Published:Updated:

இன்பாக்ஸ்

இளையராஜா, பாரதிராஜா
பிரீமியம் ஸ்டோரி
இளையராஜா, பாரதிராஜா ( படம்: ஸ்டில்ஸ் ரவி )

நீர்நிலைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது ஆகாயத்தாமரை. ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுகாக்களில் தாமிரபரணி ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துகிடக்கும்.

இன்பாக்ஸ்

நீர்நிலைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது ஆகாயத்தாமரை. ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுகாக்களில் தாமிரபரணி ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துகிடக்கும்.

Published:Updated:
இளையராஜா, பாரதிராஜா
பிரீமியம் ஸ்டோரி
இளையராஜா, பாரதிராஜா ( படம்: ஸ்டில்ஸ் ரவி )

தன் நண்பன் பாரதிராஜாவுக்காக இளையராஜா ஒரு பெரிய இசைக்கச்சேரியை நடத்திக்கொடுக்கவிருக்கிறார். அதிலிருந்து கிடைக்கும் தொகை பாரதிராஜாவிடம் கையளிக்கப்படும். இதற்காக குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பாரதிராஜாவைப் பாராட்டி அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கதாநாயகிகளும் முக்கிய ஹீரோக்களும் பேசுகிறார்கள். விழா சென்னையிலா அல்லது மதுரையிலா என்பது மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நட்பே துணை!

இன்பாக்ஸ்

புஷ்பா 2-ஐ பெரிதும் எதிர்பார்க்கிறார் பகத் பாசில். முதல்பாகத்தைவிட இதில் அவருக்கு மிரட்டலான காட்சிகள் இருக்கிறதாம். புஷ்பா படம் ஆரம்பிக்கும்போது அதை இரண்டு பாகங்களாகக் கொண்டுவரும் யோசனையே இல்லை. பகத்பாசிலின் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பின்போதுதான் இயக்குநர் சுகுமாருக்கு அந்த ஐடியா வந்ததாம். ஆனால், இப்போது மூன்றாவது பாகத்திற்கான கதையும் ரெடியாகிவிட்டதாம். மூணு ஃபயர்!

`கார்கி' வெற்றி சாய்பல்லவியை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. தெலுங்கில் பிசியாக இருந்தாலும் கோவையை விட்டு விலகாமல் இருந்தவர் இப்போது ஈ.சி.ஆரில் கடற்கரையையொட்டி வீடு பார்த்து சென்னைக்கே குடிவந்துவிட்டார். அவரின் புத்துணர்வுக்கு அதிகாலை வாக்கிங்தான் காரணம் என்கிறார். ஸோ, ஈ.சி.ஆர் அதிகாலை வாக்கிங்கில் உங்கள் எதிரில் வருவது சாய்பல்லவியாகக்கூட இருக்கலாம்! நடை பழகும் ‘மலர்!’

சமீபகாலமாக திருக்குறள்மீது மிகுந்த ஈடுபாட்டோடு இருக்கிறார் பிரபுதேவா. சென்னையில் உள்ள அவரது வீட்டின் முகப்பில் 5 அடி உயர வள்ளுவர் சிலை ஒன்றை ஆசை ஆசையாய் நிறுவி வைத்திருக்கிறார். மகாபலிபுரத்தில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் ஆர்டர் செய்து சிலையை வாங்கியிருக்கிறார். பிரபுதேவாவுக்கு மிகவும் பிடித்த குறள், `அன்பிலார் எல்லாம் தமக்குரியர்...' தானாம். அன்பே சிவம்!

இன்பாக்ஸ்

புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, அன்னவாசல் காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறார். நிறைமாத கர்ப்பிணியான ஜெயந்திக்கு, காவல் நிலையத்திலேயே வைத்து வளைகாப்பு நடத்தத் திட்டமிட்டார்கள் சக காவலர்கள். இலுப்பூர் டி.எஸ்.பி அருள்மொழி அரசு உட்பட காவலர்கள் அனைவரும் சீர்த்தட்டு சுமந்து வந்தார்கள். ஜெயந்தியையும் அவரின் கணவரையும் அமரவைத்து சந்தனம் பூசியும் ஜெயந்திக்கு வளையல் அணிவித்தும் கொண்டாடி மகிழ, நெகிழ்ந்துவிட்டார் ஜெயந்தி. காக்கிக்குள் ஈரம்!

இன்பாக்ஸ்

நீர்நிலைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது ஆகாயத்தாமரை. ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுகாக்களில் தாமிரபரணி ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துகிடக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் அகற்றிக்கொண்டே இருப்பார்கள். மிகப்பெரும் தொல்லையாகப் பார்க்கப்பட்ட ஆகாயத்தாமரைக்கு இப்போது பெரும் மதிப்பு வந்துவிட்டது. அகற்றி, கரையில் வீசப்படும் ஆகாயத்தாமரையின் தண்டுப்பகுதியை வெயிலில் நார் பிரித்தெடுத்து இயந்திரம் மூலம் மணிபர்ஸ், பைகள், கூடைகள், அழகுப்பொருள்கள், டேபிள் மேட் தயாரிக்கும் பயிற்சியை மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘கிரியேட்டின் பீ’ நிறுவனம் வழங்கிவருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் தயாரிக்கும் பொருள்களுக்குப் பெரிய டிமாண்ட். தாமரைக்கு டிமாண்டா?

