
தர்பார் படத்திற்குப் பிறகு சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும்,
இருபத்தைந்து வயது மகனை சாலை விபத்திற்கு பலிகொடுத்த ஒரு தந்தை செய்த செயல், மகாராஷ்டிர மாநிலத்தை நெகிழச் செய்திருக்கிறது. அம்மாநிலத்தின் தாமோ நகரைச் சேர்ந்த லக்கி தீட்சித், சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரின் தந்தை மகேந்திர தீட்சித், மகனின் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஹெல்மெட் பரிசளித்திருக்கிறார். ‘சாலை விதிகள் பற்றியும், ஹெல்மெட் அணிவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என் வாழ்நாள் லட்சியம்’ என்றிருக்கிறார். வணக்கங்கள்!
ஆறாவது முறையாக பாலன் டி ஓர் விருது வென்றுள்ளார் பார்சிலோனா கால்பந்து அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸி. லிவர்பூல் வீரர் வான் டைக், மெஸ்ஸி இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், வெறும் 7 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்துள்ளார் அர்ஜென்டினாவின் லிட்டில் மேஜிஷியன். 1996-ம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது இந்த ஆண்டுதான். இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மூன்றாவது இடம்தான். மெஸ்ஸி கெத்து!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், அடுத்த படத்தை உடனே தொடங்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறாராம் விஜய்.

இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது வெற்றிமாறனைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விஜய். ஜி.வி.பிரகாஷ்குமார் உட்பட ‘அசுரன்’ படத்தின் டெக்னிக்கல் டீம் அப்படியே `விஜய் - 65’ படத்திலும் இருக்குமாம். இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக கலாநிதி மாறனும் கலைப்புலி எஸ்.தாணுவும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். வா அசுரா!
அபுதாபியில் இளவரசர் ஷேக் முகமது, பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தார். வரிசையாக நின்று சிறுமிகள் கைகொடுத்துக்கொண்டிருந்தனர். ஆயிஷா என்ற சிறுமி கைகொடுத்தபோது, இளவரசர் கவனிக்காமல் சென்றுவிட்டதால் சிறுமியின் முகம் வாடிப்போனது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, ஆயிஷாவின் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார் இளவரசர். திடீரென்று இளவரசரைக் கண்ட ஆயிஷா மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார். ஆயிஷாவின் தலையில் முத்தமிட்டு இளவரசர் வாழ்த்தினார். சுட்டிகளின் இளவரசன்!

தர்பார் படத்திற்குப் பிறகு சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும், நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதிக்கு மேல் ஆரம்பமாக இருக்கின்றன. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில்தான் நடக்கவிருக்கின்றன. ஸ்பாட்...செம ஹாட்!
‘மெஹந்தி சர்க்கஸ்’ நாயகி ஸ்வேதா திரிபாதி, முன்னணி இந்திய செஃப் ரன்வீர் பிராரின் ‘You Got Chef’d’ எனும் வெப் சீரிஸில் கைகோத்திருக்கிறார். செஃபோடு இணைந்து பல ரெசிபிக்கள் செய்து அசத்திக் கொண்டிருப்பவரின் ஃபேவரைட் டிஷ் தாய்லாந்து உணவுகளாம்.

“எனக்கு சமையல் அவ்வளவாகத் தெரியாது, ஆனால், நன்றாக சாப்பிடத் தெரியும். ஓர் உணவை எப்படியெல்லாம் மாற்றி சமைக்கலாம் என்பது குறித்த வேடிக்கையான தந்திரங்களை இந்த சீரிஸ் வழியாகக் கற்றுக்கொண்டேன். சினிமாவுக்கும் சமையலுக்கும் ஒற்றுமை இருக்கிறது தெரியுமா? சமையலில் எண்ணெயின் வெப்பநிலை, பொருள்களின் அளவு, செய்முறை என எல்லாமே சரியாக இருந்தால்தான் சுவையான உணவைத் தயாரிக்க முடியும். சினிமாவில், சரியான இயக்குநர், எழுத்தாளர், சக நடிகர்களோடு நம் திறமை சேரும்போதுதான் ரசிக்கும்படியான திரைப்படம் உருவாகும்’’ என்கிறார் ஸ்வேதா.
தத்துவம் 2064!
பாலிவுட்டில் இது ‘வெட்டிங் டே’ சீசன் போலும். தீபிகா ரன்வீரையடுத்து பிரியங்கா சோப்ராவுக்கும் திருமணமாகி ஒரு வருடம் முடிந்துவிட்டது. ‘`இன்று மட்டுமல்ல, நீங்கள் என்றென்றைக்கும் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். காதல், உற்சாகம், அன்பு என்று அத்தனை அற்புதங்களையும் ஒரே நேரத்தில் எனக்கு அளித்துவருகிறீர்கள். இவை அனைத்தையும் தருவதற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி நிக்’’ என்று காதலாகிக் கசிந்துருகியிருக்கிறார் பிரியங்கா. காதல் வைபோகமே!

உலக அரசியலில் சமீபத்திய பரபரப்பு அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து ராணியைச் சந்தித்தது. பக்கிங்காம் அரண்மனையில் டிசம்பர் 4 ஆம் தேதி இரவு நடந்த விருந்தில், நேட்டோ தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் இருவரும் ராணி எலிசபெத்தைச் சந்தித்தனர். ராணியுடன் அவர் மகன் இளவரசர் சார்லஸ், இளவரசரின் மனைவி கமீலா ஆகியோரும் உடனிருந்து டிரம்ப் ஜோடியை வரவேற்றனர். ராணியின் மகள் இளவரசி ஆன் மட்டும் கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்தார். ராணி, டிரம்பை வரவேற்க இளவரசியை அழைக்க அவர் ஸ்டைலாகத் தோளைக்குலுக்கியதை அங்கே அரசியல் விமர்சகர்கள் கலாய்த்துவருகின்றனர். டிரம்ப் அட்ராசிட்டீஸ்!
வனங்கள் அழிந்துபோவதால் வனவிலங்குகள் படும்பாடு சொல்லிமாளாது. சமீபத்தில் TWLS-T1-C1 என்று குறிப்பிடப்பட்ட ஒரு புலி... தன் இருப்பிடத்தை விட்டு 1,200 கி.மீ பயணித்து இரண்டு மாநிலங்களைக் கடந்து வாழத்தகுதியான இடம்தேடி அலைந்து திரிந்திருக்கிறது. மகாராஷ்டிராவின் திபேஸ்வர் வனவிலங்கு சரணாலயத்தைத் சேர்ந்த இந்தப் புலி, காடுகள் அழிக்கப்பட்டதால் போதிய உணவு கிடைக்காமல் தவித்துவந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அங்கிருந்து கிளம்பி கொஞ்ச கொஞ்சமாக நகர்ந்து கடந்த மூன்று மாதங்களில் தெலங்கானா காடுகளில் சுற்றி அலைந்து, கடைசியில் தியான்கங்கா வனவிலங்கு சரணாலயத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. புலிகள் காப்போம்!
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மகளும் எம்.பி-யுமான சுப்ரியா சுலே, பத்திரிகையாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். “மகாராஷ்டிராவின் சமீபத்திய அரசியல் சூழலில், கேமராவோடு இருசக்கர வாகனத்தின் பின்புறம் நின்றுகொண்டே பயணித்த ஆண் பத்திரிகையாளர்களையும், உணவின்றி, தூக்கமின்றி, கழிப்பறையின்றி அரசியல் தலைவர்களின் வீட்டு வாசல்களில் காத்திருந்த பெண் பத்திரிகையாளர்களையும் பார்த்தேன், அப்படியெல்லாம் இரவு பகல் பாராமல் உழைக்கும் பத்திரிகைத் துறையினருக்குத் தகுந்த சமூகப் பாதுகாப்பு வழங்குதல் வேண்டும்” என்பது அவரது கோரிக்கை. ரொம்ப நன்றிங்க!