சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

கொரோனா லாக்டௌன் காலத்தில், அதிகம் பாதிக்கப்பட்டது மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

குணச்சித்திர வேடங்களில் கலக்கிய ஜார்ஜ் மரியானின் மகன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவதாகச் சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கும் முன்பாக, முதன் முறையாக ஜார்ஜ் மரியானே கதாநாயாகனாக நடிப்பது குறித்த செய்தி கிடைத்துள்ளது. படத்தின் ஷூட்டிங் ஈரோட்டுப் பக்கம் நடந்துவருகிறது. ‘மகாநதி’ சங்கர், ‘கலக்கப் போவது யாரு’ நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோர் நடித்துவருகிற இப்படத்திற்கு `எஃப்.எம்’ எனப் பெயரிட்டுள்ளார்களாம். பேசிக்கிட்டே இருப்பாங்களோ?

சினிமா, டிவி பிரபலங்கள் மத்தியில் டிரெண்ட் ஆகிவரும் போட்டோஷூட் ‘நீயா நானா’ கோபிநாத்தையும் விட்டு வைக்கவில்லை. விதவிதமான `கெட்டப்’களில் மனிதர் புகைப்படங்களை எடுத்துத் தள்ளியுள்ளார். ‘வைல்டு கார்டில் அர்ச்சனா நுழைந்ததுபோல் பிக் பாஸ் வீட்டுக்குள் அடுத்த என்ட்ரி நீங்களா’ எனக் கேட்டால், ‘அட போங்க பாஸ்’ என்றவர், `போட்டோஷூட்டுக்குப் பின்னால் அந்த மாதிரி சஸ்பென்ஸ்லாம் எதுவுமில்லை’ என்கிறார். அவருடைய காஸ்ட்யூம் டிசைனர் நீண்ட நாள்களாக விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்த லுக்காம் அது. காஸ்ட்யூம் டிசைனர் விருப்பத்திற்காகவே சம்மதித்தாராம். கோட் இல்லாத கோபிநாத்தா?

இன்பாக்ஸ்

கொரோனா லாக்டௌன் காலத்தில், அதிகம் பாதிக்கப்பட்டது மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லையென ஏற்கெனவே கைவிரித்திருக்கிறது மத்திய அரசு. மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்கான புதிய சிலைகளில் புலம்பெயர் பெண் கூலித்தொழிலாளர்களை வடித்திருக்கிறார் ரிந்து தாஸ். `கொளுத்தும் வெயிலில் பசியையும், வறுமையையும் குழந்தைகளுடன் மடியில் சுமந்த இந்தப் பெண்கள்தாம் தெய்வம் என்கிறார் அவர். பரிஷா கிளப் துர்கா பூஜை குழுவினரின் ஏற்பாட்டில் லட்சுமி, சரஸ்வதி, துர்கா சிலைகளை இவ்வாறு வடிவமைத்திருக்கிறார்கள். கைவிடப்பட்ட கடவுள்கள்!

இன்பாக்ஸ்

பிரபல ஆங்கிலத் திரைப்பட டிவி சேனல்களான HBO மற்றும் WB tv இரண்டும் டிசம்பர் 15 முதல் அவற்றின் சேவையை இந்தியாவில் நிறுத்திக்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறது. தற்போது படங்கள் பார்க்க மக்கள் பெரும்பாலும் OTT தளங்கள் பக்கம் ஒதுங்கிவிடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த இரண்டு சேனல்களையும் நிர்வகிக்கும் வார்னர் மீடியா நிறுவனம் “சந்தை மிகவும் வேகமாக மாறியிருக்கிறது. இந்த மாற்றத்தை கொரோனா இன்னுமும் அதிகரித்திருக்கிறது” என்று இதுகுறித்துப் பேசியிருந்தது. கார்ட்டூன் நெட்வொர்க், போகோ போன்ற சேனல்களில் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்றும் தெரிவித்திருக்கிறது வார்னர் மீடியா நிறுவனம். 20 வருடங்களாக HBO-வும் 10 வருடங்களுக்கு மேலாக WB tv-யும் இந்தியாவில் இயங்கிவருகின்றன. எப்படி இருந்த சேனல்...?

இன்பாக்ஸ்

ஸ்பின் பவுலர்களின் கை ஓங்கியிருக்கும் துபாய் மைதானங்களில் கலக்கிவருகிறார்கள் அயல்நாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள். அதிலும் தென்னாப்பிரிக்காவின் அன்ரிச் நார்க்கியா போடுவது எல்லாமே 150+ வேகம்தான். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மணிக்கு 156.22 கி.மீ வேகத்தில் இவர் வீசிய பந்துதான், ஐபிஎல் வரலாற்றிலேயே வேகமான பந்து. இந்த சீசனில் மட்டும் பத்து முறைக்கு மேல், 150+ வேகத்தில் வீசியிருக்கிறார் நார்க்கியா. மின்னல்மனிதன்.

‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு, நித்யா மேனன் தமிழில் நடித்த படம் ‘சைக்கோ.’ தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளில் கவனம் செலுத்திவருகிறார். அசோக் செல்வனோடு ‘நின்னிலா நின்னிலா’ எனும் தெலுங்குப் படம், ஸ்ரேயாவுடன் ‘கமணம்’ எனும் மல்டிலிங்குவல் படம், ‘கொளம்பி’, ‘ஆரம் திருகல்பனா’ ஆகிய இரு மலையாளப் படங்கள் ஆகியவை நித்யா மேனன் வசம் இருக்கின்றன. தற்போது, இந்து என்பவர் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இது விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது மலையாளத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சேட்டன் சேதுபதி