Published:Updated:

அனில் சௌத்ரி: `மற்ற பிரச்னைகளையும் தீர்க்கச் சொல்கிறார்கள்!’ - சொந்த ஊரில் ஹீரோவான அம்பயர்

`நடுவர் சௌவுத்ரியின் முயற்சிக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அவர் எங்களுக்கு ஒரு ஹீரோ. தொற்றுநோய்க்கு மத்தியில், இது ஒரு சிறிய பிரச்னை என்றாலும் இது எங்களுக்கு மிகப்பெரிய உதவி’ - கிராம மக்கள்

அம்பயர் அனில் சௌத்ரி

கிரிக்கெட் போட்டிகளில் நடுவராகப் பணிபுரியும் அனில் சௌத்ரி 20 ஒருநாள் போட்டிகளிலும், 27 டி20 போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றியவர். கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகளுக்கும் இவர் நடுவராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், முதல் போட்டி மழையால் ரத்தானதும் மற்ற இரண்டு போட்டிகள் கொரானா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தன் சொந்த ஊரான டாங்ரோல்க்கு தன் இரண்டு பிள்ளைகளுடன் சென்றிருந்தார். பின் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் இவரின் மனைவியும் அம்மாவும் டெல்லியில் உள்ள வீட்டிலும், இவர் தனது சொந்த ஊரிலும் சிக்கிக்கொண்டார்.

55 வயதாகும் அனில் சௌத்ரி தன் சொந்த ஊரில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் தவித்து வந்தார். அவரின் சொந்த ஊரில் தொலைபேசிக்கு சிக்னல் கிடைப்பதென்பது பாலைவனத்தில் நீர் கிடைப்பது போன்று இருந்தது. இதனால் ஐ.சி.சி-யின் நடுவர்களுக்கான வீடியோ கான்ஃபரன்ஸில் பங்கெடுப்பது அல்லது டெல்லியில் உள்ள தன் மனைவி, அம்மாவுக்கு போன் செய்வது இப்படி எல்லாவற்றுக்கும் போராட வேண்டியிருந்தது. எனவே, சிக்னல் கிடைப்பதற்காக மரங்களின் மீது ஏறியும், வயல்வெளிகளில் நடந்தும், ஊரைத் தாண்டி அலைந்து திரிந்ததையும் சமூக வலைதளங்களில் சில நாள்களுக்கு முன் பதிவிட்டிருந்தார். இந்தச் சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்தது.

அனில் சௌத்ரி
அனில் சௌத்ரி

மேலும் அனில் சௌத்ரி, ``மார்ச் 16. என் இரு மகன்களுடன் நான் இங்கு வந்தேன். சிறிது காலம் கழித்து நான் கிராமதந்துக்கு வந்திருந்தேன். அதனால் ஒரு வாரம் தங்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், நாடு தழுவிய ஊரடங்கு நான் இங்கு வந்த சில நாள்களில் அறிவிக்கப்பட்டது. எனவே, என் சொந்த ஊரிலேயே இப்போது வசித்து வருகிறேன்‌' என்றார்.

மேலும், ``இங்குள்ள மிகப்பெரிய சிக்கல் இணையத்தை பயன்படுத்த‌ முடியாதது, சிக்னல் பிரச்னை. என்னால் யாருடனும் பேசவோ, இணையத்தைப் பயன்படுத்தவோ முடியாது. அதைச் செய்ய நான் கிராமத்துக்கு வெளியே செல்ல வேண்டும், ஒரு மரத்தில் ஏற வேண்டும் அல்லது மாடி வீட்டின் மேல் செல்ல வேண்டும். அப்படி சென்றாலும் நெட்வொர்க் எல்லா நேரத்திலும் கிடைக்காது. அதற்காக காத்திருக்க வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் நெட்வொர்க் கிடைக்கும்' என்று அவர் கூறியிருந்தார்.

நடுவர்களுக்கான ஐ.சி.சி-யின் ஆன்லைன் திட்டங்களை அணுகவும் இணையம் தேவை என்று சௌத்ரி கூறியிருந்தார். அனில் சௌத்ரியின் சமூக வலைதள பதிவு அதிகமாகப் பகிரப்பட்டது. இது செல்போன் நெட்வொர்க் நிறுவனத்தின் காதுகளுக்கும் எட்டியது. அதனால் அனில் சௌத்ரியின் சொந்த ஊரில் இப்போது நெட்வொர்க் வசதி கிடைக்குமாறு செல்போன் நெட்வொர்க் நிறுவனம் ஒன்று முயற்சிகளை எடுத்தது. இந்த நிகழ்வால் அனில் சௌத்ரி சொந்த ஊரில் ஹீரோவாகக் கொண்டப்பட்டு வருகிறார். அந்த ஊர் மக்கள் அனில் சௌத்ரியை புகழ்ந்தும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

நடுவர் டு ஹீரோ அனில்... 

'இந்த முயற்சி எங்கள் கிராமத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. இப்போது பொறுத்தப்பட்டிருக்கும் செல்போன் நெட்வொர்கினால் ஜலந்தரைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் இப்போது ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதை இங்கிருந்தே கவனிக்க முடியும். மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள இப்போது அவர்கள் வயல்களில் உட்கார்ந்து, கொசுக்களை எதிர்த்துப் போராட வேண்டியதில்லை' என்று தன் மகிழ்ச்சியை‌ வெளிப்படுத்தினார்.

மேலும் அனில் சௌத்ரியின் ஊரைச் சேர்ந்த, வங்கி பரிவர்த்தனை பிரிவில் பணிபுரிந்து வரும் ராம்குமார், பணத்தை மாற்றுவதில் சிரமப்பட்டு வந்தார். ஆனால், இப்போது புதிய நெட்வொர்க் வசதி தொடங்கிய பின்னர் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார். ``முன்னதாக, பணத்தை மாற்ற மூன்று-நான்கு நாள்கள் ஆகும், இப்போது சில மணிநேரங்களே ஆகிறது' என்று அவர் கூறினார்.

`இறுதிப் போட்டியில் தவறு நடந்தது உண்மைதான்!' - அம்பயர் தர்மசேனா #CWC2019
அனில் சௌத்ரி
அனில் சௌத்ரி

``நடுவர் சௌவுத்ரியின் முயற்சிக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அவர் எங்களுக்கு ஒரு ஹீரோ. தொற்றுநோய்க்கு மத்தியில், இது ஒரு சிறிய பிரச்னை என்றாலும் இது எங்களுக்கு மிகப்பெரிய உதவி. இங்குள்ள அனைவருக்கும் போன் பயன்படுத்துவதை எளிதாக்கியதற்கு நாங்கள் அனைவரும் நன்றி கூறுகிறோம்' என்று அவர் மேலும் கூறினார்.

' இப்போது எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் என்னிடம் மற்ற எல்லா பிரச்னைகளையும் தீர்க்கச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால், நான் ஒரு சாதாரண நடுவர் மட்டுமே என்பதை அவர்களிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன்' என்றார் சௌவுத்ரி.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு