Published:Updated:

`குழந்தை இல்லாத வலி, எனக்குத் தெரியும்!'- சுஜித் தாயாருக்கு ஆதரவாக இருந்த கேரளப் பெண்

சுஜித் குடும்பம்
சுஜித் குடும்பம்

``ஒரு பெண்ணாக சுஜித்தின் அம்மா மனதளவில் எவ்வளவு வலியுடன் இருப்பார் என்பது எனக்குத் தெரியும்.''

தமிழக மக்களின் ஒட்டுமொத்தப் பார்வையும் கடந்த நான்கு நாள்களாக நடுக்காட்டுப்பட்டி என்ற குக்கிராமத்தின் மீதுதான் இருந்தது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித், `மீண்டு வர மாட்டானா?' எனத் தமிழகமே காத்திருந்தது. கருவில் சுமந்த குழந்தைக்கு தைரியம் ஊட்டியது தாய் கலாமேரியின் வார்த்தைகள். ``அம்மா இருக்கேன், ராசா பயப்படாதே' எனத் தேற்றியது அவரின் வார்த்தைகள். தாய் குரலுக்கு `ஹூம்..' என்ற வார்த்தையை பதிலாக உரைத்தான் சிறுவன் சுஜித். தீயணைப்புத்துறையும் பேரிடர் மீட்புப்படை வீரர்களும் அயராது உழைத்துக் கொண்டிருந்தார்கள்.

இரவு பகலாக மீட்புப்பணிகள் நடந்து வந்தன. குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நான்கு நாள்களாக நடந்து வந்தநிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். விடியற்காலை 4.30 மணி அளவில் சிறுவன் சுஜித் உடல் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சுஜித்தின் உடல் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுஜித்
சுஜித்

சிறுவனின் குடும்பத்தினருக்கு தைரியம் சொல்ல அங்கிருந்தவர்களுக்கு வார்த்தைகள் இல்லை. ``கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். ஆனால், அது கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை. 85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச் சத்தம்தான் என்னை மீட்புப் பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் இணைத்து இயங்க வைத்தது. மனதைத் தேற்றிக்கொள்கிறேன். ஏனென்றால் இனி நீ கடவுளின் குழந்தை” - நான்கு நாள்களாக மீட்புப் பணியில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் உருக்கமான வார்த்தைகள் இவை.

` சுர்ஜித் சடலமாக மீட்கப்பட்ட செய்தி வேதனையை அளித்தது!'- முதல்வர் பழனிசாமி உருக்கம்

இந்த நான்கு நாள்களாக சிறுவனின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல் செயல்பட்டு வந்தார் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர். சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தியைக் கேள்விப்பட்டு கேரளத்திலிருந்து நடுகாட்டுப்பட்டிக்கு வந்து சேர்ந்தார். அந்தப்பெண் தான் சிறுவன் சுஜித்தின் தாயாரை கவனித்து வந்தார். சாப்பாடு கொடுப்பது வெளியில் அழைத்துச் செல்வது என அனைத்துப் பணிகளையும் அவர்தான் செய்தார். சுஜித்தின் சகோதரனையும் கவனித்துக்கொண்டார்.

கேரளப் பெண்ணுடன் சுஜித்தின் அண்ணன்
கேரளப் பெண்ணுடன் சுஜித்தின் அண்ணன்

அந்தப் பெண்ணிடம் பேசினோம். ``நான் ரோஸ்மேரி. கேரள மாநிலம் கோட்டயம்தான் என் சொந்த ஊர். என் கணவர் மதுவுக்கு அடிமையானவர். அவருடைய சித்ரவதைகள் நாளுக்கு நாள் அதிகரித்தது. இது என்ன வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றியது. எனது இரண்டு மகன்களுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து விஷம் குடித்தேன். எனது பிள்ளைகளை தனியே விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல் தான் இந்த முடிவுக்கு வந்தேன்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னையும் குழந்தைகளையும் காப்பாற்றி விட்டார்கள். ஆனால், என் வாழ்க்கை அதன்பின் தடம்புரண்டது. என்னிடம் இருந்தால் நான் குழந்தைகளை கொலை செய்துவிடுவேன் எனக் கூறி நீதிமன்றம் மூலம் குழந்தையை பிரித்துச் சென்றுவிட்டார்கள். இப்போது நான் தனிமையில்தான் இருக்கிறேன். சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தியை டிவி மூலம்தான் தெரிந்துகொண்டேன்.

சடலமாய் சுஜித், கதறும் தாய்
சடலமாய் சுஜித், கதறும் தாய்

ஒரு பெண்ணாக சுஜித்தின் அம்மா மனதளவில் எவ்வளவு வலியுடன் இருப்பார் என்பது எனக்குத் தெரியும். விதியின் பயனாக நான் வேதனையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்பதுதான் என் எண்ணம். நடுக்காட்டுப்பட்டி ஊர் எங்கிருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாது. கோட்டயத்திலிருந்து ரயில் மூலம் திருச்சி வந்தேன். அங்கிருந்து கேட்டுக் கேட்டு இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன். சிறுவனைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்தேன். இத்தனை நாள்களும் சிறுவன் பத்திரமாகக் கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். சுஜித்தின் இறப்பு கடும் வலியைத் தந்துள்ளது. இங்கு எனக்கு ஒரு பெரிய குடும்பம் கிடைத்துள்ளது" என உருக்கமாகப் பேசியவர்,

``அப்பா ஊருதான் கேரளா. அம்மா பொறந்து, வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடுதான். அம்மா தமிழ்நாட்டப் பத்தி பெருமையா அடிக்கடி சொல்வாங்க. ஆனாலும், தமிழ்நாட்டுக்கு வந்ததில்லை. நமக்கு கணவன் உறவைவிடவும் இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது, எனக்கு ஏராளமான தமிழ் உறவுகள் இருக்கிறது என்று. குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இப்போது உணர்கிறேன்'' என்றார் கலங்கிய கண்களோடு.

அடுத்த கட்டுரைக்கு