Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

டி20 உலகக்கோப்பை தோல்விகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விமர்சிக்கப்பட்டாலும், சந்தோஷமாக இருக்கிறார் கே.எல்.ராகுல்.

இன்பாக்ஸ்

டி20 உலகக்கோப்பை தோல்விகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விமர்சிக்கப்பட்டாலும், சந்தோஷமாக இருக்கிறார் கே.எல்.ராகுல்.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

உலகின் மிக காஸ்ட்லியான வீடுகளில் ஒன்று, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மும்பையில் வசிக்கும் ‘அன்டில்லா’ இல்லம். சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த வீட்டில் அவர்கள் குடியேறினர். லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை சமீபத்தில் அம்பானி குடும்பம் வாங்கியது. உடனே, ‘அம்பானி குடும்பம் லண்டனில் குடியேறப்போகிறது’ என்று வதந்தி பரவிவிட்டது. பதறிப் போன ரிலையன்ஸ் நிறுவனம், ‘‘அந்த எஸ்டேட்டை ரிசார்ட் மற்றும் கோல்ஃப் மைதானமாக மாற்றவிருக்கிறோம். அம்பானி குடும்பம் இந்தியாவில்தான் வசிக்கும்’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறது. மாடிமேல மாடிகட்டி...

இன்பாக்ஸ்

டி20 உலகக்கோப்பை தோல்விகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விமர்சிக்கப்பட்டாலும், சந்தோஷமாக இருக்கிறார் கே.எல்.ராகுல். நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியா ஷெட்டியைக் காதலிப்பதை உறுதி செய்ததுதான் காரணம். ஒரு வருடமாகவே இவர்கள் ஜோடியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தாலும், ‘என் பார்ட்னர்’ என்று கிரிக்கெட் வாரியத்துக்கு ராகுல் எழுத்துபூர்வமாகக் கடிதம் கொடுத்திருந்தாலும், இப்போதுதான் இன்ஸ்டாகிராமில் இருவரும் உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்து என்ன, கேப்டன்சியா!

இன்பாக்ஸ்

`அசுரன்’ திரைப்படத்துக்காக சமீபத்தில் தேசிய விருது வாங்கினார் தனுஷ். மறுநாள் தன் தந்தை கஸ்தூரிராஜா, அண்ணன் செல்வராகவன், அம்மா மற்றும் இரு அக்காக்கள், குழந்தைகளுடன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குலதெய்வம் கோயிலில் வழிபாடு நடத்தினார். தேனியில் உள்ள வீட்டில் இயக்குநர் பாரதிராஜா இருப்பது தெரிந்ததும், அங்கு குடும்பத்துடன் சென்று ஆசி பெற்றார். பாரதிராஜா தன் வீட்டு மாடியில் பந்தல் அமைத்து, தனுஷ் குடும்பத்தினருக்கு ஸ்பெஷல் விருந்து கொடுத்து வழியனுப்பினார். எம் இனிய விருதுமக்கள்!

திரையரங்குகள் திறந்தவுடன் பெரிய ஹீரோக்களின் படங்கள் ஓ.டி.டி பக்கம் செல்லாது என்று நம்பியவர்களுக்கு மோகன்லால் மூலம் செக் வைத்துள்ளன ஓ.டி.டி தளங்கள். ஏற்கெனவே சூர்யாவின் 2டி நிறுவனப் படங்களை மொத்தமாய் வாங்கியவர்கள், அடுத்ததாக மோகன்லால் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். ‘ப்ரோ டேடி’, ‘12த் மேன்’, ‘அலோன்’, ‘மரக்கார்’ உட்பட மோகன்லால் தயாரிக்கும் ஐந்து படங்கள் ஓ.டி.டி-யில் நேரடியாகக் களமிறங்குகின்றன. திரையரங்குகளில் திரையிட்டு 21 நாள்களுக்குப் பின்னர் ஓ.டி.டி தளத்துக்கு விற்பதற்கும் சில தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். அதனால், இந்த அதிரடி முடிவு என்கிறார்கள். காலம் மாறிப்போச்சு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள், நிர்வாகிகளை விஜய் சமீபத்தில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது ஒவ்வொருவரும் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்தப் போட்டோக்கள் தீபாவளிப் பரிசாக நிர்வாகிகளுக்கு வந்து சேர்ந்தன. தீபாவளிக்கு விஜய் படம் வராத குறையை இந்தப் போட்டோ தீர்த்து விட்டதாகப் பல மாவட்ட நிர்வாகிகள் குஷியில் உள்ளனர். செல்பி பிள்ளைகள்!

பாலிவுட் வரலாற்றில் முதல்முறையாக அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் ஒரு படத்தில் வில்லியாக நடிக்க சம்மதித்துள்ளார். தான் இயக்கும் ‘ராக்கி அர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் வில்லத்தனமான பாட்டியாக நடிக்கவேண்டும் என்று கரண் ஜோகர் ஜெயா பச்சனிடம் கேட்டபோது, அவருக்கே ஆச்சரியம். ‘‘என்னை எப்படி வில்லியாகப் பார்த்தீர்கள்’’ என்று கேட்டார். ரன்வீர் சிங்கிற்குப் பாட்டியாக நடிக்க இருக்கும் ஜெயா பச்சன், இதற்கு முன்பு வில்லி கேரக்டரில் நடித்ததே கிடையாது. கரண் ஜோகர் மிகவும் போராடித்தான் ஜெயா பச்சனை சம்மதிக்க வைத்தார். வில்லாதி வில்லி!

இன்பாக்ஸ்

தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தாலும், தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும் தீபாவளிக்கு மறுநாள் என்பது அதிக சுமையானது. வழக்கத்தைவிட அதிகமாகக் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டிய சூழல். இவர்களின் கஷ்டத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், மதுரை நகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டவர்கள், தீபாவளிக்கு மறுநாள் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்தார்கள். ‘‘மக்கள் அவரவர் பகுதிகளில் இதுபோலக் கைகொடுத்தால், தூய்மைப் பணியாளர்களின் சுமையை ஓரளவு குறைக்கலாம்’’ என்கிறார்கள் வாலிபர் சங்கத்தினர். நாங்க மதுரக்காரய்ங்க!

ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்துவருகிறார் திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா. கதிரிமங்கலம் தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்தவர், மாணவர்களோடு தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார். அவருக்குப் போடப்பட்ட வாழை இலையை எடுக்கச் சொல்லிவிட்டு, மாணவர்கள் சாப்பிடும் அதேபோன்ற தட்டிலேயே சாப்பிட்டார். வகுப்பறையில் மாணவர்களை அமர வைத்து, காகிதக் கப்பல் செய்து விளையாடினார். போர்டில் ஓவியம் வரைந்து அசத்தினார். தன் பள்ளிப் பருவம் குறித்து அவர் மனம் திறந்து பேசியது, மாணவர்களையும் ஆசிரியர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. சத்தான நிகழ்வு!

இன்பாக்ஸ்

தஞ்சாவூரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுவருகிறது. சான்றிதழைப் பெறுவதற்கு மூன்று நாள்களுக்கு மேல் ஆனதுடன், குழந்தையின் பெற்றோர்கள் இதற்காக அலைய வேண்டியிருந்தது. இது ஆணையர் சரவணக்குமார் கவனத்துக்குச் சென்றது. இப்போது, குழந்தை பெற்ற தாய் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் செல்லும்போதே கையில் பிறப்புச் சான்றிதழ் பெற்றுச் செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார். குழந்தை பிறந்த ஒரே நாளில் பிறப்புச் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுத்த ஆணையரின் செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரு வருடங்களாகக் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆனாலும் யாரும் குளிக்க முடியாது. இதனால் குற்றாலம் களையிழந்துவிட்டது. உள்ளூர் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு அமைப்பினர் குளிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். கானல் குற்றாலம்!

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் பரவியது போய், தற்போது கொரோனா அதன் வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கிறது. ஏப்ரல் 2020 முதல் ஜனவரி 2021 வரை எடுக்கப்பட்ட மாதிரிகளில், அமெரிக்காவின் அயாவோ மாகாணத்தில் 80 சதவிகித மான்களுக்கு மனிதர்கள் மூலம் கொரோனாத் தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 17 மில்லியன் மிங்குகளை அழித்துக்கொன்றது டென்மார்க் அரசு. ‘மிங்குகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனாத் தொற்று பரவலாம்’ என்ற அச்சம்தான் காரணம். அப்போதே கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன. தற்போது நல்லவேளையாக, மனிதர்களிடமிருந்து மான்களுக்குப் பரவியிருக்கிறது. ஒருவேளை மான்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தால், டென்மார்க் வழியில் அமெரிக்கா போயிருக்கும். மனிதம் உயிர்கொள்ளட்டும்!