Published:Updated:

`நடந்து செல்பவர்களை நீதிமன்றம் கண்காணிக்க முடியாது..!’ - பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்து தர வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைவாய்ப்பு இழந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கால்நடையாக பயணமாகி வருன்றனர். இந்தப் பயணங்களின்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

லாரியில் பதுங்கி பயணம் மேற்கொண்ட தொழிலாளர்கள்
லாரியில் பதுங்கி பயணம் மேற்கொண்ட தொழிலாளர்கள்

இந்தநிலையில், சாலைகளில் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், `தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. மகாராஷ்டிராவில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த 14 தொழிலாளர்களின் நிலையும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

`சூட்கேஸில் தூங்கும் சிறுவன்; உணவுக்கு சண்டையிடும் தொழிலாளர்கள்!' - லாக்டெளன் பரிதாபங்கள்

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், ``சாலையில் நடந்து செல்பவர்களை யாரும் தடுக்காமல் இருக்கிறார்கள். நாம் என்ன செய்ய முடியும். ரயில் தண்டவாளங்களில் உறங்குபவர்களை எப்படித் தடுப்பது. ஒவ்வொரு வழக்கறிஞர்களும் செய்தித்தாள்களைப் படித்துவிட்டு அதுகுறித்த தகவல்களை பெறுகிறீர்கள்.

உங்களின் அறிவு முற்றிலும் செய்தித்தாள்களில் வரும் துணுக்குகளின் அடிப்படையாகக் கொண்டது. இந்த விவகாரத்தில் மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என ஏன் கேட்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு சிறப்பு பாஸ்களைத் தருகிறோம். உங்களால் அரசாங்க உத்தரவுகளை நிறைவேற்ற முடியுமா? யார் நடந்து செல்கிறார்கள். யார் நடந்து செல்லவில்லை என்பதை நீதிமன்றம் கண்காணிக்க முடியாது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, `அரசானது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்து சேவையை தொடங்கிவிட்டது. சாலைகளில் நடந்து செல்லும் மக்கள் அவர்களின் முறை வரும்வரை காத்திருக்காமல் நடந்து செல்கின்றனர். மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி அனைவருக்கும் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு