Published:Updated:

`எங்களோடு வாழ்ந்து வருகிறார்' - இறந்த அம்மாவுக்கு சிலை வைத்த 13-வது மகன்!

85 வயதில் உயரிழந்த சிவகலைக்கு அவரின் மகன் சரவணன் தனது வீட்டின் முன் கோயில் கட்டி அம்மாவின் சிலையை வைத்து பூஜை செய்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, மணலி, ஹரிகிருஷ்ண பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரின் மனைவி சிவகலை (85). இந்தத் தம்பதியினருக்குப் பத்து மகன்கள், மூன்று மகள்கள். ராமதாஸ் ஆயில் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் ராமதாஸ் உயிரிழந்தார். அதனால் குடும்ப சுமைகளை சிவகலை சுமக்கத் தொடங்கினார். டெய்லராக இருந்த சிவகலை அந்த வேலையோடு கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து தன் குழந்தைகளை வளர்த்தார். ஒவ்வொருவருக்காக திருமணம் செய்து வைத்திருக்கிறார். இவரின் 13-வது குழந்தை சரவணன். இவர் மணலி பகுதியில் கோழிக்கறி கடை நடத்திவருகிறார்.

சிவகலை சிலைக்கு பூஜை செய்யும் மகன்
சிவகலை சிலைக்கு பூஜை செய்யும் மகன்
`காலத்துக்கும் நினைவா இருக்கும்!' - அப்பாவுக்கு சிலை எடுத்த நடிகர் சரவணன்

அம்மா மீது அதிக பாசம் கொண்ட சரவணன், தனது திருமணத்துக்குப்பிறகும் சிவகலையை அன்பாக கவனித்துக் கொண்டார். 85 வயதிலும் சிவகலை தன்னுடைய வேலையை தானே செய்து கொள்வார். மிகவும் ஆக்டிவாகவே இருந்து வந்தார். இந்தச் சமயத்தில்தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிவகலைக்கு 12-வதாக பிறந்த கோட்டீஸ்வரன் என்ற மகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் மாதத்தில் இறந்தார். இந்தத் தகவல் சிவகலைக்கு உறவினர்கள் தெரியப்படுத்தினர். அதனால் அதிர்ச்சியடைந்த சிவகலை மனதளவில் பாதிக்கப்பட்டார்.

மகன் இறந்த துக்கம் தாளாமல் இருந்தநிலையில் கடந்த வருடம் செப்டம்பர் 28-ம் தேதி சிவகலை உயிரிழந்தார். அவருக்கான இறுதி அஞ்சலியை மகன்களும் மகள்களும் உறவினர்களும் செய்தனர். அதன்பிறகு ஒவ்வொருவரும் தங்களின் வழக்கமான வேலைகளில் பிஸியாகி விட்டனர். ஆனால் கடைசி மகன் சரவணனோ அம்மாவை நினைத்து மனவேதனையடைந்தார். அம்மா வாழ்ந்த இடத்தில் அவருக்கு சிலை வைக்க சரவணன் முடிவு செய்தார். இதற்காக மாமல்லபுரத்தில் உள்ள சிற்பி ஒருவரை சரவணன் சந்தித்து தன்னுடைய ஆசையைக் கூறினார். உடனே சிவகலையின் போட்டோவை சிற்பியிடம் கொடுத்த சரவணன் சிலை செய்வதற்கான பணத்தையும் கொடுத்தார்.

அம்மா சிலையின் அருகில் மகன் சரவணன்
அம்மா சிலையின் அருகில் மகன் சரவணன்

இதையடுத்து சிவகலையின் மார்பளவு சிலை தயாரானது. அந்தச் சிலையை மணலி வீட்டுக்கு எடுத்துவந்த சரவணன், வீட்டின் முன் பகுதியில் கட்டியிருந்த சிறிய கோயிலில் அதை வைத்தார். அம்மாவின் முதல் ஆண்டு நினைவு தினமான நேற்று அந்தச் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. இதில் சிவகலையின் பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி என அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 70 பேர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சரவணன் கூறுகையில், ``என்னுடன் பிறந்தவர்கள் 12 பேர். அதில் 5 பேர்தான் உயிரோடு இருக்கிறோம். எங்களுடைய அம்மா சிவகலைத்தான் எங்களை எல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தார். அம்மா எங்களை விட்டு பிரிந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு சிலை வைத்து மரியாதை செலுத்த முடிவு செய்தேன். இந்த சிலை மூலம் என்னுடைய அம்மா எங்களோடு வாழ்ந்து வருகிறார். அவருக்கு தினமும் உணவை படைத்துவிட்டு சாமி கும்பிட்ட பிறகே நாங்கள் சாப்பிட்டு வருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு