Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

நாம் ஒவ்வொருவருமே நம் கைகளில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டருடன்தான் அலைந்துகொண்டிருக்கிறோம். நாம் பயன்படுத்தும் கணினிகளைவிட, நம் ஸ்மார்ட்போன்கள் அதிக ரேம் கொண்டவை

இன்பாக்ஸ்

நாம் ஒவ்வொருவருமே நம் கைகளில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டருடன்தான் அலைந்துகொண்டிருக்கிறோம். நாம் பயன்படுத்தும் கணினிகளைவிட, நம் ஸ்மார்ட்போன்கள் அதிக ரேம் கொண்டவை

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

* தெலுங்கில் ‘உப்பென்னா’ படத்தின் மூலம் அறிமுகமான க்ரித்தி ஷெட்டிக்கு அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகள் குவிகின்றன. நானியுடன் ‘ஷியாம் சிங்கராய்’, மோகனகிருஷ்ண இந்திரகாந்தி இயக்கத்தில் சுதீர்பாபு நடிக்கும் ‘அ அம்மாயி குரிஞ்சி மீக்கு செப்பாலி’, லிங்குசாமி தெலுங்கில் ராம் பொத்தனேனியை இயக்கும் படம் என லைன் -அப் ரெடி. விரைவில் க்ரித்தி ஷெட்டியின் கோலிவுட் என்ட்ரியும் இருக்கும் என்கிறார்கள். ராஷ்மிகாவைத் தொடர்ந்து இவருக்கும் விசிறிகள், ஏர்கூலர்கள் எல்லாம் ஏகபோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இக்கடவும் ரா...

* அடிக்கடி ஜூப்லி ஹில்ஸிலிருந்து பல்லாவரத்துக்குப் பறந்து வரும் சமந்தா, தன் ஆரம்பக்கால ஃபிட்னஸ் ரகசியத்தை இன்ஸ்டா சாட்டில் பகிர்ந்திருக்கிறார். ஸ்டெல்லா மேரீஸில் படித்தபோது, வார இறுதியில் பல்லாவரத்திலிருக்கும் வீட்டிலிருந்து போயஸ் கார்டன் வரை சைக்கிளில் வந்து போவாராம். ‘நான் ஃபிட்னெஸ் ஃப்ரீக்... வருங்காலத்தில் என் மகளோடு ஒர்க்-அவுட் செய்யணும்’ என்று ஜாலியாக தன் ஆசையைச் சொல்லியிருக்கிறார். எப்போ பேபி?

* நாம் ஒவ்வொருவருமே நம் கைகளில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டருடன்தான் அலைந்துகொண்டிருக்கிறோம். நாம் பயன்படுத்தும் கணினிகளைவிட, நம் ஸ்மார்ட்போன்கள் அதிக ரேம் கொண்டவை. இதுவரையில் 12 ஜிபி வரை ரேமுடன் மொபைல் வெளியிட்டுக்கொண்டிருந்த நிறுவனங்களைத் தாண்டி அடுத்த அதிரடியை இறக்கியிருக்கிறது அசூஸ். கேமர்களுக்கென பிரத்யேகமாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் `ROG 5 அல்டிமேட்’ போனின் ரேம் 18 ஜிபி. இன்டர்னெல் மெமரி 512 ஜிபி. விலை வெறும் 80,000 தான். அம்மாடியோவ்!

இன்பாக்ஸ்

* கொரோனாவோடு சேர்ந்து தேர்தலும், தற்போது தமிழ் சினிமாவை வாட்ட ஆரம்பித்திருக்கிறது. மார்ச் இறுதியில் வெளியாகவேண்டிய சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம், ரம்ஜான் அன்று வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள். படம் தள்ளிப்போனதற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். ‘ஹீரோ’ படத்தின் கதை தொடர்பான பிரச்னை முடியும் வரை அதன் தொலைக்காட்சி வெளியீட்டை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். ஆனால், அதற்கு முன்பே அந்தப் படம் விற்கப்பட்டுவிட்டது. அதே நிறுவனம்தான் ‘டாக்டர்’ படத்தையும் தயாரித்திருக்கிறது. அந்தப் படத்தின் பிரச்னை தீர்ந்தால்தான் இதன் ‘டாக்டர்’ ரிலீஸ் சாத்தியமாகும் என்கிறது கோலிவுட் வட்டாரம். டாக்டருக்கு டெலிவரி லேட்!

* உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் அமிதவ் கோஷ் Jungle Nama: A Story of the Sundarban என்ற தன் புதிய கவிதை நூலை வெளியிட்டிருக்கிறார். உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடுகளான சுந்தரவனக் காடுகளின் கிராமங்களில் வழங்கிவரும் போன் பிபி என்ற புராணக் கதையைத் தழுவி எழுதப்பட்ட நூல் இது. இங்கு மக்களின் வாழ்க்கை, காட்டையும் அங்கு வாழும் விலங்குகளையும் எப்படிச் சார்ந்திருக்கிறது என்பதையும் ‘ஜங்கிள் நாமா’ விவரிக்கிறது. நாவல், சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என எழுதியுள்ள அமிதவின் முதல் கவிதை நூல் இது. இந்தியாவில் இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற முதல் ஆங்கில எழுத்தாளர் அமிதவ். கவி வெல்லும்!

* சர்ச்சை எழுத்தாளர் டான் பிரவுனின் நாவல்கள் படமாக வெளிவரும்போது பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பினாலும், வியாபார ரீதியாக வெற்றிபெற்றுவிடும். அவரின் ‘தி டாவின்சி கோட்’, ‘ஏஞ்சல்ஸ் அண்டு டீம்னஸ்’, ‘இன்ஃபர்னோ’ நாவல்களைத் தொடர்ந்து இப்போது ‘தி லாஸ்ட் சிம்பள்’ நாவலும் உயிர்பெறவிருக்கிறது. ஆனால், படமாக இல்லாமல் வெப்சீரிஸாக எடுக்கவிருக்கிறார்கள். அவரின் பெரும்பாலான கதைகள், ரகசியங்களைக் கண்டறியும் ஜேம்ஸ் பாண்ட் பாணிக் கதைகளாகத்தான் விரியும். ‘தி லாஸ்ட் சிம்பள்’ கதையில் நாயகனாக வரும் பேராசிரியர் ராபர்ட் லாங்க்டன், கடத்தப்பட்ட தன் குருநாதரை ஃப்ரீ மேசன்களின் வரலாறு மற்றும் அவர்கள் சம்பந்தமான குறியீடுகளை வைத்து மீட்கப் போராடுவதுதான் ஒன்லைன். இதில் பேராசிரியர் ராபர்ட் லாங்க்டனாக ஆஷ்லி ஸூக்கர்மேன் நடிக்கவிருக்கிறார். திரைப்படங்களில் ராபர்ட் லாங்க்டனாக மூத்த நடிகர் டாம் ஹாங்க்ஸ் தோன்றி அசத்தியிருப்பார். அதே எதிர்பார்ப்பு இந்தப் புதிய சீரிஸின் மீதும் தற்போது விழுந்திருக்கிறது. வெல்கம் டு ஓடிடி புரொபசர்!

* ‘ஆதித்ய வர்மா’ படத்தின் கசப்பிலிருந்து மீண்ட இயக்குநர் பாலா, தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிஸியாகிவிட்டார். கதை விவாதம் உள்ளிட்டவை முடிந்த நிலையில் பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பகுதிகளில் லொகேஷன் பார்த்திருக்கிறார். விரைவில் அறிவிப்பு வருமாம். வெயிட்டிங்!

* ஹஸீஃப் சஜீவ் எனும் 19 வயதுப் புகைப்படக் கலைஞன்தான் கேரளாவின் மிகப் பெரிய ட்ரெண்ட். Thrikkannan என்ற இன்ஸ்டா பக்கத்தில் இவர் போஸ்ட் செய்யும் சமூக அக்கறை கொண்ட படங்கள், ஆசம் ப்ளஸ் ஆச்சரியம் ரகம்! படங்கள் என்றால், சும்மா நடந்து முடிந்தவை இல்லை; எல்லாமே நடக்கப் போகிறவை. சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் படங்கள்தான் ஹஸீஃபை கேரளா முழுக்க ட்ரெண்டாக்கியுள்ளன. ஒரு பில்லியன் ரைடர் பெண்ணின் துப்பட்டா பின் வீலில் மாட்டி அந்தப் பெண் தலைகுப்புற விழப்போவது, பைக்கில் போகும்போது அஜாக்கிரதையாக கார் கதவைத் திறந்த வேளையில் டூ–வீலர் ரைடர் கீழே விழுவது; மழை நேரங்களில் குடையைப் பிடிச்சுக்கிட்டே மெதுவாய்ப் போயிடலாம் என்று நினைக்கும் பார்ட்டிகளுக்கு நடக்கும் துயரம்... இப்படி எல்லாமே விஷுவல் பதிவு. லவ்லி!

இன்பாக்ஸ்

* ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘பாக் மில்கா பாக்’கை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா - ஹீரோ ஃபர்ஹான் அக்தர் கூட்டணி ‘தூஃபான்’ படம் மூலம் மீண்டும் இணைகிறது. இம்முறை குத்துச்சண்டை வீரராக களமிறங்கும் ஃபர்ஹான் அக்தர், 15 கிலோ எடை குறைத்து பக்கா பாக்ஸிங் சாம்பியனாகவே மாறி இருக்கிறார். டீஸருக்கு பயங்கர வரவேற்பு. செம பஞ்ச்சா விடுங்க!

* கமல் தன் படங்களில் தானே நடித்து ரீமேக் செய்ய விரும்புவது என எப்போதும் சொல்வது 1986-ல் ரிலீஸான ‘விக்ரம்’ தான். அந்த டைட்டிலை மட்டும்தான் லோகேஷ் கனகராஜின் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்துக்குக் கொடுத்திருக்கிறார். ‘சுஜாதா எழுதிய விக்ரம் ரீமேக் வேற பெயர்ல நடக்கும்!’ என்று சொல்லும் கமல் தேர்தலுக்குப் பிறகு கலைஞனாகவும் அரிதாரம் பூச ரெடியாக இருக்கிறார். இது வேறயா?

இன்பாக்ஸ்

* மம்மூட்டியின் ‘தி பிரீஸ்ட்’ சமீபத்தில் ரிலீஸாகியிருக்கிறது. ‘கிறிஸ்தவ மதத்தைப் புண்படுத்துறாங்க!’ என்ற சர்ச்சை, கொரோனா என ரிலீஸ் தேதி மாற்றி மாற்றி, தள்ளிப்போய் ஒரு வருடத்துக்குப் பிறகு தியேட்டர்களைத் தொட்டிருக்கிறது. ஒருபக்கம் ஹிட் மேல் ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் மோகன்லாலைப் பார்த்தே சோர்ந்துபோயிருந்தார்கள் மம்மூக்கா ரசிகர்கள். இப்போது மொத்தமாய்க் கொண்டாடித் தீர்க்கிறார்கள். எங்ககிட்டயும் சீப்பு இருக்கு!

* ‘இந்த வருடமாவது சினிமாவில் தனக்கு பழைய புகழ் கிடைக்கணும்’ என்று குலசாமியிடம் வேண்ட பரமக்குடிக்கு வந்திருந்தார் வைகைப்புயல் வடிவேலு. கொரோனா லாக் டௌன் நாள்களிலிருந்து சொந்த பந்தங்களைப் பார்த்துக்கொண்டு மதுரைப் பக்கம்தான் அதிகம் டிராவலாகிறார் வடிவேலு. மார்ச் 11-ம் தேதி சிவராத்திரிக்குக் குலசாமியைக் கும்பிட பரமக்குடி அருகேயிருக்கும் திருவேட்டை உடைய அய்யனார் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் வந்தார். ‘நல்ல வழியைக் காட்டப்பா...’ என்று நீண்ட நேரம் சாமியிடம் மனமுருக வேண்டியவர், அங்கு வந்திருந்த மக்களிடம் ஜாலியாகப் பேசிவிட்டுக் கிளம்பினார். வைகைப்புயலை மறுபடியும் வீச வையப்பா அய்யனாரே!

இன்பாக்ஸ்

* கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 140 சட்டசபைத் தொகுதிகளில் 85 தொகுதிகளில் சி.பி.எம் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளைக் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு வழங்கியுள்ளது. கட்சி விதிகளின்படி சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் 33 பேருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ராமகிருஷ்ணன், நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் உட்பட ரவீந்திரநாத், சுதாகரன், இ.பி.ஜயராஜன், ஏ.கே.பாலன் ஆகிய ஐந்து அமைச்சர்களும் சீட் மறுக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளனர். இதுபோன்று கட்சி விதி என வேறு கட்சிகளில் சிட்டிங் அதிகார மையங்களை ஒதுக்கியிருந்தால் பெரும் குஸ்தியே நடந்திருக்கும். அதுசரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism