மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு, மே 21-ம் தேதியில்தான் ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப்படையைச் சேர்ந்தவர்களால் குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். அவருடைய நினைவுநாளான இன்று, அவரின் மகனான ராகுல் காந்தி ``என் தந்தையை ரொம்ப மிஸ் பண்றேன்" என உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
`என்றென்றும் எங்கள் எங்கள் இதயங்களில்' என்ற சிறிய வீடியோவுடன் பதிவிட்டிருந்த அந்த ட்வீட்டில், ``என் தந்தை ஒரு தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவர், அவரின் கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவின.
அவர் கனிவானவர், இரக்க குணம் உடையவர். அதுமட்டுமல்லாமல் எனக்கும் பிரியங்காவுக்கும் அற்புதமான தந்தை. எனக்கும் பிரியங்காவுக்கும் மன்னிக்கக் கற்றுக்கொடுத்தவர். என் தந்தையை நான் ரொம்ப மிஸ் பண்றேன். நாங்கள் ஒன்றாக இருந்த நேரத்தை அன்புடன் நினைத்துப் பார்க்கிறேன்" என ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன், கடந்த 18-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
