சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

சின்ன மாமியாருக்கு தாலி கட்டிய கணவன்... உறவுக்கு அர்த்தம் கேட்கும் மனைவி...

ராஜேஷ்குமார் - மேரி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேஷ்குமார் - மேரி

விழிபிதுங்கும் வேலூர் போலீஸ்!

விசித்திரமான ஒரு குடும்பப் பஞ்சாயத்தை முடித்துவைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது வேலூர் போலீஸ்!

வேலூர், ஊசூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் மனைவி அனுசுயா. இந்தத் தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகன், 11 வயதில் ஒரு மகள் இருக்கின்றனர். டோர் டிசைனர் வேலை செய்துவரும் ராஜேஷ்குமார், மனைவியின் சித்தி மேரியுடன் ஏற்பட்ட ‘பழக்கத்தால்’ அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அனுசுயா, கணவன், சித்தி ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். ‘காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ எனக் கருதியவர், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி அலுவலகங்களிலும் முறையிட்டுவருகிறார்.

அனுசுயா
அனுசுயா

பிரச்னையை அறிந்துகொள்ள அனுசுயாவிடமே பேசினோம். ‘‘ஒருநாள் நைட்டு நல்லா குடிச்சுட்டு தள்ளாடிக்கிட்டே வீட்டுக்கு வந்த என் கணவர், வாசல்லயே குப்புற விழுந்துட்டார். அப்போ, அவர் சட்டை பாக்கெட்டுல இருந்த செல்போனை எடுத்து, கால் ரெக்கார்டிங்கைக் கேட்ட எனக்குப் பேரதிர்ச்சியா இருந்துச்சு. என் சித்தியும், என் கணவரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி செக்ஸுவலா அதுல பேசியிருந்தாங்க.

‘என்னைக் கொன்னு, கை கால்களைக் கட்டி, பக்கத்துல இருக்குற பாழடைஞ்ச கிணத்துல போட்டுடலாம்’னு அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதும் அதுல பதிவாகியிருந்துச்சு. விடிஞ்சதும், வீட்டுப் பெரியவர்கள்கிட்ட அந்த ஆடியோக்களைப் போட்டுக் காட்டினேன். அவங்க கண்டிச்ச பிறகும்கூட, ரெண்டு பேரும் திருந்தலை. மாறாக, ‘விஷயம் வெளிய தெரிஞ்சு போயிடுச்சு. இனிமே ஏன் ரகசியமாக சந்திக்கணும்’னு என் சித்தியோட இன்னும் நெருக்கமாகிட்டார் என் கணவர். ஒருநாள் என் முன்னாடியே, ரெண்டு பேரும் ஒட்டுத்துணிகூட இல்லாம கட்டில்ல கிடந்தாங்க. என் புருஷனைவிடவும் என் சித்தி வயசுல மூத்தவர்.

சின்ன மாமியாருக்கு தாலி கட்டிய கணவன்... உறவுக்கு அர்த்தம் கேட்கும் மனைவி...

திடீர்னு ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிப்போகப் பார்த்தாங்க. நான் பிடிச்சு, வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் செஞ்சேன். போலீஸ்காரங்க எச்சரிக்கை செஞ்சு, அனுப்பிவெச்சாங்க. ஆனா, திரும்பவும் என் சித்தியைக் கூட்டிக்கிட்டுப்போய் ஒரு கோயில்லவெச்சு தாலி கட்டிட்டார். ரெண்டு பேர் மேலயும் என் வீடு இருக்குற அரியூர் போலீஸ் ஸ்டேஷன்ல பலமுறை கம்ப்ளெயின்ட் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கலை. இப்போ, ரெண்டு பேரும் ஒரே வீட்டுலதான் குடும்பம் நடத்துறாங்க. நான், என் அப்பா வீட்டுக்கு வந்துட்டேன்.

சமீபத்துல மறுபடியும் என்னைத் தேடி வந்தவரு, ‘உன் சித்திகூட அட்ஜஸ்ட் பண்ணி சேர்ந்து வாழு’னு எனக்கு அட்வைஸ் பண்ணினாரு. பசங்களிடமும், ‘இனிமே பாட்டினு கூப்பிடாதீங்க. பெரியம்மானு கூப்பிடுங்க’னு சொல்லிக் கொடுத்தார். கேட்கவே அறுவறுப்பா இருந்துச்சு. வர மாட்டேன்னு நான் மறுத்துட்டேன். அதனால, என்கிட்டருந்து பையனை மட்டும் இழுத்துக்கிட்டுப் போயிட்டார். இப்போ என்னையும் பொண்ணையும் கொலைசெய்யப் பார்க்கிறார். பார்க்குற இடத்துல வழிமறிச்சு சரமாரியாக அடிக்கிறார்’’ என்றார் கண்ணீர்மல்க.

அனுசுயாவின் குற்றச்சாட்டு குறித்து அவரின் கணவர் ராஜேஷ்குமாரிடம் கேட்டோம். ‘‘நான் அவள் சித்தியைத் திருமணம் செய்துகொண்டது உண்மைதான். இருவரும்தான் சேர்ந்து வாழ்கிறோம். மற்றபடி நான் கொலைசெய்யப் பார்ப்பதாக அனுசுயா சொல்வது பொய். அவர் என்னைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக, காவல் நிலையம் முதற்கொண்டு கலெக்டர் அலுவலகம் வரை போய் புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார். முறைப்படி நீதிமன்றத்தின் மூலம் அனுசுயாவை விவாகரத்து செய்துவிட்டேன். விவாகரத்து வழக்கு விசாரணையின்போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால், அறிவிப்பு வெளியிட்டு நீதிமன்றமும் விவகாரத்து வழங்கிவிட்டது.

‘விவாகரத்து பெற்றதே தனக்குத் தெரியாது’ என்று சொல்லி, ஒவ்வோர் இடமாகப் புகார் கொடுத்துக்கொண்டிருக்கிறார். போலீஸாரும் என்மீது புதிது புதிதாக வழக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுகூட முன்ஜாமீன் பெற்றுத்தான் வெளியில் இருக்கிறேன். என்னை நிம்மதியாக வாழவிட மறுக்கிறார்கள். நானும் அவள்மீது முதலமைச்சரின் தனிப் பிரிவுக்குப் புகார் அனுப்பியிருக்கிறேன்’’ என்றார் பதிலடியாக.

மேரி
மேரி

இந்த ஒரு வழக்காலேயே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது அரியூர் காவல் நிலையம். விசாரணை அதிகாரியான எஸ்.ஐ சின்னப்பனிடம் பேசினோம். ‘‘இந்த ஒரு குடும்பத்தால் எங்கள் ஸ்டேஷனே படாதபாடு படுகிறது. அனுசுயாவின் கணவர் ராஜேஷ்குமாரைப் பிடித்து வந்து விசாரித்து, எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறோம். அதற்குள்ளாக அனுசுயா எல்லா இடங்களுக்கும் போய் புகார் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ராஜேஷ்குமாரை மறுபடியும் விசாரணைக்கு அழைத்ததற்கு, ‘ஸ்டேஷன் முன்பு தீக்குளிப்பேன்; மருந்து குடிப்பேன்’ என்று எங்களையே மிரட்டுகிறார். இவர்கள் பஞ்சாயத்தை எப்படி முடிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. உயரதிகாரிகளிடமும் இந்த பதிலைத்தான் சொல்லியிருக்கிறோம்’’ என்றார் புலம்பலாக.

பிரச்னையைக் கேட்ட நமக்கும் தலை கிறுகிறுக்கவே, ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்றபடியே காவல் நிலையத்திலிருந்து நடையைக் கட்டினோம்!