய பிரச்னை ஆகிடும்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

மனதை இழக்காத திருமேனியும் சசிகலாவும் மகனை மீட்கத் தொடர்ச்சியான பரிசோதனை களை மேற்கொண்டனர். இப்படியான தொடர் பரிசோதனைகளின் விளைவாக Hypoxic Ischemic Encephalopathy (HIE) என்ற குறைபாட்டால் பாவேந்தன் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பது கண்டறியப்பட்டது. இது குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாத ஒரு நிலை என்ற செய்தி இடியாய் வந்து இறங்கியது.

இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளால் உட்காரவோ, நிற்கவோ முடியாது. ஒரு நாளில் பலமுறை வலிப்பு ஏற்படும். தூக்கமும் விழிப்பும் சீராக இருக்காது. பேச்சு வராது. பசி, அழுகை, கோபம் போன்ற எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாது. மூளை முடங்கியிருப்பதால், அதிலிருந்து எந்தச் செய்தியும் சரியாக உடலின் மற்ற உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. அதனால் மற்றவர்களைப் போல் இயல்பாக உடல் உறுப்புகளை இயக்க முடியாது. எனவே எல்லாச் செயல்பாடுகளுக்கும் 100 சதவிகிதம் மற்றவர்களைச் சார்ந்தே இருக்கவேண்டும். மருத்துவ உலகம் Persistent Vegetative State (PVS) என்று இதற்குப் பெயரிட்டுள்ளது. தற்போது 12 வயதாகும் பாவேந்தன் இந்த எல்லாப் பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளான்.

“கட்டுப்படுத்த முடியாத 10, 20 வலிப்புகள் ஒரு நாள்ல பாவேந்தனுக்கு ஏற்படுது. அதிகபட்சமா ஒருநாளைக்கு 150 வலிப்பு வரை பாவேந்தனுக்கு ஏற்பட்டிருக்கு. இதுக்கு மருந்துகள் கொடுத்தாலும், கட்டுப்படுத்துதே தவிர தடுக்க மாட்டேங்கிது” என்று வேதனை மேலிடப் பேசுகிறார் அவனின் தந்தை.

பெற்றோருடன் பாவேந்தன்
பெற்றோருடன் பாவேந்தன்

பாவேந்தனின் குறைபாட்டுக்குத் தீர்வே இல்லை என்று தெரிந்துவிட்ட நிலையில், மகன் அனுபவிக்கும் வேதனைகளைப் பொறுக்காத பெற்றோர் தங்கள் மகனின் வேதனையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், கருணைக் கொலை செய்ய அனுமதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்றம் இதை ஆய்வு செய்யக் குழு ஒன்றை நியமித்தது. அந்தக்குழு, சில நேரங்களில் பாவேந்தன் கண் சிமிட்டல் போன்ற குறைந்தபட்ச எதிர் வினைகளைப் புரிகிறான் என்று அறிக்கை சமர்ப்பித்தது. அதனால் கருணைக்கொலை செய்வதற்கான வாய்ப்பை நிராகரித்தது.

பாவேந்தனின் நிலை பற்றி மார்ச் 25-ல் விகடன் டாட் காமில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்த எட்வின் செல்வராஜ் என்ற வாசகர், இரண்டு பெண் குழந்தைகளின் கல்விக்காக 50,000 ரூபாயை Vasan Charitable Trust-க்கு அனுப்பினார். இதன் தொடர்ச்சியாக ஏராளமான வாசகர்கள் பங்களிப்பு செய்ய இதுவரை 2,16,224 ரூபாய் சேர்ந்துள்ளது.

விகடன் வாசகர்களின் உதவியால் நெகிழ்ந்துபோயிருக்கும் திருமேனி, “மனுஷங்க மூலமாதான் தெய்வம் உதவும்னு சொல்லுவாங்க... அதை நிரூபிச்சிருக்காங்க விகடன் வாசகர்கள். இனிமே வாழ்றது எப்படி சாத்தியம்னு ஒடைஞ்சுபோயி இருந்தோம்... இனிமே அந்த எண்ணம் மனசுல வரவே வராது. நிறைய நம்பிக்கை வந்திருக்கு!” என்கிறார்.

இயற்கைச் சீற்றங்களாகினும், தனி மனிதக் கோரிக்கைகளாயினும் விகடன் வாசகர்கள் எப்போதும் ஆதரவுக்கரம் நீட்டுவது வழக்கம்தான். இப்போது பாவேந்தனின் குடும்பத்த்திற்கு உங்கள் பேருதவி பெரும் நம்பிக்கையூட்டுகிறது. வாசகர்களின் நல்லெண்ணத்துக்குத் தலை வணங்குகிறது விகடன்!

* பாவேந்தனுக்கு உதவ விரும்பும் வாசகர்கள், ‘help@vikatan.com’ என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொண்டு தாங்கள் செய்ய விரும்பும் உதவிகள் குறித்துத் தெரிவிக்கலாம்.

* பாவேந்தன் குடும்பத்தினருக்கு உதவி செய்தோர் பற்றிய விவரங்களை அறிய கிளிக் செய்யுங்கள் https://qrgo.page.link/RDyix