Published:Updated:

இன்பாக்ஸ்

விஜய்சேதுபதி நடிகர் மட்டுமல்ல. கதைகள் சொல்வதும் எழுதுவதும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

பிரீமியம் ஸ்டோரி

* இனி அஜித்தின் சம்பளம் ஒரு நாளுக்கு 1 கோடி ரூபாய். 60 நாள் கால்ஷீட் என்றால் 60 கோடி ரூபாய் சம்பளம். ஒரு படத்துக்கு என இருந்த தனது சம்பளக் கணக்கை இப்படி ஒரு நாளுக்கு என மாற்றியிருக்கிறார் ‘`ஒருநாள் சம்பளம் எனும்போதுதான் அந்த நாளை வீணடிக்காமல் எடுக்கவேண்டிய காட்சிகள் அத்தனையையும் எடுத்து முடிப்பார்கள்’’ என்று சொல்லியிருக்கிறாராம் அஜித். கோடிகளில் ஒருவர்!

* விஜய்சேதுபதி நடிகர் மட்டுமல்ல. கதைகள் சொல்வதும் எழுதுவதும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஏற்கெனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்காகக் கதை எழுதியவர் லாக்டெளனில் அடுத்த கதையோடு தயாராகியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதியின் கூத்துப்பட்டறை நண்பரான விமல் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ‘குலசாமி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்கவும் இருக்கிறார் விசே! அடுத்து இயக்குநர்தானே?

* ‘மாஸ்டர்’, ‘ஜகமே தந்திரம்’, ‘சூரரைப் போற்று’ என இந்த மூன்று படங்களும்தான் ஷூட்டிங், போஸ்ட் புரொடக்‌ஷன் என எல்லாம் முழுமையாக முடிந்து ரிலீஸுக்குக் காத்திருக்கும் பெரிய பட்ஜெட் படங்கள். இந்தப்படங்களைப் பெரிய தொகைக்கு ஓ.டி.டி நிறுவனங்கள் வாங்கத்தயாராக இல்லை என்பதோடு இந்தப்படத்தின் ஹீரோக்களும் தங்கள் படங்கள் ஓ.டிடி-யில் ரிலீஸ் ஆவதை விரும்பவில்லை. இதனால் தீபாவளியோ, பொங்கலோ எப்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் இந்தப்படங்கள் உடனடியாக ரிலீஸுக்கு வருமாம். தியேட்டரை எப்போ சார் திறப்பீங்க?

* சுசீந்திரனின் முதல் படமான ‘வெண்ணிலா கபடிக்குழு’வில் நடிக்கவேண்டியவர் ஜெய். இவரின் கால்ஷீட்டுக்காக 2 மாதம் காத்திருந்த பின்னர்தான் அடுத்த ஹீரோக்களைத் தேடினார் சுசீந்திரன். இப்போது சுசீந்திரனிடம், ஜெய் தனக்காக ஒரு படம் பண்ணும்படி கேட்க, சுசீந்திரன் சொன்ன கதை ஜெய்க்குப் பிடிக்க, படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. படத்தில் முக்கிய கேரக்டரில் பாரதிராஜா நடிக்கவிருக்கிறார். ஜெயிக்கணும்!

* பீகாரைச் சேர்ந்த ஜோதி குமாரி, ஊரடங்கின்போது உடல்நலம் குன்றிய தன் தந்தையுடன் ஹரியானாவின் குருகிராமில் மாட்டிக்கொண்டார். அங்கிருந்து 1,200 கிலோ மீட்டர் உள்ள பீகாருக்கு சைக்கிளிலேயே தன் தந்தையைக் கூட்டிக்கொண்டு வந்தடைந்தார். ஊடகங்களில் இவ்விஷயம் பரவ, பல இடங்களிலும் பாராட்டுகள். தேசிய சைக்கிளிங் அகாடமி அவருக்கு முறையான பயிற்சி அளிப்பதற்கு முன்வந்தது. இப்போது நான்கு நண்பர்கள் ஒன்றிணைந்து இவரது பயணத்தைத் திரைப்படமாக எடுக்க முன்வந்துள்ளார்கள். “புலம்பெயர்வோர்களின் குரலாக இருக்கும் இப்படிப் படத்தில் ஜோதி குமாரியே நடிக்கவும் இருக்கிறார். படத்தின் பெயர் ‘ஆத்ம நிர்பார்’ ” என்கிறார் இயக்கவிருக்கும் ஷைன் கிருஷ்ணா இன்ஸ்பிரெஷன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* ரோஜர் ஃபெடரர், மகேந்திர சிங் தோனி... கொரோனாவால் கம்பேக் கொடுக்காமலே ஓய்வுபெற்றுவிடுவார்கள் எனக் கணிக்கப்பட்டிருக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதல் வரிசையில் இருக்கிறார்கள். இருவருமே இந்த ஆண்டோடு 39 வயதை நிறைவு செய்கிறார்கள். ஐபிஎல், கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் இந்த ஆண்டு நடக்காது என்பதால் 40 வயதில் இவர்கள் கம்பேக் கொடுப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள். மிஸ் யூ மாஸ்டர்ஸ்

அஜித்
அஜித்

* அமேசானுக்காக வெப்சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. அதற்காக, இயக்குநர் அனுபவ் சின்ஹா, பழைய இதழொன்றில் பிரியங்கா பற்றிய பாராட்டுச் செய்தி ஒன்றைக் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறார். அதற்கு நன்றி சொன்ன பிரியங்கா ‘Thappad nahi.. kaam se maaro’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘அறையவெல்லாம் வேண்டாம்... செய்யும் வேலையில் அடிக்கலாம்’ என்று பொருள் வரும் இதில் ‘தப்பட்’ என்பதை பாலிவுட்டில் ஏறுமுகம் காட்டும் டாப்ஸியைக் குறிப்பிடுகிறது என்று திரி கொளுத்திப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். சண்டை போடாதீங்க கேர்ள்ஸ்

* ஹைதராபாத் நகரில் உள்ள விநாயகர் சிலை ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் ஒரு அடி கூட்டப்படும். 1954-ல் ஓர் அடி சிலையில் ஆரம்பித்து சென்ற வருடம் 66 அடியில் மிகப்பெரும் சிலையாக வடிவமைத்தார்கள். கோவிட் 19-ன் காரணமாக இந்த வருடம் சிம்பிளாகக் கொண்டாட முடிவெடுத்து, 27 அடி உயரத்தில் மட்டும் வைக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். 11-ம் நாள் நடக்கும் ஊர்வலத்தில் கடந்த வருடம் 40 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். இந்த வருடம் ஒன்லி ஆன்லைன் அறிவித்துவிட்டனர். டிஜிட்டல் கணேஷா

* காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம். விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், வீட்டைச் சுற்றி ஏராளமான மரங்களை வளர்க்கிறார். தேக்குக்கு இணையானது மகோகனி என்ற மரம். அதையும் நிறைய வளர்க்கிறார். ‘மகோகனி’ மரம் வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் பயன்படுவதோடு கப்பல் கட்டும் பணியிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கருவிகள், பென்சில்கள் செய்யவும் ஏற்றது இம்மரம். மகோகனியானவரே

* நித்யாமேனனின் ஒவ்வொரு படம் ரீலீஸாகும்போதும் உடல்கேலிக்கு உள்ளாக்கப்படுவார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப் பொங்கியெழுந்துள்ள நித்யா, ‘‘பாடி ஷேமிங் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், குண்டானவர்களைக் கேலி செய்பவர்கள் ‘நீ ஏன் இப்படி வெயிட் போட்டுக்கொண்டே போகிறாய்’ என்று கேட்பதே இல்லை. குண்டாவதற்கு ஆரோக்கியப் பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம் இல்லையா? என்னைப் பற்றிய பாடி ஷேமிங்க்கு எல்லாம் நான் வருத்தப்படவும் மாட்டேன், அழவும் மாட்டேன். நான் உடல் எடை போடுவதற்கான காரணத்தையும் சொல்லமாட்டேன். சினிமா உலகத்தைப் பொறுத்தவரை நான் என் திறமையை வெளிப்படுத்துகிறேன். என்னைவிட அது அதிகமாகவே பேசும்’’ என்று சீறியிருக்கிறார். ரெளத்திரமும் அழகு!

நித்யாமேனன்
நித்யாமேனன்

* ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம், இனி தங்கள் பிராண்ட் பெயரில் ‘ஃபேர்’ என்பது இருக்காது என்று அறிவித்ததை அடுத்து, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் உட்பட பல நிறுவனங்களும் சிவப்பை அழகாக முன்னிறுத்தும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து விலக ஆரம்பித்திருக்கின்றன. இந்த நேரத்தில், ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ நாயகி சாந்திப்ரியா தன் சரும நிறத்தை பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் கேலி செய்த ஒரு சம்பவத்தைப் பேட்டியொன்றில் நினைவுகூர்ந்திருக்கிறார். ‘` `இக்கி பே இக்கா’ ஷூட்டில், `சாந்திப்ரியாவின் காலில் பெரிய ரத்தக்கட்டு இருக்கிறது’ என்று அக்‌ஷய் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க, நானும் என் கால்களை செக் செய்தபடி இருந்தேன். ஆனால், அவர் என் கால் முட்டியின் கறுப்பு நிறத்தைக் கேலி செய்கிறார் என்று தெரிந்தது. மிகவும் அவமானமாக உணர்ந்தேன் என்றாலும், இன்று அக்‌ஷய் என் சிறந்த நண்பர். நான் மீண்டும் நடிக்க விரும்புவது தெரிந்து அவர்தான் உதவுகிறார்’’ என்றிருக்கிறார். கலர்ல என்ன இருக்கு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு