Published:Updated:

`மகள் வந்தபிறகுதான் என் பேத்திக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரியும்!'- நளினிக்காகக் காத்திருக்கும் அம்மா பத்மா

ஆ.சாந்தி கணேஷ்

''இரவெல்லாம் என்னை அணைச்சுக்கிட்டே தூங்குவா.''

நளினியும் அவர் அம்மாவும்
நளினியும் அவர் அம்மாவும்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு, அவருடைய மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. நளினி தரப்பில் 6 மாதம் பரோல் கேட்கப்பட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாதம் மட்டுமே வழங்கி உத்தரவிட்டது.

நளினியின் அம்மா பத்மா
நளினியின் அம்மா பத்மா
பா.காளிமுத்து

இதைத்தொடர்ந்து, பரோல் தேதி மற்றும் நளினி தங்கும் இடம், இரண்டு நபர்களின் ஜாமீன் உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறை கேட்க, நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, நளினியின் தாய் பத்மா மற்றும் குடும்ப நண்பர் சத்தியவாணி ஆகியோரின் உறுதிமொழி பத்திரத்தை சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். தவிர, நாலைந்து மாப்பிள்ளைகளின் பொருத்தம் நன்றாக இருக்கிறது. நளினி வெளியே வந்தவுடன் மகளுக்கான மாப்பிள்ளையைத் தேர்வு செய்வார் என்றும் கூறியிருந்தார்.

இந்த வாரம் நளினி எப்போது வேண்டுமானாலும் பரோலில் வெளியே வருவார் என்ற நிலையில், அவருடைய அம்மா பத்மாவிடம் பேசினோம்.

நளினி
நளினி

''புதன்கிழமைதான் என் பொண்ணைப் பார்க்கப் போகிறேன். அதுக்கப்புறம்தான் என் பேத்திக்கு மாப்பிள்ளை யாரு, கல்யாணம் என்னிக்கு அப்படிங்கிற விஷயமெல்லாம் தெரிய வரும்.

எனக்கு சந்தோஷத்துல பேச்சு வரலைம்மா. எப்ப என் பொண்ணைப் பார்ப்பேன். அணைச்சுக்கிட்டுப் படுப்பேன்னுதான் ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சுக்கிட்டு இருக்கேன். அது நடக்கணும்னு கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கேன். நான் வேலைபார்த்த அம்மாங்கிறதால, இரவுல மட்டும்தான் நளினிக்குப் பால் கொடுக்க முடியும். அதனால, 3 வருஷம் வரைக்கும் என் பொண்ணு இரவெல்லாம் என்னை அணைச்சுக்கிட்டே தூங்குவா. அந்த ஞாபகங்களெல்லாம் மனசுக்குள்ள வந்துட்டே இருக்கு. அவளுக்கு எத்தனை வயசானாலும், நான் உயிரோட இருக்கிறவரைக்கும் அவ குழந்தைதானே...'' பல வருடங்களுக்குப் பிறகு மகளைப் பார்க்கப் போவதாலும் பேத்தியின் திருமணத்தை நடக்கப்போவதாலும், மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார் நளினியின் அம்மா.

எத்தனையோ பேருக்குப் பிரசவம் பார்த்தவ நான். என் மக மாசமா இருந்தப்போ, அவளுக்கு ஒரு சுடுதண்ணிகூட வெச்சுக்கொடுக்க முடியாத பாவியாகிட்டேன். நளினிக்கும், அவ மகளைப் பக்கத்துல இருந்து பார்க்க, வளர்க்கக் கொடுத்துவைக்கலை. நான், என் மக, அறிவின் அம்மா அற்புதம் எல்லோரும் பாவப்பட்ட அம்மாக்கள்.
ஆனந்த விகடன் பேட்டியில் நளினியில் அம்மா பத்மா சொன்னது

நளினி பரோலில் வருவது இது இரண்டாவது முறை. 2016-ல் தன் தந்தையின் ஈமக்கிரியைக்காக 12 மணி நேரம் பரோலில் வந்திருக்கிறார்.