இன்பாக்ஸ்

குமாரபாளையத்தைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளியான சண்முகம், கடந்தவாரம் தன் மாற்றுத்திறனாளி மனைவி பாண்டிச்செல்வி, மகன் நவீனுடன் சென்னை சென்று தன் மகனின் கல்லூரிக் கல்விக்கு உதவும்படி முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்தார். இதையடுத்து, சண்முகத்தின் வீட்டுக்குச் சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கல்விக்கட்டணத்தைத் தந்ததோடு `எந்த உதவியாக இருந்தாலும் கூப்பிடுங்கள்' என்று கூறிவிட்டு வந்திருக்கிறார். அதுமட்டுமன்றி, முதல்வர் ஸ்டாலினும் நவீனோடு போனில் பேசி, `நான் இருக்கேன். நல்லாப் படி' என்று உற்சாகப்படுத்த, சண்முகம் குடும்பம் நெகிழ்ந்துபோயிருக்கிறது. கல்விக் கொடை!

ராமாயணம், மகாபாரதத்தை மையமாக வைத்துப் பல திரைப்படங்கள் வந்துவிட்டன. ஆனாலும் புதிது புதிதாகப் படங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. லேட்டஸ்ட்டாக பாலிவுட்டில் இரண்டு படங்கள் வெளிவரத் தயாராக இருக்கின்றன. தவிர, ராமன், ராவணனாக ரன்பீர் கபூர், ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க இன்னொரு ராமாயணப் படமும் வரவிருக்கிறது. நிதேஷ் திவாரி இந்தப் படத்தை இயக்குகிறார். சமீபத்தில் ரன்பீர் இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். ராமன் எத்தனை ராமனடி...

இன்பாக்ஸ்

கோவையின் முக்கிய அடையாளமான விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் வேலாயுதத்தின் சொந்த ஊர் மேலூர் அருகேயுள்ள ஆட்டுக்குளம். தன் பதிப்பகம் மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டு வரும் வேலாயுதம், சொந்த ஊரில் உள்ள நூலகத்துக்கு பல துறைகள் சார்ந்த 1660 நூல்களை வழங்கினார். நூல்கள் வழங்கும் நிகழ்வை கலெக்டர் உட்பட பலரையும் அழைத்து திருவிழா மாதிரி கொண்டாடிவிட்டார்கள் ஊர்மக்கள். ஊருக்கொரு நூலகம்!

இன்பாக்ஸ்

பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்பீர் கபூர்-ஆலியா பட் தங்களது குழந்தைக்காகக் காத்திருக்கிறார்கள். அநேகமாக இரட்டைக் குழந்தைகளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களாம். குழந்தை பிறக்கும்முன்பே பெயர்தேடும் பணியில் இறங்கிவிட்டார்கள் இருவரும். பெயர் R என்ற எழுத்தில் தொடங்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்களாம். ட்ரீட் எப்போ?

இன்பாக்ஸ்

சுகன்யாவின் மகளை பா.இரஞ்சித் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. சுகன்யாவின் மகள் பரதநாட்டியம் பயின்றவர் என்பதாலும், அப்படி ஒரு கேரக்டர் படத்திற்குத் தேவைப்படுவதாலும் அவரை அணுகியிருக்கிறார்கள். மகளுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் என்றாலும், சுகன்யா இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. அதைப்போல கௌதமியின் மகளைத் தேடியும் சினிமா வாய்ப்புகள் குவிகிறது என்பதால், அவர் வீட்டிலிருந்தும் நல்ல தகவல் வரலாம். வருக வாரிசுகளே!

நீலகிரியில் வாழ்ந்துவரும் குரும்பர் பழங்குடிகள் ஓவியங்கள் வரைவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். காட்டில் கிடைக்கும் குறிப்பிட்ட பூ, இலை, செடி, கொடிகளில் இருந்து இயற்கை வண்ணங்களைக் குழைக்கும் பாரம்பர்ய அறிவையும் பெற்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பர்யம் கொண்ட குரும்பர்களின் ஓவியங்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், குன்னூர் அருகில் உள்ள புதுக்காடு பழங்குடி மக்கள் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் பாரம்பர்ய ஓவியங்களைத் துணிப் பைகளில் வரைந்து விற்பனை செய்துவருகின்றனர். பழங்குடிகளின் வாழ்வியலைச் சித்திரிக்கும் ஓவியங்கள் தாங்கிய இந்தத் துணிப் பைகள் நல்ல வரவேற்பு பெற்றுவருகின்றன. தொல்கலை வளர்க!