சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

‘பிரபல பாடகியான லேடி காகா, சமீபத்தில் ‘Stupid Love’ என்ற மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

‘கொரோனா அச்சம் மொத்த உலகையுமே ஸ்டாண்ட்-பை மோடுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா, ஜேம்ஸ் பாண்டையும் விட்டுவைக்கவில்லை. இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படங்களில் ஒன்றான அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வெளியீடு, கொரோனாவால் நவம்பர் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் ஜேம்ஸ் பாண்டாக தான் நடிக்கும் கடைசித் திரைப்படம் என அறிவித்திருந்தார் டேனியல் க்ரேய்க். பாண்ட் ரசிகர்கள் டேனியல் க்ரேய்க்கிற்குப் பிரியாவிடை கொடுக்க இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்தப் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா... `நோ டைம் டு டை’ (No Time to Die). பொருத்தமான டைட்டில்!

இன்பாக்ஸ்

பிரபல பாடகியான லேடி காகா, சமீபத்தில் ‘Stupid Love’ என்ற மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். எப்போதும்போல யூடியூப்பில் வியூஸை அள்ளிவரும் இந்த வீடியோ சற்றே ஸ்பெஷல். இது முழுக்க முழுக்க ஐபோன் கேமராவில் ஷூட் செய்யப்பட்டிருக்கிறதாம். ஆனால், தரத்தில் உங்களால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கவே முடியாது. இதற்கான மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டிருக்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த செலினா கோம்ஸின் ‘Lose You To Love Me’ பாடலும் இதேபோன்று ஐபோன் கேமராவில் ஷூட் செய்யப்பட்டதுதான். நேரடியாக ‘எங்கள் கேமராதான் பெஸ்ட்’ எனத் தம்பட்டம் அடிக்காமல் இதுபோன்ற முயற்சிகள் மூலம் ஐபோனின் கேமரா தரம் எப்படியானது என்பதை மக்களிடம் எடுத்துச்செல்வதே ஆப்பிளின் தற்போதைய பிளான். ஸ்மார்ட் மூவ் நண்பா!

‘அரசியல் மேடைகளில் தெறிக்கவிடும் நாஞ்சில் சம்பத்துக்கு இன்னொரு முகம் உண்டு. சொந்த ஊரான மணக்காவிளையில் தங்கியிருக்கும் நாள்களில் தினமும் ஆற்றுக்கு நடந்துசென்று, துணிகளைத் துவைத்தெடுத்து ஆசைதீர நீச்சலடித்துக் குளித்துவிட்டு வீடு திரும்புபவர். அசைவ வகை உணவுகளை ஒரு பிடிபிடிக்கிறார்! சாப்பிடுவது மட்டுமல்ல... வீட்டில் ஓய்வாக இருக்கும் நாள்களில், மட்டன், மீன் என அசைவ வகை உணவு வகைகளைத் தானே சமைத்து, குடும்ப உறுப்பினர்களுக்குச் சுடச்சுடப் பரிமாறி அவர்கள் ருசித்துச் சாப்பிடுவதை, ரசித்துச் சிலிர்க்கிறார். “தமிழ்நாட்டின் உணவு வகைகளிலிருந்து மாறுபட்டது நாஞ்சில் சமையல். விருந்தினர்களுக்கென்றே ஸ்பெஷலாக, பாலாடை, ஒரட்டி, ஒட்டப்பம், ஆட்டுக்கறிக் குழம்பு என வெரைட்டியாக விருந்து வைப்போம். ஆனால், மட்டன், மீன் இவையிரண்டும்தான் நான் நன்றாகச் சமைப்பதாக என் குடும்பத்தினர் சொல்கிறார்கள்’’ என்கிறார் இந்த ‘நளபாக சம்பத்!’ இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட...

‘நாமக்கல் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழா மார்ச் 5-ம் தேதி நடைபெற்றது. முதல்வர், துணை முதல்வர் கலந்துகொண்ட இவ்விழாவில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேயும் கலந்துகொண்டார். ஒடிசாவில் சுற்றுப் பயணத்திட்டம் வகுத்திருந்த மத்திய அமைச்சரை, வந்தே ஆக வேண்டுமென வற்புறுத்தி அமைச்சர் தங்கமணிதான் விழாவுக்கு வரவழைத்துள்ளார். விழா முடிந்தவுடன், நாமக்கல் ஸ்பெஷல் தினை அரிசி அதிரசமும், சேலம் ஸ்பெஷல் தட்டுவடையும் அமைச்சர் அஸ்வினி குமாருக்குப் பரிமாறப்பட்டுள்ளன. ‘செம டேஸ்டா இருக்குப்பா’ எனச் சொல்லிக்கொண்டே அதிரசத்தை ருசித்த அஸ்வினி குமார், இரண்டு டஜன் அதிரசத்தை பார்சல் செய்துகொண்டு புறப்பட்டுள்ளார். நவரசத்துல இந்த அதிரசமும் வருமா?

‘இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படம், ‘நானே நானா யாரோதானா’ ரேஞ்சில் இருப்பது நாம் அறிந்ததே. ஆனால் மேற்குவங்கத்தில், சுனில் காமர்கரின் வாக்காளர் அட்டையில் இருந்தது ஒரு நாயின் புகைப்படம்.  வெகுண்டெழுந்த அவர், தேர்தல் ஆணையத்தின்மீது வழக்கு தொடுக்கப்போகிறேன் என்று பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். உங்க அட்ராசிட்டி அளவில்லாமப் போகுதே!

‘பாலிவுட்டின் சென்சேஷன் டைகர் ஷ்ராஃப் தன் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். கொண்டாட்டத்தை இரண்டு விஷயங்கள் அழகாக்கின. ஒன்று, அவர் அம்மா ஆயிஷா ஷ்ராஃப் தன் இன்ஸ்டா பக்கத்தில் டைகர் ஷ்ராஃபின் சிறுவயதுப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தது. மற்றொன்று, அவர் காதலி டிஷா பதானி பதிவிட்ட நடன வீடியோ. ஷ்ராஃபும் டிஷானியும் ‘பேங் பேங்’ பட ட்ராக்குக்கு நடனப் பயிற்சியெடுக்கும் அந்த வீடியோ, சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என்பது ஹைலைட். இருவரின் இளமைத் துள்ளலான அந்த நடனம் 36 லட்சம் லைக்ஸ், பல ஆயிரம் கமென்ட்ஸ் என வைரல் ஆகியிருக்கிறது. டான்ஸ் வித் தோழி!

‘மனிதகுலத்துடன் போரிட்டுக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். COVID-19 என்று பெயரிடப்பட்டிருக்கும் கொரோனாவின் தாக்கத்தால் சீனா முழுவதும் பொருளாதாரம் தடைப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனாவின் தாக்குதலுக்கு ஏறத்தாழ 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். லிதுவேனியாவில் வெளிநாட்டவர் ஒருவருடன் தன் மனைவி பேசியதால், அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் எனக் கருதி, வீட்டுக் கழிவறையில் அடைத்திருக்கிறார் ஒருவர். ‘என் கையால் என் முகத்தைத் தொட்டுப் பல வாரங்கள் கடந்து விட்டன’ என்று ஆதங்கப் பட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யஹூ, ‘இந்திய முறைப்படி கைகூப்பி வணக்கம் தெரிவியுங்கள்’ என்று அறிவுரைத்துள்ளார். இத்தாலி நாட்டில் பொதுமக்கள் கைகுலுக்குவதையும், முத்தம் கொடுப்பதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது அந்நாட்டு அரசு. கொரோனாவும் கடந்து போகும்.

இன்பாக்ஸ்

த்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இருதரப்பு மோதல் காரணமாக எஸ்யூவி மாடல் கார் ஒன்றைப் பறிமுதல் செய்திருக்கிறது அம்மாநிலக் காவல்துறை. இரண்டு நாள்களுக்குப் பிறகு, வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காகக் காவல்துறை ஆய்வாளர் ஒருவரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் அந்தப் பறிமுதல் செய்யப்பட்ட காரை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். லக்னோவிலிருந்து 140 கிலோமீட்டர் சென்ற பிறகு, தனது கார் லக்னோவை விட்டு வெளியேறியதை ஜிபிஎஸ்ஸால் அறிந்த அதன் உரிமையாளர்,  ஜிபிஎஸ் உதவியுடன் அந்தக் காரை லாக் செய்துள்ளார். அனுமதியின்றி காரை எடுத்துச் சென்ற காவல்துறையினர் ஏறத்தாழ மூன்று மணி நேரம் காருக்குள் சிக்கிக்கொண்டனர். காரின் உரிமையாளர் தனது வாகனம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அளித்த புகாரை ஏற்று, தவறிழைத்த காவலர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளார் லக்னோ காவல் ஆணையர் சுஜித் பாண்டே. வல்லவனுக்கு வல்லவன்.

‘ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அன்று ஜான்வி தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில், ஸ்ரீதேவியை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் குழந்தைப்பருவப் புகைப்படத்தைப் பதிவேற்றி ‘மிஸ் யூ எவ்ரிடே’ என நெகிழ்ந்திருந்தார்.  சென்னை மயிலாப்பூரில் உள்ள தங்களது வீட்டில், அம்மாவின் நினைவு நாள் பூஜைக்காக வந்திருந்த ஜான்வி, அந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டு, ‘விஷ் யூ வேர் ஹியர்’ என்று தன் அம்மாவின் வெற்றிடத்தை வெளிப்படுத்தியிருந்தார். நெருங்கிய வட்டம் மட்டுமே கலந்துகொண்ட அந்நிகழ்வில், தமிழ்நாட்டு அடையாளமான பாவாடை, தாவணியில் கலந்துகொண்டார் ஜான்வி. தன் அம்மாவுக்குப் பிடித்த உடையான தாவணியை தீபாவளி முதல் திருப்பதி விசிட்வரை ஜான்வி தொடர்ந்து அணிந்துவருவது குறிப்பிடத்தக்கது. சின்ன மயில்!