Published:Updated:

பிடிபட்டது T23 புலி; முடிவுக்கு வந்தது வனத்துறையினரின் 21 நாள் போராட்டம்; கடைசி நேரப் பரபரப்பு!

அந்தப் புலியின் கால் தடத்ததைப் பின்தொடர்ந்து புலி பதுங்கியிருந்த பகுதியைச் சுற்றி வளைத்தனர்.

உடலில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக வேட்டைத் திறன் குறைந்த டி-23 என எண்ணிடப்பட்ட 13 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கி வந்தது. கடந்த 2 மாதங்களில் 20-க்கும் அதிகமான கால்நடைகளையும் சந்திரன், பசவன் ஆகிய இரண்டு நபர்களையும் தாக்கிக் கொன்றதோடு, பசவனின் உடல் பாகங்களையும் தின்றது புலி. இந்த புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் சவாலான பணியை கடந்த 21 நாள்களாக வனத்துறையினர் மேற்கொண்டனர்.

கேரளா மற்றும் கர்நாடக வனத்துறையும் தமிழக வனத்துறையோடு கைக்கோத்து தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. 3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகள், கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள், கால்நடை மருத்துவர்கள், 'டிரேக்கர்ஸ்' எனப்படும் புலியின் நடமாட்டத்தை பின்தொடரும் வனத்துறையின் சிறப்புக் குழு என பெரும் பட்டாளமே இந்தப் புலியின் நடமாட்டத்தைப் பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

காயத்துடன் தென்பட்ட புலி
காயத்துடன் தென்பட்ட புலி
T23 புலியைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடக்கும் மசினகுடியில் சுற்றுலாவுக்குத் தடை விதிக்காதது ஏன்?

முதுமலை ஓம்பெட்டா பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த டி23 புலியின் உருவம் பதிவாகியிருந்தது .மொத்த குழுவும் அந்த பகுதியைச் சுற்றிவளைத்து துப்பாக்கி மூலம் புலிக்கு மயக்க ஊசி செலுத்த முயன்றனர். ஆனால், அங்கிருந்து புலி தப்பியது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மசினக்குடி தெப்பக்காடு சாலையோர பகுதியில் புலியின் நடமாட்டம் தென்பட்டது. கும்கி யானைகளுடன் கால்நடை மருத்துவர்கள் சென்று மயக்க ஊசி செலுத்த முயன்றபோது அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தது புலி. அதிகாலை 4 மணி வரை புலியைத் தேடியும் தென்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை மசினக்குடி சோதனைச் சாவடி அருகில் அந்த புலி சாலையைக் கடந்தது.

புலி
புலி

கண் இமைக்கும் நேரத்தில் புலி புதருக்குள் சென்று மறைந்தால் வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்த முடியாமல்போனது. அந்த புலியின் கால் தடத்ததைப் பின்தொடர்ந்து புலி பதுங்கியிருந்த பகுதியைச் சுற்றி வளைத்தனர். 2 மணியளவில் மசினக்குடி அருகில் பதுங்கியிருந்த புலியின் இருப்பிடம் உறுதி செய்யப்பட்டு கால்நடை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியைச் செலுத்தினர். அரை மயக்கத்தில் இருக்கும் புலியை கூண்டுக்குள் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புலியின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த பின்னரே டி23 புலி எங்கு கொண்டுசெல்லப்படுவது என முடிவு எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு