Published:Updated:

இன்பாக்ஸ்

Keerthi Suresh
பிரீமியம் ஸ்டோரி
News
Keerthi Suresh

ஜோதிகா, த்ரிஷா, நயன்தாரா என ஹீரோயின் சென்ட்ரிக் படங்களின் தொடர்ச்சியாக கீர்த்தி சுரேஷும், காஜல் அகர்வாலும் களமிறங்குகிறார்கள்.

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் ‘பெண் குயின்’ என்ற படத்தில் நடிக்க, ‘கவலை வேண்டாம்’ இயக்குநர் டிகே இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். களத்தில் கண்மணிகள்!

இன்பாக்ஸ்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், வெள்ளைக்குதிரைமீது வீற்றிருக்கும் புகைப்படம், உலக அரசியலில் கடந்த வாரத்தின் மிக முக்கியமான புகைப்படம். கட்டுப்பாடுகளின் கூடாரமாகத் திகழும் வட கொரியாவில் உள்ள புனித மலையான பெக்டு மலையின் உச்சிக்கு குதிரையில் சவாரி செய்திருக்கிறார் அதிபர் கிம். ஒவ்வொருமுறை இந்த மலைப்பயணம் முடித்து வரும்போதும் கிம் அதிமுக்கிய முடிவு ஒன்றை எடுப்பார், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தேங்கும் நிலையில், மீண்டும் அணு ஏவுகணை சோதனையைத் தொடங்கும் முடிவினை கிம் எடுப்பாரோ என அச்சம் கொண்டிருக்கிறது உலகம். குதிரைவீரன் பயணம்!

Kim Jong-un
Kim Jong-un

பிரதமராக இருந்த காலத்தில் வாயே திறக்காத பிரதமரென்று அனைவராலும் கிண்டலடிக்கப்பட்ட மன்மோகன் சிங்தான் தற்போது மத்திய அரசுக்குக் கடுமையான சவாலாக இருக்கிறார். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தற்போது சிறைக்குள் அடைபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் மன்மோகன் சிங்கையே நம்பியுள்ளது. ‘‘மத்திய அரசு, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கான சிந்தனையிலேயே இருக்கிறது. 2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்ட வேண்டுமானால் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 10-12% இருக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சரிவுநிலையில் உள்ளது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுமென்ற நம்பிக்கையே இல்லை’’ என்று கடுமையாகக் குற்றம்சுமத்தியுள்ளார். மன்மோகன் சிங்கையே பேச வெச்சுட்டீங்களே!

14 வருடங்களாகக் காதலித்து 15வது ஆண்டில் திருமணம் முடித்திருக்கிறார் டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரஃபேல் நடால். 33 வயதான நடால், சிஸ்கா பெரெல்லோ எனும் தனது பள்ளிக்காலத் தோழியை மணந்திருக்கிறார். பலவருடக் காதல் என்றாலும் டென்னிஸ் மைதானங்களில் சிஸ்காவைப் பார்க்க முடியாது. காரணம் வணிகம் படித்து இன்ஷூரன்ஸ் துறையில் சின்சியராக வேலைபார்த்துக்கொண்டிருந்தார் சிஸ்கா. வாழ்த்துகள் மக்களே!

பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில்தான் இசையமைப்புப் பணிகளைச் செய்துவந்தார் இளையராஜா. ஆனால், புதுப்பிப்புப் பணிகள் நடக்கவேண்டும் என பிரசாத் நிர்வாகம் ஸ்டூடியோவை மூட, இளையராஜா எதிர்க்க, விவகாரம் கோர்ட்டு வரை செல்லவிருந்தது. இதற்கிடையே இளையராஜா நேரடியாக பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களிடம் பேசி சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார். ஸ்டூடியோ திறக்கப்பட்டுவிட்டது! ஆல் இஸ் வெல்!

ஒன்ப்ளஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒன்ப்ளஸ்7T மற்றும் 7T ப்ரோ ஆகிய போன்களுக்கு வெறித்தனமாக விளம்பரம் செய்துவருகிறது. உலக அளவில் போனை பிரபலப்படுத்த ஹாலிவுட் பிரபலம் ராபர்ட் டெளனி ஜூனியரை விளம்பரத் தூதராக நியமனம் செய்திருக்கிறது. இந்தியாவிலும் பாலிவுட், டோலிவுட் எனப் பல பகுதிகளிலும் சினிமாப் பிரபலங்களை வளைத்துப்போட்டிருக்கிறது ஒன்ப்ளஸ். ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் தற்போது இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள். இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்குச் சென்றால் ஒன்ப்ளஸ் 7T சீரிஸ் போன்களைப் பற்றிய போஸ்ட்களைப் பார்க்கமுடிகிறது. ஒன்ப்ளஸ் ஒன் டூ!

அஜித்
அஜித்

‘வலிமை’ என்கிற டைட்டிலோடு தொடங்கியிருக்கிறது அஜித் - வினோத் படம். ஆகஸ்ட் மாதமே தொடங்கி யிருக்கவேண்டிய ஷூட் விசா காரணங்க ளால் தள்ளிப்போனது. படத்தில் உண்மை யிலேயே கார் ரேஸராக நடிக்கிறார் அஜித். தென்னாப்ரிக்கா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங் நடைபெற விருக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கலாம்! வா தல... வா தல!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. படத்தின் தலைப்பை ரஜினி பிறந்தநாளின்போது அறிவிக்கவிருக்கிறார்கள். இதில் ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிக்கிறார்கள். அப்ப கட்சி?!

ஒருபக்கம் நடித்துக்கொண்டே இன்னொருபக்கம் இயக்கிக்கொண்டிருக்கிறார் பாரதிராஜா. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாகக் கொண்டு ‘நவம்பர் 8’ எனப் படம் இயக்குகிறார் இயக்குநர் இமயம். விதார்த், சமுத்திரக்கனி இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் தேனப்பன் வில்லனாக நடிக்கிறார்! இது தேசத்தின் சோகக்கதை!