Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

73 வயதில் பிஹெச்.டி முடித்திருக்கிறார், கன்னியாகுமரி மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பன்.

செம எனர்ஜியில் மின்னுகிறார் ராஷி கண்ணா. இந்தியில் கரண் ஜோகர் தயாரிப்பில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் `யோதா'வில் கமிட் ஆகியிருக்கிறார். அங்கே அவரை `வெல்கம் விண்மீன்' என வரவேற்றதில் ராஷிக்கு குஷி. தமிழிலும் அடுத்த ஆண்டு கார்த்தியின் `சர்தார்', தனுஷின் `திருச்சிற்றம்பலம்' என வரிசை கட்டும் ரிலீஸ்களை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார். வெல்கம்!

இன்பாக்ஸ்

முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்களின் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுந்தது. பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் உட்பட இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தின் 15 ஹெலிகாப்டர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் விபத்தைச் சந்தித்ததாக நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. பிபின் ராவத் சென்றது Mi-17 V5 ரக ரஷ்ய ஹெலிகாப்டர். உலகிலேயே அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட நவீன ரக ஹெலிகாப்டரான இதையே இந்திய விமானப்படை அதிகம் பயன்படுத்துகிறது. வி.ஐ.பி பயணங்களுக்கும் இதையே வாங்கியுள்ளது மத்திய அரசு. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ரக ஹெலிகாப்டர்கள் மூன்று விபத்தில் சிதறி விழுந்துள்ளன. வருமுன் காப்போம்!

ஒரு திரைப்படப்பாடலுக்குப் பாடலாசிரியர்கள் நான்கைந்து பல்லவிகள் எழுதுவது வழக்கம். அதில் பயன்படுத்தியதுபோக மிச்சமிருக்கும் பல்லவிகளையும், சில கவியரங்கக் கவிதைகளையும் சேர்த்து `மீந்துபோனது' என்ற தலைப்பில் புத்தகமாக்கியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். நீலம் பதிப்பக வெளியீடாக, வரும் சென்னை புத்தகக்காட்சியில் வெளியாகவிருக்கிறது இந்தப் புத்தகம். மீள் கவிதை!

இன்பாக்ஸ்

`மெட்ரோ மேன்' என்று அழைக்கப்படும் ஸ்ரீதரனைத் தேர்தலில் நிறுத்தி, சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலைப் பெரும் எதிர்பார்ப்புடன் சந்தித்தது பா.ஜ.க. ஆனால், ஒரு தொகுதியில்கூட அந்தக் கட்சி ஜெயிக்கவில்லை. இந்நிலையில், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஸ்ரீதரன். தேர்தல் தோல்வியில் பாடம் கற்றுக்கொண்டதாகச் சொல்லும் அவர், ``அரசியல் அடையாளம் இல்லாமலேயே சமூகப்பணிகளைச் செய்ய விரும்புகிறேன்'' என்கிறார். ``பா.ஜ.க தனது அணுகுமுறையை மாற்றாவிட்டால் கேரளாவில் வளர முடியாது'' என்று அட்வைஸும் கொடுத்திருக்கிறார் ஸ்ரீதரன். தெரிஞ்சா சரி!

இன்பாக்ஸ்

73 வயதில் பிஹெச்.டி முடித்திருக்கிறார், கன்னியாகுமரி மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பன். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர், `இன்றைய பயங்கரவாத உலகத்துக்கு காந்திய தத்துவம் எவ்வாறு பொருத்தமானது’ என்ற தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் பட்டம் பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறார் தங்கப்பன். கல்விக்கு வயது தடை இல்லை!

`மாநாடு' வெற்றியில் சிம்புவை விட, ஹேப்பி கல்யாணி பிரியதர்ஷன்தானாம். மலையாளத்தில் பிரணவ் மோகன்லாலின் `ஹிருதயம்', மோகன்லால்-பிருத்விராஜ் இணைந்து நடிக்கும் `ப்ரோ டாடி' ஆகிய படங்களை முடித்துக் கொடுத்துவிட்டார். `ஹிருதயம்' ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர டொவினோ தாமஸுடன், `தல்லுமாலா'விலும் கலகலக்கிறார் கல்யாணி. சூப்பரு!

இன்பாக்ஸ்

லக்னோ ஐ.பி.எல் அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் கௌதம் கம்பீர். 2022 ஐ.பி.எல் தொடரில் புதிதாகக் களமிறங்கப்போகிறது லக்னோ அணி. ஏற்கெனவே புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வைத்திருந்த சஞ்சீவ் கோயங்காதான் இந்த அணியின் உரிமையாளர். தங்கள் இரண்டாவது சீசனில், தோனியைக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியவர் இப்போது கம்பீரைத் தன் அணியில் இணைத்திருக்கிறார்! இந்த அணியின் பயிற்சியாளராக முன்னாள் ஜிம்பாப்வே வீரர் ஆண்டி ஃபிளார் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசல்ட் வரட்டும்!

திருநெல்வேலியைச் சேர்ந்த அருள் அரசு, `சிப்பிப்பாறை’ இனத்தைச் சேர்ந்த ‘ராக்கி’ என்ற ஆண் நாயையும், `தாரா’, ‘த்ரிஷா’ என்ற இரண்டு பெண் நாய்களையும் வளர்த்துவருகிறார். ‘த்ரிஷா’ விரைவில் குட்டி போடும் நிலையில் உள்ளது. எனவே த்ரிஷாவுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார். ``த்ரிஷா ரொம்ப புத்திசாலி. கதவைத் தட்டிட்டுதான் ரூமுக்குள்ள வரும். பசிச்சா, சாப்பாட்டுத் தட்டைக் கவ்வி எடுத்து வந்து சாப்பாடு கேட்கும். ஆடு, கோழிகளை பாதுகாப்பா கண்காணிச்சுக்கிட்டே இருக்கும். த்ரிஷாவுக்கு முன்னங்கால்களில் கண்ணாடி, வெள்ளி வளையல் போட்டு, கழுத்துல தங்கச் செயின் போட்டு கன்னத்துல சந்தனம் தடவி அழகு பார்த்தேன். வளைகாப்புக்கு வந்தவங்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து வச்சேன். `நாய்க்கு வளைகாப்பா'ன்னு பக்கத்துத் தோட்டத்துக்காரங்க சிரிச்சாங்க. `புள்ளையப் போயி நாயின்னு சொல்றீங்களே'ன்னு பதில் சொன்னேன்” என்கிறார் அருள் அரசு. பாசம் பாசம்தானே!

இன்பாக்ஸ்

காற்று மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குதிரை வண்டிப் பயணம் செய்கிறார் குடியாத்தம் அருகேயுள்ள சுண்ணாம்புப் பேட்டையைச் சேர்ந்த அருண்குமார். தைல நிறுவனம் நடத்திவரும் இவருக்கு, கார், பைக் சொந்தமாக இருந்தும், ஒன்றரை லட்சம் ரூபாய்க்குக் குதிரை ஒன்றை வாங்கி, வண்டியில் பூட்டி தினந்தோறும் சவாரி செய்கிறார். விரைவில், யானை வாங்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். செயல் விநோதமாக இருந்தாலும், அவரின் நோக்கம் பாராட்டுக்குரியது என்கிறார்கள் மக்கள். குதிரையும் பாவமாச்சே!

இன்பாக்ஸ்

`விழிப்புணர்வுச் செய்தியாக இருந்தாலும், அதை சுவாரஸ்யமாகச் சொன்னால்தான் மக்களிடம் போய்ச் சேரும்' என்பதைக் கோவை போலீஸார் நன்றாக உணர்ந்துள்ளனர். சமீபகாலமாக மீம்ஸ் விழிப்புணர்வை வைரல் ஆக்குகின்றனர். உதாரணத்துக்கு ஆன்லைன் ஆர்டர் மோசடி தொடர்பாக, ஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு டப்பா வந்ததாகக் கவுண்டமணி படத்துடன் ஒரு மீம்ஸ் உருவாக்கினர். இதுபோன்ற புகாருக்கான தொடர்பு எண்களும் அதிலேயே வழங்கப்படுவதால், இது பொது மக்களிடமும் ரீச் ஆகத் தொடங்கிவிட்டது. கலக்குங்க ஆபீசர்ஸ்..!

ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சட்டப்பிரிவு 370 வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019 ஆகஸ்ட்டில் ரத்து செய்தது மத்திய அரசு. `இந்தச் சட்டம் இருப்பதால்தான் காஷ்மீரில் மற்ற மாநில மக்கள் நிலம் வாங்க முடியவில்லை. காஷ்மீரும் தொழில் வளர்ச்சி அடைய முடியவில்லை' என்று காரணமும் சொல்லப்பட்டது. இதுவரை காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்கள் எத்தனை பேர் எவ்வளவு நிலம் வாங்கியிருக்கிறார்கள்? ''வெறும் ஏழு பிளாட்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன'' என்று புள்ளிவிவரம் தந்திருக்கிறது மத்திய அரசு. அவையும் அதிக பிரச்னை இல்லாத ஜம்மு பகுதியில்தான் வாங்கப்பட்டுள்ளன. அமைதி திரும்பட்டும்!