Published:Updated:

இன்பாக்ஸ்

ஆண்ட்ரியா
பிரீமியம் ஸ்டோரி
ஆண்ட்ரியா

`ரஷ்யாவுக்கு எதிரான போரில் பரிதவிக்கும் உக்ரைன் மக்களுக்கு உதவி செய்யுங்கள்' என்று தன் குடிமக்களுக்கு பிரிட்டன் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இன்பாக்ஸ்

`ரஷ்யாவுக்கு எதிரான போரில் பரிதவிக்கும் உக்ரைன் மக்களுக்கு உதவி செய்யுங்கள்' என்று தன் குடிமக்களுக்கு பிரிட்டன் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

Published:Updated:
ஆண்ட்ரியா
பிரீமியம் ஸ்டோரி
ஆண்ட்ரியா
இன்பாக்ஸ்

ஜெயம் ரவி இப்போது நடித்து வரும் `அகிலன்' படத்தை முடித்து விட்டு, இயக்குநர் எம்.ராஜேஷின் படத்திற்குச் செல்லவிருக்கிறார். ஹன்சிகாவை வைத்து ராஜேஷ் இயக்கிவரும் வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது. இதனை முடித்துவிட்டே ரவியின் படத்திற்கு வருகிறார் ராஜேஷ். இப்படத்தில் ரவிக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடி. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மியூசிக் ‘தாம்தூம்’னு இருக்கும்ல?

இன்பாக்ஸ்

இது ஆண்ட்ரியா சீசன். துபாயில் கோல்டன் விசா கிடைத்த பூரிப்பில் திளைப்பவர், இப்போது ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். `மாளிகை', `கா' என, அந்தப் பட்டியலில் மேலும் இரண்டு படங்கள் இணைந்திருக்கின்றன. வெல்கம்!

இயக்குநர் கே.பாலசந்தர் குறித்து கவிஞர் ரவிசுப்பிரமணியன் ஆவணப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டிருக்கிறார். கே.பி-யின் மொத்த வாழ்வையும் முன் வைக்கும் முயற்சி இது. பாலசந்தரின் வாழ்க்கை, சினிமாவை அவர் எதிர்கொண்ட விதம், அதன் தாக்கம் என அந்த ஆவணப்படம் செல்லுமாம்.சிம்பாலிக் ஷாட்ஸ் இருக்குமா?

இன்பாக்ஸ்

இந்த வருடத்திற்குள் கமல்ஹாசனின் கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவரப்போகின்றன. அந்தக் கவிதைகளை ஏற்கெனவே தன் இலக்கிய நண்பர்களுக்கு வாசித்துக் காண்பித்திருக்கிறார் கமல். கவிதைத் தொகுப்பை வெளியிட பல பதிப்பகங்கள் தயாராக இருந்தாலும் தானே சொந்தமாகக் கொண்டுவருவது என்ற முடிவில் இருக்கிறார் கமல். கவித கவித அபிராமி அபிராமி!

இன்பாக்ஸ்

‘ஒருத்தி’ படத்தில் நவ்யாநாயரின் நடிப்பைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார் பாவனா, “இந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஆச்சரியத்தில் நான் சீட்டின் நுனியில் அமர்ந்து முழு சினிமாவையும் பார்த்தேன். பத்து வருடங்களுக்குப் பிறகு நவ்யா பெரிய திரையில் வந்திருக்கிறார். நவ்யா நம்மிடம் உள்ள சிறந்த நடிகையில் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” என்று உணர்ச்சிப்பெருக்குடன் கூறியுள்ளார். சேச்சி செம ஹேப்பி!

இன்பாக்ஸ்

ஜெனிலியா திருமணத்திற்குப் பிறகு, குழந்தை, குடும்பம் என்று 10 ஆண்டுகளைக் கழித்துவிட்டார். கணவர் ரிதேத் தேஷ்முக்குடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் இதுவரை இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால் இப்போது இருவரும் சேர்ந்து நடிக்க முடிவெடுத்திருக்கிறார்கள். `மிஸ்டர் மம்மி' என்ற அப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க பிரிட்டனில் நடக்கிறது. இங்கிலாந்திலும் முட்டினாக் கொம்பு முளைக்குமா?

இன்பாக்ஸ்

பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன். `ரஷ்யாவுக்கு எதிரான போரில் பரிதவிக்கும் உக்ரைன் மக்களுக்கு உதவி செய்யுங்கள்' என்று தன் குடிமக்களுக்கு பிரிட்டன் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பிரிட்டிஷ் அரசும் உக்ரைனுக்கு உதவி செய்கிறது. ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்திருக்கிறது. ஆனால், இன்ஃபோசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் இன்னமும் தன் சேவையைத் தொடர்கிறது. அந்த சேவையில் ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா பங்குதாரராக இருக்கிறார். `ரஷ்யாவுக்கு பிரிட்டன் தடைகள் விதித்திருக்கும் நேரத்தில், நிதியமைச்சரின் மனைவி நிறுவனம் அங்கு பிசினஸ் செய்வது சரியா' போன்ற கேள்விகள் கேட்கப்பட, ``என் பொறுப்புகள் பற்றி மட்டும் கேளுங்கள். என் மனைவியின் பிசினஸுக்கும் எனக்கும் தொடர்பில்லை'' என்று சமாளித்திருக்கிறார் ரிஷி சுனக்.நியாயம்தானே!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ரெய்டு என்றாலே நெஞ்சுவலி, தலைமறைவு போன்ற ஜெய்சங்கர் காலத்துத் தொழில்நுட்பங்கள்தான் காலம் காலமாக இருந்துவருகின்றன. ஆனால் ஆதரவாளர்களைக் கணிசமாக இறக்கி, அவர்களுக்கு விதவிதமான உணவுகளைக் கொடுத்து ரெய்டுக்குப் புது முகவரி கொடுத்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கடந்த ஆண்டு அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் நடந்த ரெய்டின்போது, கோவையில் உள்ள அவர் வீடு உட்பட சில இடங்களில் திரண்ட கட்சியினருக்கு உணவு வழங்கப்பட்டது. இரண்டாவதாக நடந்த ரெய்டில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் உணவு, ஜூஸ், ஸ்நாக்ஸ்களை இறக்கி, திருமண வீடுகளுக்கே டஃப் கொடுத்தனர். இதற்காக ஒரு பிரபல ஹோட்டலில் ஆர்டர் கொடுத்துள்ளனர். இரண்டு ரெய்டுகளுக்கும் அந்த ஹோட்டலில் இருந்துதான் அனைத்துப் பண்டங்களும் வந்தன. ரெய்டின்போது ஹோட்டல் ஊழியர்கள் சிரித்த முகத்துடன் உணவுகளை விநியோகம் செய்ததுடன், “அண்ணே, அடுத்த ரெய்டு எப்போ வரும்?” என்று கேட்டதுதான் ஹைலைட்டான விஷயம். ரெய்டுக்கே தனி ரெய்டு நடக்கும் போலயே..!

இன்பாக்ஸ்

திருவாரூர் மாவட்டம் அகரதிருநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கைக்குழந்தையுடன் வாழ்ந்துவரும் அவர் மனைவி மற்றும் வயதான பெற்றோர்கள் ஏழ்மையில் தவித்துவருகிறார்கள். இதனை அறிந்த மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி பாலகிருஷ்ணன், குமரேசன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, புத்தாடை, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் குடும்பத்திற்கு 8.25 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளார். குமரேசனின் மனைவி சுதா நர்சிங் படித்தவர் என்பதால், திருவாரூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி பெற்றுத் தரவும் முயன்றுவருகிறார். சல்யூட் சார்!

இன்பாக்ஸ்

திருப்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அஸ்வின். தன் குடும்பத்தின் கஷ்டச்சூழல் குறித்துத் தன் கைப்பட `அன்புள்ள இறையன்பு மாமாவுக்கு' என்று தொடங்கி தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினான். தாங்கள் குடியிருக்க ஒரு வீடு கேட்டு அதில் கோரிக்கை வைத்திருந்தான். அந்தக் கடிதத்தையே மனுவாக எடுத்துக்கொண்டு, உடனே நடவடிக்கை எடுத்து ஒரு வாரத்திற்குள் வீடு ஒன்றை அஸ்வின் குடும்பத்திற்கு ஒதுக்கீடு செய்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இறையன்பு. மகிழ்ச்சி!

இன்பாக்ஸ்

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில், இதுவரை 250-க்கும் மேற்பட்ட தொல்லுயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சர்வதேசப் புவியியல் ஆய்வாளர்கள் இம்மாவட்டத்தை `உலக தொல்லுயிர்களின் கோட்டை' எனவும் குறிப்பிடுகிறார்கள். உலகளவில் 5 சதுர கி.மீ. பரப்பில் `பாழ்நிலப் பகுதி' என்னும் புவியியல் ஆச்சரியம் கொளக்காநத்தம் பகுதியில் இருக்கிறது. சில மாதத்திற்கு முன்புகூட குன்னம் அருகேயுள்ள ஓடையில் 8 அடி நீள கல்மரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி கடலாக இருந்தது என்பதற்கு உறுதியான சான்றுகளை புவியியல் ஆய்வாளர்கள் உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளனர். அடிக்கடி குன்னம், அரியலூர் பகுதியில் தொல்லுயிரிகள் கிடைப்பதால், இங்கு தொல்லுயிர்ப் பாதுகாப்புப் பூங்கா அமைக்க வேண்டும் என தொல்லுயிர்ப் படிமங்கள் பாதுகாப்புக் குழு வலியுறுத்திவருகிறது. தொன்மையே பெருமை!

இன்பாக்ஸ்

நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டவர் அம்ரித். கடந்த மாதம் இவரும் இவர் மனைவியும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். இதற்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 10 நாள்கள் சிகிச்சை பெற்றனர். மீண்டும்‌ பணியில் சேர்ந்த அம்ரித், கொரோனா சமயத்தில் கனிவுடன் கவனித்துக்கொண்ட கோவை இ.எஸ்.ஐ மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஊட்டியில் இருந்து 1,000 அலங்கார வகைத் தாவரங்களை பசுமைக் கொடையாக வழங்கி நெகிழ்ச்சியில் ஆழ்த்தி யிருக்கிறார். கனிவு கலெக்டர்!

இன்பாக்ஸ்

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயிலில் உள்ள 60 வயதுடைய அபயாம்பாள் என்கிற யானை, 50 ஆண்டுகளாக இவ்வூர் மக்களின் செல்லப்பிள்ளையாகவே கொண்டாடப்பட்டுவருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் யானை ஆர்வலர் ஒருவர், இந்த யானை குளிப்பதற்கு ஷவர் வசதி ஏற்படுத்தித் தந்தார். கடந்த வருடம் செல்வந்தர் ஒருவர் யானைக்கு வெள்ளிக்கொலுசு அணிவித்து அழகு பார்த்தார். இந்நிலையில், கோடை வெம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆடிட்டர் சம்பத்குமார் என்பவர், யானைக் கொட்டகையில் இரண்டு மின்விசிறி அமைத்துத் தந்துள்ளார். இதனால் அபயாம்பாள் ஈக்களின் தொந்தரவும் கோடையின் அனலும் குறைந்து உற்சாகமாகப் பிளிறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகிறது. அன்பு செய்வோம்!

மனிதன் இந்த பூமிக்குச் செய்திருக்கும் ஆகப்பெரும் கேடு பிளாஸ்டிக்தான். அதன் பலன்களை பல்வேறு வடிவங்களில் அனுபவித்துவருகிறோம். வெவ்வேறு இடங்களில் வாழும் 22 மனிதர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில், 17 நபர்களின் ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக் பைகளில் இருக்கும் பாலிஎத்திலீனும், பெட் பாட்டில்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் PET பிளாஸ்டிக்கும் அதிக அளவில் மனித உடலில் காணப்பட்டிருக்கிறது. அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால், கடல்சார் உயிரினங்களின் உடல்களில் ஏற்கெனவே இப்படியான பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.நெகிழியை நிராகரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism