Published:Updated:

இன்பாக்ஸ்

`பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை தாய்லாந்தில் ஆரம்பித்த மணிரத்னம், முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பினார்.

பிரீமியம் ஸ்டோரி

மும்பை விமானநிலையத்தில் சன்னி லியோனுடன் செல்ஃபி எடுக்க இரண்டு ரசிகைகள் முயல, கைகளால், ‘மாட்டேன்’ என்று சைகை செய்கிறார் சன்னி. விடாத ரசிகைகள், அவருடைய பாதுகாவலர்களையும் தாண்டி செல்ஃபி எடுக்கப்போகிற நேரத்தில் சட்டென்று முகத்தில் மாஸ்க் போட்டுக்கொள்கிறார்.

Sunny Leone
Sunny Leone

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, ‘நம்மைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கக்கூடாது. கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ என்று, தன் செல்ஃபி மறுப்புக்கான காரணத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார் சன்னி. விழிப்புணர்வு!

மல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்திற்கான வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. `கைதி’ படம் ரிலீஸாவதற்கு முன்பே கமல் தயாரிப்பில் கமிட்டான லோகேஷ் கனகராஜ்தான், இந்தப் படத்தை இயக்குகிறார். அதற்காக ரஜினியைச் சந்தித்துள்ள லோகேஷ், `மாஸ்டர்’ பட வேலைகளுக்குப் பிறகே இந்தப் பட ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது. கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தில், கமல் கண்டிப்பாக ஒரு கேமியோ ரோலில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. அபூர்வ நண்பர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காதல், பிரிவு, போதைப்பழக்கம், சிறுநீரக அறுவை சிகிச்சை என 27 வயதுக்குள் வாழ்க்கையின் பல மேடு, பள்ளங்களைப் பார்த்தவர் ஹாலிவுட்டின் செலீனா கோம்ஸ். தன்னுடைய பாடல் வரிகளாலும் ‘ஹஸ்கி’ குரலாலும் உலக மக்களை ஈர்த்த செலீனா, தன் முன்னாள் காதலன் ஜஸ்டின் பீபரைப் பற்றி எழுதிய ‘Lose You to Love Me’ எனும் பாடல் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்த நேர்காணல் ஒன்றில், ‘என் காதல் உறவில் ஏராளமான வலிகள் இருந்தன. அந்த வலிகளை உணர்வதற்கான பக்குவத்தையே தற்போதுதான் அடைந்திருக்கிறேன். வலிகள் பல இருந்தாலும் என்னுள் அழகிய உணர்வை ஏற்படுத்திய உறவு அது. அதை என்றைக்கும் நான் மறக்கமாட்டேன்’ என்று உருகியிருக்கிறார். என்றென்றும் காதல்!

த்திய அரசின் சில கொள்கைகளை விமர்சித்து வரும் பாலிவுட்டின் தனிக்குரல் நகைச்சுவைக் கலைஞர் குணால் கம்ரா, சமீபத்தில் விமானத்தில் செல்லும்போது உடன் பயணித்த அர்னாப் கோஸ்வாமியிடம் அவரது நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து உரையாட முயன்றிருக்கிறார். அர்னாப் தவிர்க்க அதை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். குணாலை ‘மனநிலை சரியற்றவர்’ என்று அர்னாப் கமென்ட் செய்ய இவற்றைத் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் குணால். தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் குணாலை ஆறு மாதத்துக்கு தங்களது விமானங்களில் பயணிக்கத் தடை என அறிக்கை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மூன்று விமான நிறுவனங்கள் இதேபோல குணால் பயணிக்கத் தடை அறிவித்துள்ளது. ராகுல்காந்தி இதைக் கடுமையாகக் கண்டித்து “கேமரா தங்களை நோக்கித் திரும்பும்போது பதிலளிக்க, முதுகெலும்புள்ள பத்திரிகையாளர்கள் தயாராக இருக்கவேண்டும்” என்று விமர்சித்துள்ளார். வாயை மூடிப் பேசவும்!

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டுச் சிறையில் இருக்கிறார். நீண்டு வளர்ந்த தாடியுடன் உள்ள அவரது புகைப்படம் சமீபத்தில் வெளியாக, காரணமின்றிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல குரல்கள் ஒலித்தன. ஸ்டாலின், மம்தா பானர்ஜி என எதிர்க்கட்சித் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்க, அவருக்கு ஷேவிங் செய்துகொள்ள ரேசர் பரிசளிப்பதாக நக்கலாக, அஃபீஷியல் அக்கவுன்டில் ட்வீட் செய்து வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டது தமிழக பா.ஜ.க. பலரும் எதிர்க்க உடனே டிலீட் செய்தனர். கொஞ்ச நேரத்திலேயே வேறு சில பக்கங்களில் அது பரவியது. பிளேடு ஜனதா பார்ட்டி!

கிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் தருணங்களில், யாரேனும் ‘ஸ்வீட்’ கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் சாப்பிடுகிறார் 95 வயதைத் தொட்டிருக்கும் தோழர் நல்லகண்ணு! சர்க்கரை, ரத்தக் கொதிப்பு என எந்தவிதச் சிக்கலுமின்றி இப்போதும் ஆரோக்கியம் காத்து வரும் தோழருக்கு மீன்குழம்பும் வாழைப்பழமும் பிடித்த உணவு! ஆனால், ‘வாழைப்பழம் பொட்டாசியம் சத்தை அதிகரித்துவிடுகிறது; மீன்குழம்பு, அளவுக்கதிகமாகச் சாப்பிட வைத்துவிடுகிறது’ என்ற காரணங்களுக்காக இந்த உணவுகளை இப்போது கொஞ்சம் தள்ளிவைத்திருக்கிறார். ‘`பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்ட எங்களைப் போன்றவர்கள் எப்போதும் மக்கள் பிரச்னைகளை மட்டுமே சிந்திப்பதாலோ என்னவோ, என்னைப் போன்ற தோழர்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்கிறோம்’’ என்று ஆரோக்கிய ரகசியம் பகிர்கிறார் தோழர் நல்லகண்ணு. நல்லாருங்க!

இன்பாக்ஸ்

பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாஃபெரி சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு ஒரு பெண் “நீங்கள் ஐரோப்பாவுக்குச் செல்லுங்கள். எங்கள் தேசத்தில் துரோகிகளுக்கு இடமில்லை” என்றிருக்கிறார். பதிலடி கொடுத்த ஜாவேத் ஜாஃபெரி “உங்கள் தேசமா? எப்போது வாங்கினீர்கள்? கடைசியாக நான் அரசியலமைப்பைப் படித்தபோது, அது ‘ஜனநாயகம், சமத்துவம் மற்றும் கருத்து வேறுபாட்’டைப் பற்றிப் பேசியது. நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. தயவுசெய்து அப்டேட் செய்யவும்” என்று கோபமாகக் கலாய்த்துள்ளார். மாத்தினாலும் மாத்துவாய்ங்க!

ன்பாலினக் காதலை மையமாகக் கொண்டு பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம், ‘சுப மங்கல் ஸ்யடா சாவ்தன் (Shubh Mangal Zyada Saavdhan). படத்தின் ஹீரோ, மூன்று பிலிம்பேர் விருதுகள் பெற்ற நடிகர் ஆயுஷ்மான் குரானா. ஆயுஷின் மனைவி தாகிரா காஷ்யப், ‘எங்கள் 8 வயது மகன், தன்பால் உறவு குறித்து அறிந்திருக்கிறான் என்பதை அறிந்துகொண்டேன். மேற்கொண்டு, ‘அப்படி இருப்பது ஓ.கேதானே..?’ என்று அதைப் பற்றிய அவன் எண்ணத்தை நான் கேட்டபோது, ‘நாட் ஓ.கே ஆக இதில் என்ன இருக்கிறது?’ என்றான். எனக்குக் கண்ணீரும் பெருமையுமாக இருந்தது’ என்று உருகியுள்ளார். சூப்பர் குடும்பம்!

மூக ஊடகங்களில் வைரலாகிற சில விஷயங்கள் வெகு சில மணி நேரத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிடுகின்றன. அன்றைய தினம் ட்ரெண்டிங்காக உள்ளதை நல்ல நோக்கத்தில் தாங்களும் பயன்படுத்திக்கொள்வதை அமெரிக்கக் காவல்துறை அடிக்கடி செய்யும். சமீபத்தில் அமெரிக்கப் பாடகி Dolly Parton பகிர்ந்த லின்கட்இன், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டின்டர் ஆகியவற்றின் புரொபைல் கொலாஜ் #TheDollyPartonChallenge என்ற ஹேஷ்டேகில் ட்ரெண்டாக, அமெரிக்காவைச் சேர்ந்த க்ளிவ்லாண்ட் போலீஸார், தேடப்பட்டுவரும் குற்றவாளி ஸ்காட் மிஸ்சேவின் புகைப்பட கொலாஜைப் பகிர்ந்து, அவரைப் பற்றிய தகவல் கிடைத்தால் காவல்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று பதிவிட்டது. வழக்கத்தைவிட இந்த பாணி ஹிட்டடித்திருக்கிறதாம்.

நிறைய ஊர் சுற்றுகிறவர்களுக்கு போனஸ் கொடுத்து கௌரவிக்கப்போகிறது இந்திய அரசு. ஆமாம், தங்களுடைய மாநிலங்களுக்கு வெளியே ஒவ்வொரு ஆண்டும் 15 சுற்றுலாத் தலங்களுக்கு விசிட் அடித்தால் இனி பரிசு கொடுக்கப்போகிறார்கள் என்று அறிவித்திருக்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சர் ரூபீந்தர் ப்ரார். மத்திய அரசின் சுற்றுலாத்துறை இணையதளத்தில் நாம் பயணித்த சுற்றுலாத் தல விவரங்களையும் படங்களையும் பதிவு செய்பவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. நாட்டுக்கு வெளியே சுத்துறவங்களுக்குன்னா மோடிக்கே கொடுக்கலாம்!

`பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை தாய்லாந்தில் ஆரம்பித்த மணிரத்னம், முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பினார். தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்காக, தோட்டாதரணியின் தலைமையில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் செட் போடப்பட்டு வருகிறது.

த்ரிஷா
த்ரிஷா

இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, `ஜெயம்’ ரவி மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். லிஸ்ட்டு பெரிசாகிட்டே போகுது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு