Published:Updated:

தமிழகத் தடங்கள்!... 2000 - 2020

தமிழகத் தடங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகத் தடங்கள்

ஜூ.வி 2020

2000 -த்தின் குழந்தைகள் நம் சமூகத்தை வழிநடத்தக் காத்திருக்கிறோம். Y2K வைரஸ், உலக அழிவு எனப் பல பிரச்னைகள் சூழ்ந்திருக்க, 21-ம் நூற்றாண்டை நாம் வரவேற்றிருந்தோம். இதோ கண்முன்னால் வேகமாய்ச் சுழல்கிறது காலச்சக்கரம். 19 ஆண்டுகள் கடந்து, 2020-ம் ஆண்டிலும் கால் பதித்துவிட்டோம். புதுப்புது கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் என அசத்தும் தமிழகம், கூடவே புதுப்புது பிரச்னைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பிரச்னைகளைத் திரும்பிப் பார்ப்பது, எதிர்காலத்தில் அதற்கான தீர்வுகளை உருவாக்க உதவும். கடந்த 19 ஆண்டுகளில் இப்படியாக தமிழ்நாட்டு மக்கள் சந்தித்த பிரச்னைகளைப் பற்றிய ஒரு பார்வை இது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுனாமி

சுனாமி
சுனாமி

2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உருவான நிலநடுக்கத்தால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை வாரிச் சுருட்டியது சுனாமி. பல்லாயிரக் கணக் கானோர் உயிரிழந்தனர். அதுவரை சுனாமி பற்றியே அறிந்திராத தமிழ்நாடு, சுனாமியை முன்னரே கண்டறிய பல்வேறு நடவடிக்கை களை எடுக்கத் தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து

கும்பகோணம் பள்ளி தீ விபத்து
கும்பகோணம் பள்ளி தீ விபத்து

கும்பகோணத்தில் உள்ள பள்ளியொன்றில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 93 குழந்தைகள் உயிரிழந்தனர். தீயில் துடிதுடித்து பலியான பிஞ்சுகளின் கதறல் கேட்டு தமிழகமே கதறி அழுதது.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகளைச் செய்வது குறித்து பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அவற்றைச் சரிவரப் பின்பற்றுவது குறித்தும் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாம் சில காலம்தான்!

கரைந்தது ஈழக்கனவு!

கரைந்தது ஈழக்கனவு!
கரைந்தது ஈழக்கனவு!

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. முள்ளிவாய்க்காலில் கரைந்தது ஈழக்கனவு.

இலங்கை இழைத்த போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்டு கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. அன்றாட வாழ்வின் தேவைகளும், அடுத்தடுத்து வரும் பிரச்னைகளும், அரசியல் சூதாட்டமும் கைகோத்துக் கொண்டு ஈழத்துக்கான உரிமைக் குரல்களை நெறித்துப்போட்டன.

இடைவிடாத இயற்கைப் பேரிடர்கள்!

இடைவிடாத இயற்கைப் பேரிடர்கள்!
இடைவிடாத இயற்கைப் பேரிடர்கள்!

2011-ல் கடலூர் மாவட்டத்தில் தானே புயல், 2016-ல் வர்தா புயல், 2017-ல் தென் தமிழகத்தில் ஒகி புயல், 2018-ல் டெல்டா பகுதியில் கஜா புயல் என அடுத்தடுத்த பேரிடர்களால் துவண்டுபோனது தமிழகம். பேரிடர் மேலாண்மையில் தமிழகம் பலவீனமடைந் திருந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

2015-ல் சென்னையைத் தாக்கிய மழை வெள்ளம், நகரத்தையே ஸ்தம்பிக்கச் செய்தது. இதையடுத்து நீர்நிலை பராமரிப்பு, ஆக்கிரமிப்பு அகற்றம் எனப் பல்வேறு கோரிக்கைகள் வலுத்தன. ஆனாலும் வெள்ளம் வடிந்தபின் வழக்கம்போல், எல்லாம் மறக்கப்பட்டது.

நீட் தேர்வு... நீளும் போர்!

நீட் தேர்வு... நீளும் போர்!
நீட் தேர்வு... நீளும் போர்!

2015-ம் ஆண்டு அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ என்கிற ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. மாணவி அனிதாவின் மரணம் நீட் தேர்வு எதிர்ப்புக்கான குரலாகவும் கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மாநில உரிமைகளுக்கான குரலாகவும் மாறியிருக்கிறது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான பொங்கலின் கொண்டாட்டம் ஜல்லிக்கட்டு. அதற்கு கட்டுப்பாடு போட்டது மத்திய அரசு. காளைகளைக் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் வைத்ததால், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை மக்களின் பண்பாட்டைப் பாதித்து, நாட்டு மாடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும் என 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்தது. ஒருவாரம் அறப்போராட்டங்களால் நிரம்பிவழிந்தது மெரினா கடற்கரை. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.

தலைநகரில் தமிழக விவசாயிகள்!

தலைநகரில் தமிழக விவசாயிகள்!
தலைநகரில் தமிழக விவசாயிகள்!

தண்ணீர்ப் பற்றாக்குறை, மழைப்பொழிவு குறைவு, பருவ நிலை சீர்குலைவு, இயற்கைப் பேரிடர்கள், வங்கிக்கடன் மறுப்பு, வேளாண் துறையின் ஊழல்கள் எனக் கடந்த 20 ஆண்டுகளும் விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைந்தது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள டெல்லி சென்று பலவகையிலும் போராடினர் விவசாயிகள். ஆனால், எந்தவொரு தீர்வையும் காணாமலேயே அந்தப் போராட்டம் அணைந்து போனது தான் வேதனை!

13 பேரை கொலை செய்த அரசு!

13 பேரை கொலை செய்த அரசு!
13 பேரை கொலை செய்த அரசு!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 2018-ம் ஆண்டு தீவிரமடைந்தது. போராட்டத்தின் நூறாவது நாள் பேரணியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். தனலாய்க் கொதித்தது தமிழகம். ஸ்டெர்லைட் ஆலைக்குச் சீல் வைத்தது தமிழக அரசு. வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், சுட உத்தரவிட்டது யார் என்கிற மர்மத்துக்கு இப்போதுவரை விடை கிடைக்கவில்லை.

புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை

கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு உருவாக்கித் தந்த புதிய கல்விக்கொள்கை, மத்திய அரசின் ஒப்புதலுடன் மக்கள் கருத்துகளைப் பெற வெளியிடப்பட்டது. இதற்குப் பல இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பினாலும், தமிழகத்திலிருந்து கிளம்பிய எதிர்ப்பு நெருப்பானது. ‘அனைத்துத் தரப்பினரின் கருத்து களையும் கேட்டறிந்த பின்புதான் புதிய கல்விக்கொள்கை செயல்படுத்தப்படும்’ என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அதற்கு முன்பாகவே தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையில் குறிப்பிடப் பட்டிருந்தபடி 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்து, குழப்பங்களின் கூடாரமாகியிருக்கிறது பள்ளிக் கல்வித்துறை.

அடங்காத ஆணவக்கொலைகள்!

அடங்காத ஆணவக்கொலைகள்!
அடங்காத ஆணவக்கொலைகள்!

இந்தியாவின் பூதாகரமான சாதியப் பிரச்னை தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. 2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் 81 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது சமீபத்திய ஓர் ஆய்வறிக்கை. மதங்களால் பிரிக்க முடியாத தமிழர்களை சாதிய வன்மம் பிரித்துக்கொண்டே இருக்கிறது!