Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

சசிகலா வருகைக்கு முன்னரே அந்த வீட்டைப் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

இன்பாக்ஸ்

சசிகலா வருகைக்கு முன்னரே அந்த வீட்டைப் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

‘அல வைகுந்தபுரம்லோ’ படத்துக்குப் பின்னர், பூஜா ஹெக்டேவுக்கு எல்லாமே வெற்றிதான். சிரஞ்சீவி, ராம்சரண் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கும் படத்தில் பூஜாதான் ஜூனியருக்கு ஜோடி என்கிறார்கள். இந்தி, தெலுங்கு என இருமொழிகளில் வரவிருக்கும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, ரன்வீர் சிங்குடன் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ‘சர்க்கஸ்’ என இந்த ஆண்டு முழுக்கவே, பூஜா பெரிய ஹீரோக்களின் படங்களில் அடுத்தடுத்து புக் ஆகிவருகிறார். இந்தி, தெலுங்கு என இருமொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருவதால், மும்பையில் பிரமாண்ட ஃபிளாட் ஒன்றை வாங்கியிருக்கிறாராம். காற்றுள்ளபோதே...

இன்பாக்ஸ்

ராஜபாளையம் தொகுதியை பா.ஜ.க அடம்பிடித்து வாங்கி, அங்கு நடிகை கௌதமியை நிறுத்தும் என விருதுநகர் மாவட்ட பா.ஜ.க-வினர் கூறி வருகிறார்கள். ‘’ஆந்திராவைச் சேர்ந்த கௌதமிக்கு, அவரது சமூகத்தைச் சேர்ந்த தெலுங்கு பேசும் மக்கள் இங்கு அதிகமாக வாழ்கிறார்கள் என்கிற தகவல் சில ஆண்டுகளுக்கு முன் தெரிந்திருக்கிறது. அதிலிருந்தே இந்தத் தொகுதியை கௌதமி கவனித்து வந்திருக்கிறார்’’ என்கிறார்கள். சில வருடங்களாக ராஜபாளையம் பகுதிக்கு கட்சி நிகழ்ச்சிகளிலும், தனியார் அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அடிக்கடி வருகை தந்தவர், ‘கட்சி அனுமதி அளித்தால் இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதாக’ அப்போதே பேட்டிகள் தட்டினார். அவரது சமூகம் சார்ந்த இப்பகுதி தொழிலதிபர்கள் சிலர், கௌதமியை வெற்றி பெற வைக்க செலவும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்களாம். அதனால், ராஜபாளையம் தொகுதி கௌதமிக்கு கன்பார்ம் என்கிறார்கள். ‘சமூக’ அரசியல்!

ண்ணன் சிரஞ்சீவியைப் போலவே தனது அரசியல் பிரவேசத்துக்குப் பின்னர் வெளியாகியிருக்கும் படம் என்பதால், ‘வக்கீல் சாப்’ ரிலீஸில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார் பவன் கல்யாண். படத்தின் டிரெய்லர் முழுக்க பவன் கல்யாணே நிரம்பி இருந்தார். வக்கீல் சாபுக்கு அடுத்ததாக பவன் நடிக்க இருப்பதும் ரீமேக் படம்தான். மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தெலுங்கில் எடுக்கவிருக்கிறார்கள். இந்தப் படத்துக்காக எடை குறைப்பில் ஈடுபட்டு வருகிறாராம் பவன். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்முன் அவரது புகைப்படங்கள் வெளியே லீக் ஆகிவிடக்கூடாது என்பதால், கட்சி நிர்வாகிகள் சந்திப்பையும் கவனமாக நடத்திவருகிறாராம். என்னா பிளானிங்கு!

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், பா.ஜ.க மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில், ‘விவசாயிகளின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க-வில் இருக்கும் எவரையும் அழைப்பதில்லை’ என ஆங்காங்கே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பழக்கம் அப்படியே உத்தரப் பிரதேசத்துக்கும் இப்போது பரவியுள்ளது. ‘பா.ஜ.க-வில் இருக்கும் யாரையாவது குடும்ப விசேஷங்களுக்கு அழைக்கும் கிராம மக்கள், அதற்கு தண்டனையாக 100 பேருக்கு இலவச உணவு அளிக்க வேண்டும்’ என விவசாய சங்கங்கள் தீர்மானம் போட்டுள்ளன. மண்ணு கி பாத்!

