Published:Updated:

இன்பாக்ஸ்

அலாயா ஃபர்னிச்சர்வாலா
பிரீமியம் ஸ்டோரி
News
அலாயா ஃபர்னிச்சர்வாலா

விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன.

 • ஐஸ்வர்யா ராய் பொது நிகழ்ச்சிகளில் தன் மகள் ஆராத்யாவுடன்கலந்துகொள்ளும் போதெல்லாம், குழந்தையின் கைகளை இறுகப்பிடித்தபடியோ, அணைத்தபடியோதான் இருப்பார். இதனால் ‘ஓவர் புரொடெக்டிவ்’ என்ற விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறார். ஆனாலும் இதை மாற்றிக்கொள்ளாத ஐஸ்வர்யா ராய் அதற்கான காரணத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய், ஆராத்யா
ஐஸ்வர்யா ராய், ஆராத்யா

‘என்னுடன் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இயல்பாக இருக்கும் ஆராத்யா, தன்னை யாராவது போட்டோ எடுப்பதைப் பார்த்துவிட்டால், அடுத்த அடி எடுத்து வைப்பதற்கே தயங்குவாள். அதனால்தான் பொது நிகழ்ச்சிகளில் ஆராத்யாவின் கைகளைப் பிடித்துக்கொண்டோ, அவளை அணைத்துக்கொண்டோ செல்கிறேன்’ என்றிருக்கிறார். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

 • ஊரடங்கு உத்தரவு அமலானது முதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமியின் பெயர்தான் சென்னையில் பலராலும் உச்சரிக்கப்பட்டது. மருத்துவம், இறப்பு உள்ளிட்ட அவசர காரணங்களுக்காகச் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விரும்புபவர்களின் மனுக்களை முதலில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்தான் நேரிலும் இணையதளம் மூலமாகவும் பெற்றுவந்தார்கள். இம்மனுக்களைப் பரிசீலித்து அனுமதி பாஸ் வழங்கும் பொறுப்பு ஜெயலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலட்சுமியின் ஒற்றைக் கையெழுத்திற்காக வி.ஐ.பிக்கள் முதல் சாமானியர்கள் வரை பலர் காத்திருந்தனர். பார்த்துப் பரிசீலிங்க!

 • உலகமே வீட்டில் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் பொழுதுபோக்காக பலரும் ஸ்ட்ரீமிங் தளங்கள் பக்கம் திரும்பியிருக்கின்றனர். இதனால் இந்த இக்கட்டான சூழலிலும் 2020-ன் முதல் காலாண்டில் (மார்ச் வரை) உலகம், முழுவதும் 1.58 கோடி புதிய வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். ஆனால், ‘இதை முழுவதையும் வளர்ச்சி என சொல்லிவிட முடியாது, பலரும் லாக்-டவுன் முடிந்த பிறகு வெளியேறலாம்’ என பங்குதாரர்களிடம் தெரிவித்திருக்கிறது அந்த நிறுவனம். மேலும், படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தாலும் ஏற்கெனவே படப்பிடிப்பு முடிக்கப்பட்டு போஸ்ட்-ப்ரொடக்ஷனில் பல தயாரிப்புகள் இருப்பதால் மக்களை தன்வசம் வைக்க போதிய புதிய உள்ளடக்கம் தங்களிடம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். கதைக்கா பஞ்சம்?

 • ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரதீப், நிகிதா தம்பதி கார்ப்பெட் பிசினஸ் செய்துகொண்டிருந்தவர்கள். ராஜஸ்தானைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் பேராசிரியர்களாகப் பணிபுரிபவர்கள் சுதி மற்றும் ராஷ்மி. இந்த இரு தம்பதியரும் சுற்றுலாவுக்காக நியூசிலாந்து சென்ற சமயத்தில் உலகையே உட்கார வைத்த ஊரடங்கு அவர்களையும் அங்கேயே தங்கவைத்துவிட்டது. எல்லாப் பயணப்பாதைகளும் மூடப்பட்டுவிட “எங்களுக்கு இந்தியால நிறைய வேலைகள் இருக்கு. எப்படியாவது எங்களை இங்கிருந்து ஊருக்குக் கூப்டுக்கோங்க” என்று கண்ணீர் மல்க மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். இவர்களோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கே இருப்பதாகச் சொன்ன அவர்கள் வேறொன்றையும் சொல்லியிருக்கிறார்கள். ‘இந்தியாவில் இருக்கும் நியூசிலாந்து மக்களை அழைத்துவர இங்கிருந்து அரசு ஏற்பாடு செய்யும் ஸ்பெஷல் விமானங்கள் டெல்லி வருகின்றன. இங்கிருந்து காலியாக வரும் அந்த விமானங்களிலாவது எங்களை அழைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யலாமே’ என்பதே அது. நியாயம்தானே!

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
 • விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கும் உப்பனா என்ற தெலுங்குத் திரைப்படம், ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியிருப்பதாகவும், அதில் விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், அது எதுவும் உண்மையான தகவல் இல்லையாம். உப்பனா படத்தின் கதை விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்திருப்பதால் அதன் ரீமேக் உரிமையை மட்டும் அவர் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம். #காத்திருப்போம்

 • லாக்டெளனால் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் செலிப்ரிட்டிகளில் பலர், தங்கள் சமூக வலைதளங்களில் ‘லைவ்’வில் வருவதுதான் இப்போது டிரெண்ட். இந்த வரிசையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டேக்குடன் தன் ரசிகர்களைச் சந்தித்தார். அதில் ஒரு ரசிகர், ‘உங்களுக்கு லாக்டெளன் எப்படிச் சென்றுகொண்டிருக்கிறது?’ என்று கேட்க, ‘மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு நானும் ஒரு காரணமாக இருந்தாலும், மூன்று குழந்தைகளுடன் இருப்பது ஒரு பாக்கியம்தான். இந்த லாக்டெளனில் என் ஒவ்வொரு பிள்ளையுடனும் இரண்டு மணிநேரம் செலவிடுகிறேன். மீதமுள்ள நேரத்தை அவர்களுடைய விளையாட்டுப் பொருள்களைச் சுத்தம் செய்வதில் செலவழிக்கிறேன்’ என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். கூல் டாடி!

அலாயா ஃபர்னிச்சர்வாலா
அலாயா ஃபர்னிச்சர்வாலா
 • பூஜா பேடியின் மகளான அலாயா ஃபர்னிச்சர்வாலா (அதான் பாஸ் பேரு!) நடித்த ஜவானி ஜானேமன் இந்த ஆண்டு ரிலீஸானது. ALAYA என்ற அவரது பெயரை எல்லாரும் ஆல்யா என்று அழைப்பதைப் பற்றி சொன்ன அவர் “எனக்கும் ஆலியா பட் பிடிக்கும். அப்டி கூப்டறது ஓகேதான். ஆனா என் பேர் அலாயா”என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்கிறார். முதல்நாள்ஷூட்டிங்குக்குச் சற்று முன் காலில் சுடச்சுட டீ கொட்டி தீப்புண் ஆகிவிட்டதாம். மேக்கப்பிலும் சரிசெய்ய முடியாமல் கிராஃபிக்ஸில் மறைத்தார்கள் என்பதை சமீபத்திய பேட்டியில் போட்டுடைத்திருக்கிறார். #தீயினாற் சுட்ட புண் கிராஃபிக்ஸால் ஆறும்!

 • கொரோனா சமயத்தில் மக்கள் சேவையாற்றுபவர்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக தங்களன்பைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். சீனாவிலிருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஐஸ்லாந்துக்குக் கொண்டு வந்த விமானத்தின் பைலட் ஐஸ்லாந்தின் மிக முக்கிய மருத்துவமனைகள் இருக்கும் பகுதிக்கு மேல் வட்டமடித்துள்ளார். கொஞ்ச நேரத்தில் அந்த போயிங் 767 ரக விமானத்தின் வட்டப்பாதையை ரேடார் கண்காணித்து வெளியிட்டது. அதைக் கண்ட ஐஸ்லாந்து மக்கள் நெகிழ்ச்சிக்குள்ளாகினர். பெரிய இதய வடிவத்தை அம்மருத்துவமனைகளுக்கு மேல் விமானம் மூலம் பறந்து அன்பை வெளிப்படுத்திய அந்த பைலட்டுக்கு நன்றி தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள் அம்மக்கள். அன்பைச்சொல்லப் பல வழிகள்.

 • இந்த லாக்டெளன், பல திரை ஆர்ட்டிஸ்ட்களை சமையல் கலைஞர்களாக அவதாரம் எடுக்க வைத்திருக்கிறது. அதில் புதுவரவு, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். சமீபத்தில் ஜான்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ வைரலானது. அதில், கட்டிலில் படுத்திருக்கும் தன் தங்கை குஷி கபூரிடம் தான் செய்த கேரட் கேக்கைக் கொடுத்து சாப்பிடச் சொல்கிறார். குறும்புக் கண்களுடன் தயங்கியபடி அதைச் சாப்பிட்ட குஷி, ‘இட்ஸ் குட்’ என்றதும், ‘உண்மையாகவா! இன்னும் சாப்பிடு!’ என்கிறார் ஜான்வி. சடாரென ட்விஸ்ட் அடித்த குஷி, ‘ஓ... நோ...’ எனச் சிரித்துக்கொண்டே கூறுவதை ஜான்வியும் ரசித்துச் சிரித்து என, சகோதரிகளின் குறும்பு ‘க்யூட்’ சொல்லவைக்கிறது. கூடவே, குஷியின் சிரிப்பில் அவர் ஜூனியர் ஸ்ரீதேவியாக வெளிப்படுவதும் ரசிக்க வைக்கிறது. கோலிவுட்டுக்கு வாங்க!

 • ஸ்டைலான தலைமுடியுடன் வலம் வந்த கபில்தேவ், சமீபப் புகைப்படங்களில் வழுவழு தலையுடன் வலம்வருவதில் அவரின் ரசிகர்கள் சிலருக்கு கவலையும் சிலருக்கு மகிழ்ச்சியும். இதுவும் ஒரு ஸ்டைல்தான் தல என்று சிலர் லைக்ஸ் போட, ‘வழுக்கைத் தலை கிளப்புக்கு வாருமய்யா!’ என்று கபிலை ஜாலி கேலி செய்திருக்கிறார் பாலிவுட் ஸ்டார் அனுபம் கெர். தலைக்குள்ள விஷயம் இருந்தா போதும்!

 • கொரொனாவோடு சேர்த்து வேலையின்மையும் அமெரிக்காவை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்று பரவிய பிறகு வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டியுள்ளது. மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்காக வழங்கப்படும் உதவித்தொகைக்காக கடந்த வாரம் மட்டும் 44 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். மொத்தமாக இந்த உதவித்தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2.6 கோடி பேர். விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வாஷிங்டன் நகரத்தில் அதன் வலைத்தளமே முடங்கியிருக்கிறது. இதுவரை இந்தளவு வேலையிழப்பு அமெரிக்காவில் நிகழ்ந்ததில்லை‌ என்பது குறிப்பிடத்தக்கது.

  அங்கிள் சாமுக்கு என்ன ஆச்சு ?