Published:Updated:

ஆறாய் ஓடும் சாராயம்!

திருவண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
திருவண்ணாமலை

திணறும் திருவண்ணாமலை காவல்துறை!

தமிழகத்தில் பல ஆண்டுகளாகக் கட்டுக்குள்ளிருந்த கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. உணவுக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் துயரமான சூழலில், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்திருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர் திருவண்ணாமலை மாவட்ட மக்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ‘‘ஜவ்வாது மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் பல ஆண்டுகளாகவே இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஊறல்கள், ஊரடங்கு சமயத்தில் பெருமளவு அதிகரித்து விட்டன. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில், குடிக்கு அடிமையானவர்கள் பலரும் கள்ளச்சாராயத்தைத் தேட ஆரம்பித்ததால், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களும் பெருகிவிட்டனர். மாவட்டத்தில் 24 மணி நேரமும் தங்குதடையின்றி கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது. ஜவ்வாது மலைப்பகுதி, மலை அடிவாரப் பகுதிகளில்தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. விடியற்காலை நேரத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஊரடங்குக்கு முன்பு காய்ச்சி வடிக்கப்பட்ட ஒரு லிட்டர் ‘பியூர்’ சாராயம் 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது, ஒரு லிட்டர் 1,500 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதை வாங்கும் சில்லறை விற்பனையாளர்கள், சம அளவு தண்ணீர் கலந்து, பாலித்தீன் கவர்களில் பொட்டலங்களாகக் கட்டி கூடுதல் லாபம் வைத்து விற்பனை செய்கிறார்கள். போன் செய்தால் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்கிறார்கள். இந்தச் சட்டவிரோதமான செயலில் பெரும்பாலும் இளைஞர்கள்தான் ஈடுபடுகிறார்கள். அதேபோல், இதை வாங்கிக் குடிப்பவர்களிலும் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

சிபி சக்கரவர்த்தி - ஆனந்த் - கந்தசாமி
சிபி சக்கரவர்த்தி - ஆனந்த் - கந்தசாமி

சிலர் பால் கேன்கள், டீ கேன்களில் சாராயத்தை வைத்து விற்பனை செய்கிறார்கள். சிலர் சிறிய சந்துகளில் அமைந்திருக்கும் வீட்டில் வைத்தே விற்பனை செய்கிறார்கள். அதனால், காவல் துறையினரால் இவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில இடங்களில் காவல்துறையினரே லஞ்சம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராய விற்பனையை அனுமதித்துள்ளனர். அது தொடர்பாக சிலர் இடமாற்றமும் செய்யப்பட்டுள் ளனர். செங்கம் அருகே உள்ள பொன்னிதண்டா பகுதியில் சம்சலா என்கிற பெண்ணுக்குச் சொந்தமான தோட்டத்தில் அத்துமீறி நுழைந்த சாராயக் கும்பல் சாராய விற்பனை செய்துள்ளது. அதை தட்டிக்கேட்ட சம்சலாவை, கடுமையாகத் தாக்கியிருக்கிறது அந்தக் கும்பல்’’ என்றனர்.

ஆறாய் ஓடும் சாராயம்!

இதுகுறித்துப் பேசிய சமூக ஆர்வலர் ஆனந்த், ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தைச் சுற்றியும் மலைகளும் காடுகளுமே இருக்கின்றன. அதனால், சாராயம் காய்ச்சுபவர்களுக்கு வசதியாகிவிட்டது. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் மையத்தில் ஜவ்வாது மலை இருக்கிறது. அதனால் இந்த மலையில் காய்ச்சப்படும் சாராயம், இந்த மூன்று மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி, காட்டுப்பகுதியில் உள்ள ஒற்றையடிப் பாதைகள் வழியே கடத்திக்கொண்டு நகருக்குள் வந்துவிடுகிறார்கள். திருவண்ணா மலை நகரில் கள்ளச்சாராயம் கிடைக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் கிடைக்கிறது’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கள்ளச்சாராய விற்பனைகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி-யான சிபி சக்கரவர்த்தியிடம் பேசினோம். ‘‘ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிரடி ரெய்டு நடத்தி கள்ளச்சாராயம், சாராய ஊறல்கள் என மொத்தம் 6,43,269 லிட்டர் அளவுக்குக் கைப்பற்றி இருக்கிறோம். இதில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட டாஸ்மாக் மது பாட்டில்களும் அடங்கும். சாராயக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் 133, நான்கு சக்கர வாகனங்கள் மூன்று ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். மொத்தம் 667 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 616 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு சமயத்தில் தமிழகத்திலேயே அதிகளவு கள்ளச்சாராய வழக்குகள் பதிவுசெய்திருப்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில்தான். மேலும், கள்ளச்சாராய விற்பனையிலும் கடத்தலிலும் ஈடுபட்ட நபர்கள் அதிகளவில் கைதுசெய்திருப்பது, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர்தான். இப்போது, மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பனையும் கட்டுக்குள்தான் இருக்கின்றன’’ என்றார்.

ஆறாய் ஓடும் சாராயம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் பேசியபோது, ‘‘ஜவ்வாது மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகமாக இருக்கிறது என தகவல்கள் வருகின்றன. அதை கட்டுப்படுத்து வதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். காவல்துறை அதிரடியாக இறங்கி சாராய ஊறல்களை அழித்து வருகிறது. கூடியவிரைவில் கட்டுக்குள் கொண்டுவந்து விடுவோம்’’ என்றார்.