Published:Updated:

`இனி காஷ்மீர் வருமானமே வேண்டாம்!'- தீவிரவாதிகளின் தாக்குதலால் நிலைகுலைந்த தொழிலாளிகளின் குடும்பம்

காஷ்மீரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது என மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத் தொழிலாளியின் குடும்பம்
மேற்கு வங்கத் தொழிலாளியின் குடும்பம்

காஷ்மீரில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆப்பிள் விளைச்சல் அமோகமாக இருக்கும். ஆப்பிள் பறிக்கும் பணியில் காஷ்மீரிகளும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஈடுபட்டு வந்தனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் ஆகஸ்ட் மாதம் இந்தப் பணிகளுக்காகச் சென்றனர். ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை வேலை இருக்கும் என்பதால் தொழிலாளர்கள் இந்த மூன்று மாதங்களும் அங்கே தங்கிப் பணிபுரிவது வழக்கம்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த நொய்முதீன் ஷேக், முர்சலீம் ஷேக், ரோஃபிக் ஷேக், கம்ருதீன் ஷேக், ஜஹிருதீன் ஷேக் மற்றும் ரோஃபிகுல் ஷேக் ஆகியோர் குல்காம் மாவட்டத்தில் தங்கி ஆப்பிள் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆப்பிள் தோட்டம்
ஆப்பிள் தோட்டம்

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஆப்பிள் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஜஹிருதீன் ஷேக் குண்டுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்குக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

`மேற்குவங்கத்தில் சரியான பணிகள் இல்லை. குறைவான ஊதியம்தான் கிடைத்துவந்துள்ளது. காஷ்மீருக்கு வேலைக்குச் சென்றால் நல்ல ஊதியம் கிடைக்கும்' என்பதால் திருமணம் முடிந்த இரண்டு மாதங்களில் அங்கு சென்றுள்ளார். காஷ்மீர் சென்றதும் மனைவியைத் தொடர்புகொண்ட ஜஹிருதின், `காஷ்மீருக்கு உன்னை சுற்றுலாவுக்கு அழைத்து வருகிறேன்' எனக் கூறியுள்ளார். `காஷ்மீருக்குச் செல்லப்போகிறோம்' என்ற கனவோடு இருந்த பரோமிதாவுக்கு, கணவர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானார் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `காஷ்மீரிலிருந்து கணவர் நலமுடன் திரும்பி வர வேண்டும்' எனப் பிராத்தனை செய்து வருகிறார்.

பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியான நொய்முதீன் ஷேக்கின் தந்தை பேசுகையில், “ காஷ்மீரில் நாங்கள் பணிக்குச் செல்லும் போது தீவிரவாத குழுக்களின் அச்சுறுத்தல்கள் இருக்கும். இங்கிருந்து சென்றுவிடுங்கள் என எச்சரிப்பார்கள். எனது மகன் மற்றும் அவனது நண்பர்கள் அந்தப் பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இருந்தன.

`நீங்கள் காஷ்மீரிகள் இல்லை எங்கிருந்தோ வந்து எங்களின் பணிகளை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள்' என மிரட்டியுள்ளனர். நானும் ஆப்பிள் பறிக்கும் பணியில்தான் ஈடுபட்டு வந்தேன். பயங்கரவாத குழுக்களிடமிருந்து வந்த மிரட்டலையடுத்து நான் அங்கிருந்து கிளம்பினேன். என் மகன் இன்னும் ஊதியம் பெறவில்லை என்பதால் வர மறுப்பு தெரிவித்தான். திங்கள்கிழமை நான் அங்கிருந்து கிளம்பும்போது எனது மகனைக் கடைசியாகப் பார்ப்பேன் என நினைக்கவில்லை” என்றார் கலங்கிய கண்களுடன்.

தீவிரவாதிகள்
தீவிரவாதிகள்
ANI

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜஹிருதீன் தனது தாய் மற்றும் மனைவியை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது தீவிரவாதிகளிடம் தான் சிக்கிய மற்றும் குண்டு காயங்களுடன் அங்கிருந்து தப்பிய நிமிடங்களைப் பற்றி விவரித்துள்ளார்.

அக்டோபர் 3-ம் தேதிதான் ஜஹிருதீன் மேற்கு வங்கத்திலிருந்து காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு சென்ற சில நாள்கள் கழித்து தனது மனைவியை அழைத்துப் பேசியுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவரின் மனைவி, ``நான் இங்க நல்லா இருக்கேன். ஒரு வீடு வாடகைக்கு எடுத்து இருக்கோம். இங்கு நிலைமை நல்லா இருக்கு. பயப்படும்படியாக எதுவும் இல்லை' என்றேன்.

இந்நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஒரு தீவிரவாத குழு, என் கணவர் தங்கியிருந்த வீட்டின் கதவைத் தட்டியுள்ளது. அந்த வீட்டில் இருந்த 6 பேரையும் அருகில் இருந்த மலைப்பகுதிக்கு இழுத்துச்சென்றுள்ளனர். அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளனர். எனது கணவர் மீது மற்றவர்கள் விழுந்ததால் அவர் இன்று உயிர் பிழைத்துள்ளார். குண்டு காயங்களுடன் அங்கிருந்து தப்பி மலைப்பகுதியிலிருந்து சாலைக்கு வந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் என் கணவரை மீட்டு ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருடைய உடலிலிருந்து நான்கு குண்டுகளை அகற்றியுள்ளனர். என் கணவர் பாதுகாப்பாக திரும்பி வருவார் என்று நம்புகிறேன். எனது கணவர் பாதுகாப்பாக வீடு திரும்புவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் . வருமானமே இல்லை என்றாலும்அவரை ஒருபோதும் இனி காஷ்மீருக்கு வேலைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டேன்” எனக் கவலையுடன் பேசியுள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்தத் தாக்குதலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “ காஷ்மீரில் எந்த அரசியல் நடவடிக்கைகளும் இல்லை. அங்கு இப்போது எந்த அரசியல் கட்சிகளும் இல்லை. மொத்த நிர்வாகமும் மத்திய அரசின் கையில் இருக்கிறது. ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகள்தான் காஷ்மீரை கண்காணித்து வருகின்றன.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய தினம் காஷ்மீருக்கு வருகை புரிந்து இருந்தனர். அப்படி இருக்கையில் எப்படி அப்பாவி தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

`உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்' என மம்தா அறிவித்துள்ளார்.