Published:Updated:

இன்பாக்ஸ்

இந்த சிப்லிங் கலாட்டா வீடியோக்கள் மில்லியனில் லைக்ஸ் வாங்கிக்கொண்டிருக்கின்றன.

பிரீமியம் ஸ்டோரி

ந்திர முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளான ஜூலை 8-ம் தேதி விவசாயிகள் தினமாக அறிவிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்று, ஒய்.எஸ்.ஆரின் மனைவி விஜயலட்சுமி எழுதிய ‘நாலோ நாத்தோ ஒய்.எஸ்.ஆர்’ ( Within me...with me YSR) என்ற தலைப்பில், ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு புத்தமாக வெளியிடப்பட்டது. ஒரு முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை, அவர் மனைவி எழுதி மகன் வெளியிடுவது அதுவும் முதலமைச்சராக இருந்து வெளியிடுவது என்பது அரிதிலும் அரிதான ஒரு விஷயம் என ஆந்திரப் பத்திரிகைகள் எழுதிக் குவித்தன. “என் கணவரின் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம்தான்... அது தெலுங்கு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது’’ எனப் புத்தகத்தின் முன்னுரையில் கண்ணீர் மல்கியிருக்கிறார் ஒய்.எஸ்.விஜயாம்மா. இங்க YSRன்னா யுவன்தான்!

ரு படத்துக்கான சம்பளத்திலிருந்து நாள் சம்பளத்துக்கு அஜித் மாறிவிட்டார் என்று கடந்த வாரம் இன்பாக்ஸில் வெளியிட்ட செய்தியை மறுக்கிறது அஜித் தரப்பு. சம்பள விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லையாம். அதே பழைய நடைமுறைதானாம். ரைட்டு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பாதிப்புகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளில் முக்கியமானது தென்கொரியா. ஆனால் அங்கு கொரோனாவின் இரண்டாவது அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சியைத் தென்கொரிய அரசு கையில் எடுத்தது. களத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்திலும், மக்களுக்கு முகக்கவசம் அணிவது மற்றும் கைகழுவுதலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதத்திலும் ட்ரோன் ஒளி நிகழ்ச்சியை  தலைநகரமான சியோலின் ஹான் நதிக்கரையில் நடத்தியிருக்கிறது அந்த அரசு. கோ கொரோனா கோ

புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதில் மட்டுமல்ல, பழைய வசதிகளைக் கண்மூடித்தனமாக நீக்குவதிலும் ஆப்பிள்தான் கிங். விலை அதிகம் இருந்தாலும் பொதுவாக ஐபோன்களுடன் ஃபாஸ்ட் சார்ஜர்களை வழங்கும் பழக்கம் ஆப்பிளுக்குக் கிடையாது. இதில் இன்னும் ஒரு படி மேலே சென்று ஐபோன் 12-ல் சார்ஜரே கொடுக்கப்படாதாம். ஆப்பிள் மட்டும்தான் இப்படி என்று பார்த்தால் சாம்சங்கும் இதையே செய்யப்போகிறதாம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது, அதில் முக்கியமானது மின்னணுக் கழிவைக் குறைப்பதுதான். ஏற்கெனவே மக்கள் அனைவரிடமும் சார்ஜர்கள் இருக்கின்றன, இதன்மூலம் மொபைலின் விலையையும் குறைக்கமுடியும் என நம்புகின்றன இந்த நிறுவனங்கள். இதனால் வயர்லெஸ் சார்ஜிங்கும் இன்னும் பரவலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சார்ஜரில்லா உலகு

ந்தியன்-2 படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன. இதற்கிடையே செப்டம்பரில் `பிக்பாஸ்' ஷூட்டிங் ப்ளஸ் `இந்தியன் -2' ஷூட்டிங் என இரண்டுக்குமே வெளியே வர ஓகே சொல்லியிருக்கிறாராம் கமல். சண்டைக்காட்சிகளில் மட்டும் சோஷியல் டிஸ்டன்ஸிங் எப்படி செய்வது என்கிற ஆலோசனைதான் இப்போது தீவிரமாக நடந்துவருகிறதாம். கிராஃபிக்ஸ் இருக்க பயமேன்!

ஓவியம்: பிரேம் டாவின்ஸி
ஓவியம்: பிரேம் டாவின்ஸி

வெப்சீரிஸில் நடிக்க வைகைப்புயல் வடிவேலு ரெடி. கதையெல்லாம் கேட்டு ஓகே சொல்லிவிட்டார் வடிவேலு. 2021-ல் ஷூட்டிங். இந்த வெப்சீரிஸின் இயக்குநர் யார் தெரியுமா? `தலைநகரம்', `மருதமலை', `கத்திசண்டை' படங்களை இயக்கிய சுராஜ்தான். ஆஹா ஓஹோ அதலசக்கா!