நீலகிரியில் இந்த ஆண்டு பருவம் தவறிப் பெய்த மழையால் ஊட்டியில் உறைபனி சீசன் தள்ளிப்போனது. ‘இந்த ஆண்டு உறைபனி இனி இருக்க வாய்ப்பில்லை’ எனக் கருதிய வேளையில், மிகத் தாமதமாக பிப்ரவரியில் உறைபனி துவங்கியது. தாமதமாகத் துவங்கினாலும் உறைபனியின் தாக்கம் கடுமையாக உள்ளது. காலை மற்றும் இரவு வேளைகளில் கடுமையான குளிர் நிலவிவரும் வேளையில், கேத்தி பள்ளத்தாக்கில் பல இடங்களில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரும் பனிக்கட்டியாக மாறியது. இதற்கு ஒருபடி மேலே போய் அவலாஞ்சியில் ஓடைகளே உறையும் அளவுக்கு மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவுகிறது. வனத்துறை மற்றும் மின்வாரியப் பணியாளர்களைத் தவிர வேறு மனிதர்களின் நடமாட்டமே இல்லாத அவலாஞ்சி, முக்கூர்த்தி பகுதிகளில் ஒரே நாளில் 1,000 மி.மீ மழை என்பது சாதாரண ஒன்று. தற்போது கடுமையான உறைபனியால் காலை நேரத்தில் காஷ்மீர் போலப் காட்சியளிக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி உக்கிரமாக பனி இருப்பதாக தோடர் பழங்குடிகள் தெரிவிக்கின்றனர். என்னமோ நடக்குது!

இன்பாக்ஸ்

நெல்லையை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செலுத்திய காலத்தில் பாளையங்கோட்டையில் கோட்டை அமைத்துள்ளனர். அதற்குப் பிறகு வந்த பாளையக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் அந்தக் கோட்டையை நிர்வாக அலுவலகமாகப் பயன்படுத்தியுள்ளனர். கோட்டையின் ஒரு பகுதி, சிறையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையை ஆங்கிலேயர்கள் கைது செய்தபோது, இந்தக் கோட்டையில் உள்ள சிறையில் அடைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கு பாளையங்கோட்டை காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. அதனால் ‘மேடை போலீஸ் ஸ்டேஷன்’ என்று அழைக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோட்டை, இப்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இதைப் பழைமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர். சீக்கிரம் சீரமைங்கப்பா!

இன்பாக்ஸ்

திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயத்தின் நள தீர்த்தத்தில் புனித நீராடி, சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்வது லட்சக்கணக்கான பக்தர்களின் வழக்கம். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம், நள தீர்த்தத்தில் புனித நீராடத் தடைவிதிக்கப்பட்டு குளத்திலுள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குளத்தைச் சுற்றி தகரம் கொண்டு அடைக்கப்பட்டது. தற்போது தியேட்டர், பேருந்துகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள் என அனைத்திற்கும் விதிக்கப்பட்ட தடைகள் நீங்கி ஆயிற்று. டாஸ்மாக் கடைகளுடன் பார்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நள தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. இதனால் திருநள்ளாறு வரும் பக்தர்கள், தனியார் குளிக்கும் அறைகளில் ரூ. 50, 100 என அளித்து குளித்துவிட்டு மன நிறைவின்றி பகவானை தரிசனம் செய்து செல்கின்றனர். குளத்துக்கு மோட்சம் எப்போ?

இன்பாக்ஸ்

சொத்துக்குவிப்பு வழக்கில் தன்டனை முடிந்து விடுதலையான சசிகலா, தற்போது சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். விரைவில் தஞ்சாவூர் செல்லும் சசிகலா, மறைந்த தனது கணவர் நடராசனால் கட்டப்பட்ட பரிசுத்தம் நகர் 11-ம் நம்பர் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தபடி அரசியல் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். இதற்காக அந்த வீடு வாஸ்து முறைப்படி பிரத்யேகமான வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு என புதிய அறை ஒன்றையும் வடிவமைத்துள்ளனர். அவரது பாதுகாப்புக்காக, வீட்டைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். சசிகலா வருகைக்கு முன்னரே அந்த வீட்டைப் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஆத்தீ கமிங்!