Published:Updated:

அரசு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா... அம்பலப்படுத்திய சப் கலெக்டர்!

- சர்ச்சையில் பன்னீர் ஆதரவாளர்...

பிரீமியம் ஸ்டோரி

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் பல நூறு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டிருப்பது அரசுத் தரப்பு ஆய்வில் அம்பலமாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் தொடர்புடையவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாதது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பெரியகுளம் வட்டம், தாமரைக்குளம் அருகே அரசுப் பள்ளி கட்டுவதற்காக 2018-2019 காலகட்டத்தில் பெரியகுளம் - தேனி புறவழிச்சாலையை ஒட்டிய பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலம் தேர்வுசெய்யப்பட்டது. அப்போது அந்த நிலம் குறித்த விவரங்களுக்காக, அரசு ஆவணங்களை ஆய்வு செய்தபோதுதான், சம்பந்தப்பட்ட 1.65 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், தாமரைக்குளத்தைச் சேர்ந்த தீபா என்பவரின் பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, தொடர்ச்சியாகப் புகார்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.

அரசு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா... அம்பலப்படுத்திய சப் கலெக்டர்!

இந்தநிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பெரியகுளம் சப் கலெக்டராகப் பொறுப்பேற்றார் ரிஷப். அவரிடம் தாமரைக்குளம் மக்கள் இது தொடர்பாக மனு அளிக்க... உடனே களமிறங்கிவிட்டார். அவரது ஆய்வில், மேற்கண்ட நிலம் ‘மேனுவல்’ ஆவணங்களில் அரசு நிலம் என்றும், கணினியில் தனியார் பெயரில் பட்டா இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய சப் கலெக்டர், தாமரைக்குளம் பகுதியில் மட்டும் சுமார் 100 ஏக்கர் அரசு நிலத்துக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தார்.

அதேபோல, வடவீரநாயக்கன்பட்டியில், வடபுதுப்பட்டியைச் சேர்ந்த பெரியகுளம் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான அன்னபிரகாஷ், அவரின் சகோதரர் தர்மர், தந்தை வீரணத்தேவர், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களில் அரசு நிலம் பட்டா போடப்பட்டிருப்பதையும் ரிஷப் கண்டுபிடித்தார். அந்த நிலங்களில் பல கோடி மதிப்பிலான மண் அள்ளப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த ஆய்வு குறித்த அறிக்கையை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்திருக்கிறார்.

அன்னபிரகாஷ், முரளிதரன்
அன்னபிரகாஷ், முரளிதரன்

சப் கலெக்டர் ரிஷப்பிடம் பேசினோம்... ‘‘கடந்த 2018-2019 காலகட்டத்தில்தான் அரசு நிலங்கள் முறைகேடாகத் தனியாருக்கு பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அப்போது பெரியகுளம் வட்டத்தில் பணியிலிருந்து, தற்போது தேனி மாவட்டத்தில் வட்டாட்சியர்களாகப் பணிபுரிந்த கிருஷ்ணகுமார், ரத்தினமாலா, மோகன்ராம், சஞ்சீவிகாந்தி, சர்வேயர்கள் சக்திவேல், பிச்சைமணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் சர்வேயர் சக்திவேல், கெங்குவார்பட்டி கிராமத்தில் அரசு நிலத்தைத் தன் மனைவி பெயரில் பட்டா போட்டிருக்கிறார். வடவீரநாயக்கன்பட்டியில் அரசு நிலங்கள் வீட்டுமனைப் பட்டாக்களாக மாற்றப்பட்டு, மூன்று மாடி வீடுகளும் கட்டப்பட்டிருக்கின்றன. விசாரணை இன்னும் முடியவில்லை. மாவட்ட எஸ்.பி-யிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கனிம வளத்துறை, பத்திரப்பதிவுத்துறை, விஜிலென்ஸ் ஆகிய துறைகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நம்மிடம், ‘‘வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் 94.65 ஏக்கர், தாமரைக்குளம் பகுதியில் 56 ஏக்கர் என மொத்தம் 150.65 ஏக்கர் நிலங்களுக்கு முறைகேடாக பட்டா போடப்பட்டுள்ளது. இதில், 94.65 ஏக்கர் நிலத்தில் 27 பேருக்கும், 56 ஏக்கர் நிலத்தில் 42 பேருக்கும் பட்டா கொடுத்துள்ளார்கள். தற்போது இந்த நிலங்கள் மீட்கப்பட்டு அரசு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. வீட்டுமனை விற்பனை செய்யப்பட்ட பத்திரங்களை ரத்துசெய்யவும் மாவட்டப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

போலியாக பட்டா மாறுதல் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் அன்னபிரகாஷிடம் பேசினோம். ‘‘வடவீரநாயக்கன்பட்டியிலுள்ள நிலத்தை, பரம்பரை பரம்பரையாக அனுபவித்துவருகிறோம். அதற்கான ஆவணங்களின் அடிப்படையில்தான் பட்டாவும் வழங்கினார்கள். ஆனால், அருகே இருப்பவர்களின் பொறாமையால் என்மீது புகார் அளித்துள்ளார்கள். இந்த நிலத்துக்கு கணினி சிட்டா கொடுத்த அதிகாரிகள், உரிய வகையில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால்தான் பிரச்னை. இது எனது நிலம்தான் என்பதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அதேபோல எனது நிலத்தை அரசு நிலமாக மாற்றுவதற்கு கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்காலத் தடை பெற்றிருக்கிறேன். நான் ஓ.பி.எஸ் ஆதரவாளர் என்பதால், அதிகாரிகள் எனக்கு பட்டா போட்டுத் தந்ததாகச் சொல்வது உண்மையல்ல’’ என்றார்.

முறைகேடு நடந்தது எப்படி என்று வருவாய்த்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்... ‘‘வருவாய்த்துறையின் நிலத்துக்கான அடிப்படை ஆவணமே அ-பதிவேடுதான். இந்தப் பதிவேட்டில் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி ஆர்.டி.ஓ மட்டுமே திருத்தம் செய்ய முடியும். இந்த பாஸ்வேர்டைப் பயன்படுத்தித்தான் அ-பதிவேட்டில் சர்வே எண் உள்ளிட்ட விவரங்களைத் திருத்தியிருக்கிறார்கள். ரகசிய பாஸ்வேர்டு வெளியே சென்றது பற்றி விசாரித்தால், இன்னும் பல அதிகாரிகள் சிக்குவார்கள்’’ என்றார்கள்.

அரசு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா... அம்பலப்படுத்திய சப் கலெக்டர்!

பொம்மிநாயக்கன்பட்டி, ஏ.வாடிபட்டி, சில்வார்பட்டி, எழுவனம்பட்டி, முருகமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 600 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, மேல்மங்கலம் பகுதியிலுள்ள 50 ஏக்கர் அரசு நிலம், கேரளத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பத்தினர் பெயர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் அரசு நிலம் கூறுபோடப்பட்டிருக்கிறது. இதில் அவரின் ஆதரவாளர் அன்னபிரகாஷ் மீதான புகாரை கலெக்டர் உறுதிசெய்துள்ளார். இதையடுத்து அன்னபிரகாஷ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அரசுத் தரப்பிலோ அவர்மீது எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சில அதிகாரிகளை மட்டுமே சஸ்பெண்ட் செய்துவிட்டு, இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் தப்பவைக்கப்படலாம் என்ற சந்தேகமும் மக்களுக்கு எழுந்துள்ளது. குறிப்பாக, அப்போதைய வருவாய் கோட்டாட்சியராக இருந்த இருவர்மீது நடவடிக்கை எடுக்கப்படாததும் சந்தேகங்களை வலுக்கச் செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு