Published:Updated:

“ஐ.ஐ.டி எல்லோருக்குமான நிறுவனம்!”

காமகோடி வீழிநாதன்
பிரீமியம் ஸ்டோரி
காமகோடி வீழிநாதன்

சுமார் நூறு interaction சென்டர்களை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்

“ஐ.ஐ.டி எல்லோருக்குமான நிறுவனம்!”

சுமார் நூறு interaction சென்டர்களை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்

Published:Updated:
காமகோடி வீழிநாதன்
பிரீமியம் ஸ்டோரி
காமகோடி வீழிநாதன்

ஐ.ஐ.டி மெட்ராஸின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் பேராசிரியர் காமகோடி வீழிநாதன். மாணவராக அக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பேராசிரியராகப் பணிபுரிந்த அவர் இன்று அதன் இயக்குநராக உயர்ந்திருக்கிறார். அவருடைய அனுபவங்கள் குறித்தும் ஐ.ஐ.டி மெட்ராஸ் அவ்வப்போது எதிர்கொள்ளும் சர்ச்சைகள் குறித்தும் உரையாடினேன்.

“மாணவராக, பேராசிரியராக ஐ.ஐ.டி மெட்ராஸோடு இணைந்து இருந்திருக்கிறீர்கள். ஓர் இயக்குநராக உங்கள் திட்டங்கள் என்ன?”

“ஐ.ஐ.டி-யைப் பொறுத்தவரை இயக்குநர், பேராசிரியர், மாணவர்கள் வேறுபாடெல்லாம் கிடையாது. தனிப்பட்ட விஷயங்கள் குறித்தோ பாடம் தொடர்பாகவோ யாரிடமும் ஆலோசிக்கவோ விமர்சிக்கவோ மாணவர்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. இது இனியும் தொடரும். ஒவ்வொரு வருடமும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் வரை JEE தேர்வை எழுதுகிறார்கள். அதில் 15,000 மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரியில் இடம் கிடைக்கிறது. மீதமுள்ளவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக Social Outreach திட்டத்தை மேம்படுத்தவிருக்கிறோம். அதற்கான உதாரணமாக NPTEL (National Programme on Technology Enhanced Learning) திட்டத்தைக் கூறலாம். கடந்த இரண்டு வருடங்களாக பொறியியல் மாணவர்களுக்கு NPTEL பெரும் உதவியாக இருந்துவருகிறது. அதேபோல இணையவழியிலான B.Sc பட்டப்படிப்பு. இதில் சேரத் தகுதித்தேர்வு கிடையாது. எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் சேரலாம். இப்போது 5,000 மாணவர்கள் படிக்கிறார்கள். 50,000 மாணவர்கள் படிக்கவேண்டும் என்பதே இலக்கு. ஐ.ஐ.டி மெட்ராஸ் என்பது பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் எல்லோருக்குமான நிறுவனம்.”

“இயக்குநராகப் பொறுப்பேற்றதும் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்தீர்கள். அவருடன் பேசியதைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?”

“கிராமப்புற அரசுப் பள்ளிகளில் interaction சென்டர் தொடங்குவது குறித்துப் பேசினேன். பள்ளிகளில் ஸ்மார்ட் டி.வி தந்து ஐ.ஐ.டி-யில் உள்ள தன்னார்வலர்கள் மூலம் தினமும் இரண்டு மணிநேரம் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடத்தலாம் என்று பேசினோம். சுமார் நூறு interaction சென்டர்களை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.”

“ஐ.ஐ.டி எல்லோருக்குமான நிறுவனம்!”

“இவ்வளவு வளர்ச்சிகளுக்குப் பிறகும் ஐ.ஐ.டி-கள் கிராமப்புற எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு எட்டாத இடத்தில்தானே இருக்கின்றன?”

“இங்கு படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கையே பத்தாயிரம்தான். ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களைத் தேர்வு செய்ய ஒரு தேர்வை நடத்த வேண்டியிருக்கிறது. தேர்வு என்று வந்துவிட்டால் அதற்கான பாடத்திட்டங்கள், பயிற்சிகளும் வந்துவிடும். ஆனாலும் கிராமப்புறப் பின்னணியில் இருந்து இங்கு யாரும் படிப்பதில்லை என்று மொத்தமாகச் சொல்லிவிட முடியாது. படிக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கை குறைவு. இப்போது இணையவழி பட்டப்படிப்பில் முந்நூறு அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.”

“கல்வி நிறுவனத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திலிருக்கிற ஐ.ஐ.டி மெட்ராஸ், தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருக்கிறதே?”

“சுமார் பத்தாயிரம் மாணவர்கள் படிக்கும் இங்கு ஒவ்வொரு மாணவரிடத்திலும் தனிப்பட்ட முறையில் நாங்கள் எந்த அளவிற்கு கவனம் செலுத்த முடிகிறது என்பது முதல் விஷயம். அதற்கான நிறைய திட்டங்கள் உள்ளன. சிலவற்றைச் செயல்படுத்தியும் உள்ளோம். தற்கொலைகள் நடந்த பின்பு அதைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியே தெரிகின்றன. ஆனால் பல தற்கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன. அதுபற்றி நாங்கள் வெளியே பேசுவதில்லை. மாணவர்களின் நலனுக்காக MITR, Saathi என இரண்டு இயக்கங்களை நடத்தி வருகிறோம். மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து ஆலோசகர்களை வைத்து கவுன்சலிங் வழங்குகிறோம். இரண்டாவதாக, ஐ.ஐ.டி பாடத்திட்டம் சற்று கடினமாகத்தான் இருக்கும். அதற்கு முழுமையாக மாணவர்கள் தயாராக வேண்டும். மாணவர்களின் கவனத்தை பெற்றோர்கள் திசைதிருப்பக்கூடாது. அதுமட்டுமல்ல... பிள்ளைகளின் விருப்பத்தை மீறி தங்கள் விருப்பத்தைப் பெற்றோர்கள் திணிக்கக்கூடாது. மாணவர்களுடனான என் இத்தனை வருட அனுபவத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன்... கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்து இங்கு வருபவர்கள் மனதளவில் வலிமையாக இருக்கிறார்கள்.”

“இந்தியாவில் பொறியியல் கல்வியின் தரம் குறித்துத் தொடர்ந்து குற்றச்சாட்டு நிலவுகிறது. பொறியியல் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கு என்னதான் தீர்வு?”

“பொதுவாக அப்படிக் கூறிவிடமுடியாது. அவர்கள் துறை சார்ந்த படிப்பைச் சிறந்த முறையில் கற்று அதில் நன்கு பயிற்சி பெற்றிருந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும். இணையவழியாக நாங்கள் அறிமுகம் செய்துள்ள புதிய படிப்புகளிலும் இதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.”

“பேராசிரியர்களிடையே சாதியப் பாகுபாடு நிலவுகிறது என்ற குற்றச்சாட்டு ஐ.ஐ.டி மெட்ராஸ் மீது உண்டு. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?”

“அப்படி நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. இங்கே அனைத்துப் பேராசிரியர்களும் ஒரே குடும்பமாகத்தான் பணிபுரிந்துவருகிறோம். பாகுபாடுகள் இருப்பதாகப் புகார்கள் வந்தால் மிகத் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த சமரசமும் செய்துகொள்ளமாட்டேன்.”