Published:Updated:

கொடநாடு விவகாரம்: `அதிமுக-வினர் அஞ்சுவது ஏன் என்பது புரியவில்லை!’ - கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

``நீதிமன்ற உத்தரவுப்படி கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அதிமுக-வினர் அச்சம்கொள்வது எதனால் என்பது புரியவில்லை” என்கிறார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த ஹெச்.வசந்தகுமாரின் மணிமண்டபம், சிலைத் திறப்புவிழா குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொள்கிறார்.

கொடநாடு விவகாரம் குறித்து பேட்டியளிக்கும் கே.எஸ்.அழகிரி
கொடநாடு விவகாரம் குறித்து பேட்டியளிக்கும் கே.எஸ்.அழகிரி

குமரி மாவட்டத்துக்குச் செல்லும் வழியில் நெல்லையில் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி, கொடநாடு விவகாரம், உள்ளாட்சித் தேர்தல் எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசினார். ”மறைந்த ஹெச்.வசந்தகுமாரின் மணிமண்டபம், சிலை திறப்புவிழாவில் பங்கேற்பதற்காக வருகைதந்திருக்கிறேன். வசந்தகுமார் மறைந்து ஓராண்டு ஆகிறது. தேசியத்துக்கு எடுத்துக்காட்டாகவும், எளிமையாகவும், சிரித்த முகத்துடனும் வாழ்ந்து மறைந்த வசந்தகுமார் நினைவைப் போற்றுகிறோம்.

ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. அதற்காக ஒன்பது மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் பணியாற்றுவது தொடர்பாக கடந்த வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்படி, தேர்தல் நடக்கவிருக்கும் மாவட்டங்களுக்கும் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

கே.எஸ்.அழகிரிக்கு வரவேற்பு
கே.எஸ்.அழகிரிக்கு வரவேற்பு

தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுக-வினர் கூறுவது தவறானது. நூறு நாள்களிலேயே பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது. நிதித்துறை அமைச்சர், நிதித்துறை தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறர். அதில், தற்போதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையைத் தெளிவுபடுத்தியதுடன், நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`இதை ஆளும்கட்சியினர் உள்ளூர் அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது'- கே.எஸ் அழகிரி!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது. அத்துடன், பெட்ரோலுக்கு 3 ரூபாய் வரிக் குறைப்பு செய்து தமிழக அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. கடந்த ஏழு ஆண்டுக்காலமாக பிரதமர் மோடியால் செய்ய முடியாத வரிக் குறைப்பை ஸ்டாலின் செய்து காட்டியிருப்பதைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் தவறில்லை. அதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. நீதிமன்றம் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்கப்போகிறோம். எனவே, எதிர்க்கட்சியினர் அஞ்சத் தேவையில்லை. எதற்காக அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை” என்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``நீங்களே பாரதிய ஜனதாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயர் எனச் சொல்லிவிட்டீர்கள் அதற்கு மேல் நான் என்ன சொல்ல...” என முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு