Published:Updated:

அம்பன்... சமாளித்த ஒடிசா... சிக்கிய மேற்கு வங்காளம்!

அம்பன் புயல்
பிரீமியம் ஸ்டோரி
News
அம்பன் புயல்

மனித உயிரிழப்புகள் ஒடிசாவில் இல்லை. பூகோள ரீதியிலே புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகக்கூடிய மாநிலம் ஒடிசா.

‘அம்பன் புயலின் தாக்குதலால் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய இரு மாநிலங்களும் நிலைகுலைந் துபோயுள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வர்தா புயல் தாக்கியதில் சென்னை மாநகரம் உருக்குலைந்தது. வர்தாவைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வேகம் கொண்டது அம்பன். வர்தா 105 கி.மீ அம்பன் 185 கி.மீ. அப்படியெனில் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை யூகிக்கலாம். ஆனாலும், தாக்குப்பிடித்து மீண்டுவருகிறது ஒடிசா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மாநிலங்களான ஒடிசாவையும் மேற்கு வங்கத் தையும் மே 20-ம் தேதி அம்பன் புயல் கடுமையாகத் தாக்கியது. ஒடிசாவில் பாலாசோர், பத்ரக், கெந்திரபாடா, ஜகத்சிங்பூர், மயூர்பஞ்ச், கட்டாக், ஜஜ்பூர், கியோஜ்கர், கொர்தா, பூரி ஆகிய பத்து மாவட்டங்களில் 9,893 கிராமங்கள், 22 நகரங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. பாலாசோர், பத்ரக், கெந்த்ரபாடா, ஜகத்சிங்பூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்பது லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன. சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

அதே நேரத்தில்,

மனித உயிரிழப்புகள் ஒடிசாவில் இல்லை. பூகோள ரீதியிலே புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகக்கூடிய மாநிலம் ஒடிசா.
அம்பன் புயல்
அம்பன் புயல்

கடந்த காலங்களில் ஒடிசாவைத் தாக்கிய புயல்கள் ஏராளம். பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 1999-ம் ஆண்டு ஒடிசாவின் பாரதீப்பை சூப்பர் புயல் ஒன்று தாக்கியபோது, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2000-ம் ஆண்டு நவீன் பட்நாயக் முதல்வராக வந்த பிறகு, இந்தப் பிரச்னைக்கு விடிவு பிறந்தது. முதல் வேலையாக ஒடிசாவின் இயற்கைப் பேரிடர் நிர்வாகத்துறையை பலப்படுத்தினார் நவீன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தன. கடந்த 18 மாதங்களில் ஐந்து புயல்கள் ஒடிசாவைத் தாக்கின. அவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சொற்பமே. புயல் தாக்கக்கூடிய பகுதிகளிலிருந்து முன்கூட்டியே மக்களை வெளியேற்றுவது, அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை ஒடிசா அரசு சிறப்பாக மேற்கொண்டது. புயலால் சேதமடைந்த மின்சாரம், சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மாநில அரசு தொடங்கியது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ள ஒடிசா மாநில அரசு, இப்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்மூலம் அம்பன் புயலின் பாதிப்புகளையும் வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளது.

அம்பன்... சமாளித்த ஒடிசா... சிக்கிய மேற்கு வங்காளம்!

மேற்கு வங்கத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. சாலைகள், மின்கட்டமைப்புகள் சேதமடைந் துள்ளன. “ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளைவிட, புயல் பாதிப்புகள்தான் அதிகம்” என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பஸ்சிம், மெதினிபூர், ஹௌரா, ஹூக்ளி, வடக்கு 24 பர்கானா மற்றும் தெற்கு 24 பர்கானா ஆகிய மாவட்டங்கள் அம்பன் புயலால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. ஒட்டுமொத்த மேற்கு வங்க மக்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகர் கொல்கத்தா கடுமையாக சேதமடைந்துள்ளது.

அம்பன்... சமாளித்த ஒடிசா... சிக்கிய மேற்கு வங்காளம்!

முதல்வருடன் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற மோடி, இடைக்கால நிவாரணமாக மேற்கு வங்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். ஊரடங்கு காரணமாகப் பல்வேறு மாநிலங்களில் சிக்கிக்கொண்டிருந்த ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் துயரங்களுக்குப் பிறகு, சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருந்தனர். வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்கிற எதிர்காலம் பற்றிய கவலையுடன் இருந்த அவர்களுக்கு கொரோனாவைவிடப் பேரிடியாகத் தாக்கியிருக்கிறது அம்பன் புயல். உரிய நிவாரணம் வழங்குவதுடன், வாழ்வாதாரத் துக்கான வழிகளையும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் அரசியல் விளையாட்டுக்கு மக்களைப் பலிகடா ஆக்கிவிடக் கூடாது.

“அனுபவங்கள் கைகொடுத்தன!” - பர்கானா ஆட்சியர் பேட்டி

மேற்கு வங்கம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் சாகர் கடற்கரையைத்தான் முதலில் தாக்கியது அம்பன் புயல். இந்த மாவட்டத்தின் மக்கள்தொகை சுமார் ஒரு கோடி. 250 கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்டது இந்த மாவட்டம். தீவுகள் மட்டும் 100 உள்ளன. புயலில் 15 பேர் இறந்தனர். நான்கு பேர் மின்சாரம் தாக்கி இறந்தனர். ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நிலைமையைத் திறம்பட சமாளித்தார் பர்கானா மாவட்ட ஆட்சியர் உலகநாதன். புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 2006-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ஜை சேர்ந்தவர். மேற்கு வங்க மாநில கேடர் ஆபீஸர். அவரிடம் பேசினோம்.

மாவட்ட ஆட்சியர் உலகநாதன்
மாவட்ட ஆட்சியர் உலகநாதன்

“கொரோனா தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடிக்கொண்டிருந்தோம். பர்கானா மாவட்டத்தில் 113 கொரோனா பாசிட்டிவ் நபர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் அம்பன் புயல் எச்சரிக்கை அறிவிப்பு வந்தது. மொபைல் செயலிகள், வானிலை ஆராய்ச்சி நிறுவனப் புள்ளிவிவரங்கள் எனத் துல்லியமாகப் புயலின் நகர்வைக் கண்காணித்தோம்.

ஏழு மாதங்களுக்கு முன்பு ‘புல்புல்’ சூப்பர் புயல் தாக்கியது. 13 பேர் இறந்தனர். அப்போது நாங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்கள் இப்போது கைகொடுத்தன. அம்பன் புயலின்போது கடல் அலைகள் ஐந்து மீட்டர் உயரம்வரை எழும்பின. இரண்டு நாள்களுக்கு முன்பே, மின்சாரத்தைத் துண்டித்தோம். புயலின்போது மொபைல் நெட்வொர்க் வேலை செய்யவில்லை. சாட்டிலைட் போன்மூலம் சமாளித்தோம்.

எங்கள் மாவட்டத்தில் 100 தீவுகள் உள்ளன. அவற்றில் சுந்தரவனக்காடுகள் இருக்கின்றன. காடுகளை ஒட்டியுள்ள 50 தீவுகளில் மனிதர்கள் இல்லை. புலிகள் காப்பகம் அது. மீதமிருக்கும் தீவுகளில் இருந்த சுமார் 76,000 பேரை இரண்டு நாள்களுக்கு முன்பே வெளியேற்றினோம். பெரிய தீவுகளில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தோம். மாவட்டம் முழுக்க மூன்று லட்சத்து ஏழாயிரம் பேரை மீட்டு, 115 பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைத்தோம். பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் என்று 1,288 முகாம்களை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தோம்.

வங்க தேச கடல் எல்லையும் நம் கடல் எல்லையும் அருகருகே இருக்கிறது. எல்லையருகில் ‘ஹில்சா’ என்கிற ருசியான மீன்கள் கிடைக்கும். அவை கிலோ 1,500 ரூபாய்வரை விலை போகும். மீனவர்கள் ஒருமுறை சென்றால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்களுடன் கரை திரும்புவார்கள். கடந்த புயலின்போது எங்கள் எச்சரிக்கையை மீறிக் கடலுக்குச் சென்ற பலர் புயலில் சிக்கி இறந்துவிட்டனர். இந்தமுறை அப்படி நடக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தோம். மீன் பிடிக்கத் தடை விதித்தோம். ஆறு ரோந்துப்படையினர் மீனவர்களைக் கண்காணித்தனர். அம்பன் உருவானதும் மீனவ சங்கத்தினருடன் பேசி, கடலுக்குப் போகத் தடைவிதித்தோம்.

எங்கள் மாவட்ட விவசாய நிலங்களில் 30 சதவிகிதம் கடல்நீர் புகுந்துவிட்டது. அதன் பாதிப்புகள் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும். அவர்களுக்கு உதவும் வகையில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த இருக்கிறோம். ஆற்றங்கரையோரத் தடுப்புகள், கடற்கரையோரத் தடுப்புகள் 173 இடங்களில் உடைந்து விட்டன. அவற்றைத் தற்போது சீரமைத்துவருகிறோம்” என்றார்.