சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

பழந்தமிழகத்தில் ஒரு பயணம்!

தங்கம் தென்னரசு
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம் தென்னரசு

கீழடியில் கால் வைத்தவுடன் எனக்குள் ஒரு இனிமையான அதிர்வை உணர்கிறேன். 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் மேம்பட்ட நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள்.

வைகை நதி நாகரிகம் செழித்து விளங்கிய கீழடியில் தொடங்கி, பொருநை நாகரிகம் சிறப்புற்று விளங்கிய சிவகளை வரையில், பழந்தமிழர்களின் நாகரிகம் மற்றும் பண்பாட்டுத் தடம் தேடி சுமார் 230 கி.மீ தூரம் பயணத்தை விகடன் மேற்கொண்டது. தமிழகத் தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி - தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுடன் இணைந்து மேற்கொண்ட இப்பயணத்தில், தமிழகத்தில் நடைபெற்றுவரும் தொல்லியல் ஆய்வுகளின் முக்கியத்துவம், இதுவரை கிடைத்துள்ள தொல்பொருள்கள் சொல்லும் செய்திகள் ஆகியவற்றை நேரடியாகக் கண்டறிந்தோம்.

கீழடியில் காலை 9 மணிக்கு உற்சாகத்துடன் வந்திறங்கிய தங்கம் தென்னரசுவை வரவேற்று, ஏழாம் கட்ட அகழாய்வுக்காகக் குழிகள் தோண்டப்பட்டிருக்கும் தளம் நோக்கி அவருடன் சென்றோம்.

“கீழடியில் கால் வைத்தவுடன் எனக்குள் ஒரு இனிமையான அதிர்வை உணர்கிறேன். 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் மேம்பட்ட நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களைப் பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருக்கிறது” என்றார் தங்கம் தென்னரசு.

சமீபத்தில் கீழடியில் கிடைத்துள்ள தொல்லியல் ஆதாரங்கள் குறித்து ஆச்சர்யத்துடன் என்னிடம் பேச ஆரம்பித்த அவர், “ஏழாம் கட்ட அகழாய்வில் முக்கியமான தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. உறைகிணறு ஒன்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். வாங்க பார்க்கலாம்...” என்று ஆர்வத்துடன் அழைத்துச்சென்றார். ஒரு தொல்லியல் குழிக்குள் அமைச்சரும் நானும் ஏணி வழியாக இறங்கினோம். அங்கிருந்த சுடுமண்ணால் ஆன பல அடுக்கு உறைகிணறு ஒன்றின் மேற்பகுதியில் மீன் சின்னம் வரையப்பட்டிருந்தது.

பழந்தமிழகத்தில் ஒரு பயணம்!

“இது ஒரு முக்கியமான குறியீடு. மீன் என்பது வளத்தைக் குறிப்பது. இங்கு, வளமையான சமூகம் வாழ்ந்திருக்கிறது என்பதைக் குறிப்பதாக மீன் சின்னம் இருக்கலாம்” என்று சொன்ன அமைச்சர், “பக்கத்துக் குழியில் பெரிய கொள்கலன் ஒன்று கிடைத்துள்ளது. அதையும் பார்க்கலாம் வாங்க....” என்றார். “இது, 4.3 மீட்டர் அளவிலான கொள்கலன். நம் கிராமங் களில் ‘குலுதாடி’ என்போம். அதுபோன்ற ஒரு கலன் இது. இவ்வளவு பெரிய கொள்கலன் ஏழாம் கட்ட அகழாய்வில் மட்டுமே கிடைத்துள்ளது” என்றார்.

ஏழாம் கட்ட ஆய்வில் கிடைத்த தொல்பொருள்கள், தென்னை மரங்கள் சூழ்ந்துள்ள அந்த இடத்தில் ஒரு பெஞ்சில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்கு, முத்திரை நாணயங்கள் இருந்தன.

“இந்த முத்திரை நாணயங்கள் கங்கைச்சமவெளியைச் சேர்ந்தவை. இங்கு வந்த வட இந்திய வணிகர்கள் இவற்றை விட்டுச்சென்றிருக்கலாம். கங்கைச்சமவெளி நாகரிகம் கி.மு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், அந்தக் காலகட்டத்தில் தென்னிந்தியாவில் நாகரிகம் எதுவும் இல்லை என்றும் நீண்டகாலமாகச் சொல்லப்பட்டுவந்தது. ஆனால், கங்கைச்சமவெளி நாகரிகத்தின் அதே காலகட்டத்தில், தமிழ் நிலத்திலும் நகர நாகரிகம் இருந்துள்ளது என்பதற்கு இந்த நாணயங்கள் முக்கியமான சான்றுகள்” என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

கீழடியிலிருந்து அமைச்சருடன் கொந்தகை சென்றோம். அது ஈமக்காடு என்பதால் ஏராளமான முதுமக்கள் தாழிகளும் பானைகளும் எலும்புக்கூடுகளும் கிடைத்துள்ளன. ‘ஆதன்’, ‘குவிரன்’ என்று எழுதப்பட்டிருந்த ஓடு ஒன்றை ஆச்சர்யத்துடன் எடுத்துப் பார்த்த தங்கம் தென்னரசு, “இந்தப் பானை ஓடுகளில் காணப்படும் கீறல்கள், சிந்துவெளி வரிவடிவத்தின் நீட்சியாகவும் தமிழி எழுத்துகளுக்கு முன்னோடியாகவும் இருக்கலாம்” என்றார்.

கொந்தகையிலிருந்து அகரத்துக்குச் சென்றபோது, அங்கு அழகிய கொண்டையுடன் கூடிய ஒரு பெண்ணின் தலை போன்ற சுதைச் சிற்பம் ஒன்று இருந்தது. “இதைத்தான், ‘இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ள தமிழ் மகள்’ என்று நான் ட்வீட் செய்தேன்” என்று புன்னகைத்தார் அமைச்சர். 1 செ.மீ அகலம்கொண்ட ஒரு தங்க நாணயத்தில் ஒருபுறம் சூரியன், சிங்கம் உருவங்களும் மறுபுறத்தில் 12 புள்ளிகளும் இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகள் கொண்ட உருவமும் பொறிக்கப்பட்டிருந்தன. அதை ‘வீரராயன் பணம்’ என்று சொல்கிறார்கள். நுண்கற்காலக் கருவி ஒன்றும் அகரத்தில் கிடைத்துள்ளது. கையடக்க அளவில் கல் போன்று காணப்படும் அந்தப் பொருள், விலங்குகளை அறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டி ருக்கலாம் என்கிறார்கள்.

“கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகியவை முன்பு ஒரே ஊராக இருந்திருக்கலாம். இங்கு ஒரே பண்பாடுதான் இருந்திருக்கிறது. அது, சங்க காலப் பண்பாடு. கி.மு இரண்டாம் நூற்றாண்டு அல்லது முதலாம் நூற்றாண்டுக் காலத்தில், வைகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு அல்லது ஏதோ ஓர் இயற்கைச்சீற்றம் காரணமாக இங்கிருந்து மக்கள் இடம் பெயர்ந்திருக்கலாம். அந்தக் காரணத்தைக் கண்டறிய இந்தப் பகுதிகளிலிருந்து மண் எடுத்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம்’’ என்றார், அமைச்சருடனான நமது பயணத்தில் இணைந்திருந்த தமிழகத் தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம்.

சுமார் மூன்று மணி நேர நெடுஞ்சாலைப் பயணத்துக்குப் பிறகு பொருநை நதிக்கரையில் அமைந்துள்ள கொற்கையைச் சென்றடைந்தோம்.

“இங்கு 1968, 1969 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வின் அடிப்படையில், இது 2,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட துறைமுக நகரம் என்பது உறுதிசெய்யப்பட்டது. இங்கு, முத்துக்குளித்தல் முக்கியத் தொழிலாக நடைபெற்றுள்ளது. ரோம் உள்ளிட்ட மேலைநாடுகளுடன் வணிகத் தொடர்புகள் இருந்ததற்கு நாணயங்கள் உட்பட பல சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு, சங்குகளும் சங்கு வளையல்களும் நிறைய கிடைத்துள்ளன” என்றார்.

கொற்கையிலிருந்து பொருநை நாகரித்தின் மற்றொரு தளமான சிவகளைக்குச் சென்றோம்.

“இங்கு 40-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. ஈமக்காடுகள் மட்டுல்லாமல், வாழ்விடப் பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கிடைத்துள்ள பானைகள் கறுப்பு சிவப்பு நிறத்தால் ஆனவை. வாள்கள், கூர்முனைக் கருவிகள் உட்பட இரும்பால் ஆன ஆயுதங்கள் கிடைத்துள்ளன. இது, இரும்புக் காலகட்டத்துக்கு முன்பாக இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாகப் பார்க்கப்படுகிறது” என்று கூறிய தங்கம் தென்னரசு, “முதல்வர் ஸ்டாலின் கூறியதைப் போல, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை இனி தமிழ் நிலத்திலிருந்துதான் தொடங்கி எழுத வேண்டும்” என்றார்.

******

பழந்தமிழகத்தில் ஒரு பயணம்!

தொன்மைக்கு சாட்சியங்கள்

சமீபத்தில் மீண்டும் தமிழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடியின் முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு முடிவுகளின் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் பேசினேன்.

“தமிழ் நிலத்தில் நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரங்கள் முதன்முறையாகக் கீழடியில் கிடைத்தன. இங்கு கட்டடப் பகுதிகளே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால், அதிக அளவிலான கட்டடப் பகுதிகள் இங்கு கிடைத்தன. இவை, சங்க காலத்தை உறுதி செய்வதற்கான தடயங்களாக அமைந்துள்ளன. 110 ஏக்கரில் அந்தத் தொல்லியல் மேட்டில் இதுவரை 10-12 ஏக்கர் அளவில்தான் ஆய்வு நடைபெற்றுள்ளது. ஆய்வுகள் இன்னும் விரிவடையும்போது, புதிதாகப் பல ஆதாரங்கள் கிடைக்கும். சங்க காலத்தை முறையாகக் கணக்கிட வேண்டியுள்ளது. அதற்கான இடமாகக் கீழடி இருக்கிறது. கீழடியில் வரலாறு பின்னோக்கிப் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏ.எஸ்.ஐ ஆய்வு மேற்கொண்டபோது கி.மு 3-ம் நூற்றாண்டு வரை போனது. தற்போது தமிழகத் தொல்லியல் துறையின் ஆய்வுகளில், கி.மு 6-ம் நூற்றாண்டுக்குப் போகிறது. நமக்குக் கிடைக்கும் கரிமப்பொருள்களை ஆய்வுசெய்யும்போது, இங்கு நகர நாகரிகம் எப்படி உருவானது, எப்படி வளர்ந்தது, எப்படி அழிந்தது என்பதை அறிய முடியும்” என்றார்.