கொஞ்ச நாள் பப்ஜிக்கு அடிக்டாக இருந்த பிரபலங்கள் இப்போது ‘லூடோ’வில் பிஸி. இதில் மிக முக்கியமாக ‘மாஸ்டர்’ படத்தின் இயக்குநர் லோகேஷ், அவரின் இரண்டு உதவி இயக்குநர்கள், நாயகி மாளவிகா மோகனன் என இந்த டீமே ‘லூடோ’வில் அடிக்கடி போட்டி போட்டு பர்ஃபாமன்ஸ் காட்டுகிறதாம். நீங்க நடத்துங்க!

வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு சென்னையில் வேளச்சேரிதான் வசிப்பிடம். காலை 6 மணியில் ஆரம்பித்து இரவு 12 மணிவரை கட்சித்தொண்டர்கள் புடைசூழ பிஸியாக இருப்பார். ஊரடங்கு ஆரம்பித்துவிட்ட பிறகு தற்காலிகமாகப் புதுச்சேரிக்கு இருப்பிடத்தை மாற்றிவிட்டார்; செல்பேசி எண்ணையும் மாற்றிக்கொண்டுவிட்டார். “நாள் முழுக்க கட்சித் தொண்டர்களின் அன்புப்பிடியில் சிக்கித் தவிப்பதிலிருந்து கொஞ்சம் விடுபடுவதற்காகத்தான் அண்ணன் இந்த ஐடியாவைச் செயல்படுத்தினார். அங்கிருந்தபடியே வீடியோ மீட்டிங்-சாட்டிங் எனத் தொண்டர்களோடும் அமைப்புகளோடும் உரையாடிவருவதால், அண்ணன் இப்போதும் பிஸி!” என்கிறார்கள் திருமாவுக்கு நெருக்கமானவர்கள். கூண்டுக்குள்ள சிறுத்தை

சென்னை மாநகராட்சியின் மேயராகக் கோலோச்சியவர் சைதை துரைசாமி. இவருக்குத் திருத்தணி அருகே சில ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 35 வருடங்களாக இங்கு இயற்கை விவசாயம் செய்யும் சைதை துரைசாமி, ‘எனக்கு 70 வயசு ஆகுது. இப்பவும் நான் தெம்பா இருக்கேன்னா இயற்கை உணவுமுறைதான் காரணம். ஒவ்வொருவரும் வீட்டு மாடியிலயாவது தோட்டம் வைங்க’ என்று தன்னைச் சந்திக்கும் இளைஞர்களிடம் அறிவுறுத்துகிறார். திருத்தணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த வேளாண் பண்ணையில் ஒரு ஏக்கர் அளவுக்கு இலவசப் பூங்காவையும் அமைத்துள்ளார். திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களும் நெடுஞ்சாலைப் பயணிகளும் இங்கு ஓய்வெடுத்துச் செல்வதை வாடிக்கையாக்கிவிட்டனர். ‘சிஸ்டம் சரியில்லை’ என்று அரசியலில் அமைதியாக இருக்கும் சைதை துரைசாமி, சிஸ்டம் சரி செய்பவருக்காகக் காத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். ரெண்டுபேருக்கும் ஒரே வயசு!

சேன் போல்ட் எட்டு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற தடகள வீரர். உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரை வீட்டிலேயே கட்டிப்போட மகள் பிறந்திருக்கிறார். ஆங்கிலத்தில் போல்ட் என்றால் அதிவேகமாக ஓடுதல் என்று அர்த்தம் உண்டு. மின்னல் வேகத்தில் ஓடும் இவரை லைட்னிங் போல்ட் எனச் செல்லமாக ரசிகர்கள் அழைப்பதுண்டு. தற்போது தன் மகளுக்கு அதையே பெயராக்கியிருக்கிறார். உசைன் போல்ட்டின் அழகு மகளின் பெயர் ஒலிம்பியா லைட்னிங் போல்ட். ஒளி பெருக வாழ்த்துகள்

கேரளாவில் உள்ள மக்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆவது ஒன்றும் நமக்குப் புதிதல்ல. ஆனால் வெளிநாட்டவர் ஒருவர் நான் கேரளாவை விட்டுப் போக மாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜானி பால் பியர்ஸ். கேரளாவிற்குச் சுற்றுலா வந்தவர் கேரள நாட்டோடு காதலில் விழுந்திருக்கிறார். “கேரளா அமைதியாக அழகாக இருக்கிறது. அமெரிக்காவில் பெருங்குழப்பம்தான் இருக்கிறது. நான் இங்கிருந்து செல்ல மாட்டேன், என் சுற்றுலா விசாவைத் தொழில் விசாவாக மாற்றிக்கொடுங்கள்” என கேரள உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். கேரளாவில் வெளிநாட்டவர்களுக்குப் புத்துணர்ச்சி மையம் அமைப்பதே தன் திட்டம் எனச் சொல்லியிருக்கிறார். இயற்கையான அழகு அங்கே அதிகம்ல

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 286 படுக்கைகளுடன் கொடிசியா மைதானத்தில் பிரத்யேக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கவனித்த அமைச்சரான எஸ்.பி.வேலுமணியிடம், ‘முகாமுக்குள்ளயே அடைஞ்சு கிடப்பதால பல நோயாளிகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகுறாங்க’ என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ‘பெரிய திரை ரெடி பண்ணி, தினமும் நல்ல படங்களைப் போடச் சொல்லுவோம்’ என்றவர், அதற்கான ஏற்பாடுகளையும் உடனடியாக எடுத்துள்ளார். ‘எம்.ஜி.ஆர் படங்களை அதிகமா போடுவோமா?’ என உதவியாளர் கேட்டதற்கு, சற்று யோசித்த வேலுமணி ‘ரஜினி படங்களையும் போடச் சொல்லுங்க’ என்று புன்முறுவல் பூத்துள்ளார். ஏதோ கணக்கு இருக்கு!

இன்பாக்ஸ்

ங்கை இசபெல் கைஃபுடன் லாக்டௌன் நாள்களைக் கழித்துவருகிறார் பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப். தங்கை சமைக்க, ‘இவ என்ன சமைக்கிறான்னு இப்ப சொல்ல முடியாது, சமைச்சு முடிச்சாதான் தெரியும்’ என்று அக்கா வம்பிழுக்கிறார். கேத்ரினா வீடு பெருக்கும்போது சோபாவில் ஹாயாக அமர்ந்தபடி அக்காவுக்குத் தரை சுத்தம் செய்ய டிப்ஸ் கொடுக்கிறார் தங்கை. இந்த சிப்லிங் கலாட்டா வீடியோக்கள் மில்லியனில் லைக்ஸ் வாங்கிக்கொண்டிருக்கின்றன. வைரல் சிஸ்டர்ஸ்

விவாகரத்தான ஹாலிவுட்டின் சூப்பர் ஜோடி ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீசத் தொடங்கியிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்த பிறகு, 2016-ம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்தார் ஏஞ்சலினா. பிரிந்த பிறகு அவர்களின் ஆறு குழந்தைகளும் யாரிடம் வளர வேண்டும் என்ற மோதல் நீடித்தது. பிரச்னையைத் தீர்ப்பதற்கு இருவருக்கும் ‘ஃபேமிலி தெரபி’ என்ற உளவியல் சிகிச்சை கைகொடுத்திருக்கிறது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஏஞ்சலினாவின் வீட்டில் பிராட் பிட்டைப் பார்த்ததாகச் செய்திகள் வெளியாகின. இருவருக்குமிடையேயான மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் தங்கள் உறவை மீட்டெடுத்துள்ளதாக நெருக்கமானவர்கள் தெரிவித்திருக்கின்றனர். வா வா வசந்தமே

ரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ், தன் வீட்டுக்கு அருகிலுள்ள விராட் கோலியின் வீட்டுக்குச் சென்று, தன் அம்மா செய்த தோசைகளைக் கொடுத்துள்ளார். விராட் இதைத் தன் இன்ஸ்டாவில், “இன்று ஒரு நண்பர் எங்கள் வீட்டுக்கு வந்து, அவர் அம்மா செய்து தந்த தோசைகளைக் கொடுத்தார். இதுபோன்ற சுவையான தோசையைச் சாப்பிட்டு வெகு நாள்களாகின்றன. நன்றி அம்மா. நாங்கள் பதில் பரிசாக அனுப்பிய காளான் பிரியாணியை நீங்கள் ரசித்தீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். சக கிரிக்கெட் வீரர் சாஹல், “பையா, உங்கள் வீட்டிலிருந்து 1,400 கி.மீ தூரத்தில் இருக்கும் எனக்கும் பிரியாணியை பார்சல் பண்ணிவிடுங்கள்” என்று கமென்டில் கேலி செய்துள்ளார். காளான் பிரியாணிக்கேவா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு