Published:Updated:

இன்பாக்ஸ்

ஜான்வி கபூர்
பிரீமியம் ஸ்டோரி
ஜான்வி கபூர்

பசுப் பாதுகாப்புக்காகப் புது மசோதா கொண்டு வந்திருக்கிறது அசாம் மாநில அரசு. `வாகனங்களில் பசுக்களைக் கொண்டு சென்றால், அவை பறிமுதல் செய்யப்படும்.

இன்பாக்ஸ்

பசுப் பாதுகாப்புக்காகப் புது மசோதா கொண்டு வந்திருக்கிறது அசாம் மாநில அரசு. `வாகனங்களில் பசுக்களைக் கொண்டு சென்றால், அவை பறிமுதல் செய்யப்படும்.

Published:Updated:
ஜான்வி கபூர்
பிரீமியம் ஸ்டோரி
ஜான்வி கபூர்

ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதியின் மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட்டுக்குள் நுழைந்தாலும், ஜான்வி கபூருக்கு நடிகை என்கிற பெயரை வாங்கிக்கொடுத்தது பேய்ப் படமான ரூஹிதான். `கோலமாவு கோகிலா' படத்தின் ரீமேக்கான ‘குட்லக் ஜெர்ரி’ படத்தில் நயன்தாராவாக உருமாற இருப்பது ஜான்வி தான். படங்கள் வெளியாகிறதோ இல்லையோ, வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படங்கள் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்வதில் ஜான்வி எப்போதும் பிஸி. தற்போது அவர் வெளியிட்டிருக்கும் நீல நிற காஸ்ட்யூம் தோற்றத்தைப் பார்த்து `சின்ட்ரெல்லா’ என உருகுகிறார்கள் ரசிகர்கள். சில்ல்ல்...

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பசுப் பாதுகாப்புக்காகப் புது மசோதா கொண்டு வந்திருக்கிறது அசாம் மாநில அரசு. `வாகனங்களில் பசுக்களைக் கொண்டு சென்றால், அவை பறிமுதல் செய்யப்படும். அவற்றைப் பாதுகாக்க தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் காப்பகங்கள் அமைக்கப்படும். அவற்றின் சாணம் தேயிலைத் தோட்டத்துக்குத் உரமாகும்' போன்ற விஷயங்களைத் தாண்டி இன்னொரு விஷயம் சர்ச்சையாகியுள்ளது. ``செயற்கைக் கருவூட்டல் முறையில் உயிரணுக்களை ரகம் பிரித்து, இனி பசுக்களுக்குச் சினை ஊசி செலுத்தப்படும். இனி அசாம் பசுக்கள் பெண் கன்றுக்குட்டிகளை மட்டுமே ஈனும். இன்னும் 20 ஆண்டுகள் கழித்து அசாமில் பசுக்கள் மட்டுமே இருக்கும். காளைகள் இருக்காது'' என்று கூறியிருக்கிறார் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா. ``பழங்காலத்தில் பசுக்களே அதிகம் இருந்தது. அதனால்தான் காமதேனு பற்றி புராணங்களில் குறிப்பு இருக்கிறது'' என்று காரணமும் சொல்கிறார் அவர். `காளைகளே இல்லாமல் போவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்' என்று கவலை தெரிவிக்கிறார்கள் கால்நடை நிபுணர்கள். முடியல!

பல மாதங்கள் லாக்டௌனிலேயே கழிந்துவிட்டதால், கௌதம் வாசுதேவ் மேனன் காரை வீட்டை விட்டு வெளியே எடுப்பதேயில்லையாம். தெருவைத் தாண்டிப் பெரிதாக வெளியே செல்லாததால், பைக்கிலேயே வலம் வரத் தொடங்கியவர். தற்போது முற்றிலுமாக கார்ப் பயணங்களைத் தவிர்த்துவிட்டார். ஷூட்டிங் ஸ்பாட், எடிட்டிங் ஒர்க் என எதுவாக இருந்தாலும், பைக் பயணம்தான். நீங்கள் சென்னை அடையாறு ஏரியாவில் வசிப்பவராக இருந்தால், சிக்னலில் காத்திருக்கும் பைக்கில் கௌதம் மேனனைப் பார்க்கலாம். ஏனோ வாகனம் மாறுதே!

இன்பாக்ஸ்

ஒலிம்பிக் தொடர் முடிந்ததும் நடக்கும் மற்றுமொரு தொடர், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக். பதக்கம் வென்றால் மட்டுமே, மீடியா வெளிச்சம்கூட இவர்களின் மேல் விழும். அப்படியிருக்கும் சூழலில், ஆறு முறை நீச்சலுக்கான ஒலிம்பிக் பதக்கம் வாங்கிய அமெரிக்காவின் மேயர்ஸ் இந்த டோக்கியோ தொடரிலிருந்து விலகியிருக்கிறார். பார்க்க, கேட்க முடியாத மாற்றுத்திறனாளியான மேயர்ஸ் கேட்டது எல்லாம் தனக்கு ஓர் உதவியாளர் வேண்டும் என்பதுதான். ஆனால், அதை ஒலிம்பிக் நிர்வாகமும், அமெரிக்காவின் ஒலிம்பிக் குழுவும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. கொரோனாச் சூழல் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என்பது உண்மைதான் என்றாலும், பாரா ஒலிம்பிக்கில் தொடர் சாதனைகள் படைத்திருக்கும் ஒரு வீரருக்குக்கூட இதுதான் கள யதார்த்தம் என்பது துயரமானது. பாவக்கதைகள்.

நாடாளுமன்றக் கட்டடத்தின் அறை எண் 4, பா.ஜ.க-வுக்கான அலுவலகமாகப் பாரம்பரியமாக ஒதுக்கப்படும். இதையே அலுவலக அறையாக வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் பயன்படுத்தி வந்தனர். வாஜ்பாய் இப்போது இல்லை. அத்வானியும் இப்போது எம்.பி இல்லை. இந்த அறை இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இப்போது இதைப் பயன்படுத்தவுள்ளார். இந்த அறையின் வாசலில் இருந்த வாஜ்பாய், அத்வானி பெயர்ப் பலகைகளை, இவ்வளவு காலமும் அகற்றாமல் அப்படியே வைத்திருந்தார்கள். புதுப்பிக்கும்போது அவற்றை அகற்றிவிட்டனர். 'பா.ஜ.க புதிய தலைமுறையை நோக்கிப் பயணிக்கிறது என்பதற்கான அடையாளம் இது' என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். பார்க்கத்தானே போறோம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் குண்டறா பகுதியில், இளம் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார் ஒருவர். அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண்ணின் தந்தைக்குப் போன் செய்த மாநில அமைச்சர் சசீந்திரன், 'அந்த வழக்கை சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டும்' என்ற ரீதியில் பேசியிருக்கிறார். அந்த ஆடியோ வெளியாகிவிட, 'பெண்ணியத்தை அவமானப்படுத்தும் விதமாக அமைச்சர் சசீந்திரன் பேசியுள்ளார்' என எதிர்க்கட்சியான காங்கிரஸ் பிரளயத்தைக் கிளப்பியுள்ளது. சி.பி.எம் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்தான் சசீந்திரன். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷம் வலுக்கிறது. சரிதான்!

கொரோனா ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிட்டது. ஆனாலும், வரும் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் குண்டாறு அணைக்கட்டு அமைந்துள்ள பகுதிக்கு மேல் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் இருக்கின்றன. அந்த நிலங்கள் வழியாக மலையிலிருந்து வரும் தண்ணீரை மறித்து செயற்கையாக அருவி அமைத்து அதில் குளிக்க சிலர் கட்டணம் வசூலித்து வந்தார்கள். இதுபற்றி அறிந்த தென்காசி கலெக்டர் கோபால சுந்தரராஜ், தனியார் அருவிகளில் குளிக்கவும் தடை விதித்துவிட்டார். கூட்டம் தவிர்!

நீச்சல் என்றால் மைக்கல் பெல்ப்ஸ், ஓட்டம் என்றால் உசேன் போல்ட், அந்த வரிசையில் கார் ரேஸிங் என்றால் தற்போது ஹாமில்டன் என மாறி வருகிறது. பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீ பந்தயத்தை எட்டாவது முறையாக வென்று சாதனை செய்திருக்கிறார். 52 லேப்கள் கொண்ட ரேஸில் 50 லேப்கள் பின் தங்கியிருந்தும், பத்து நொடிகள் பெனால்ட்டி பெற்றிருந்தும், தானொரு சாம்பியன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஹாமில்டன். அசுர வேகம்!

இன்பாக்ஸ்

நம்மூருக்கு எப்படி பொன்னியின் செல்வனோ, அப்படித்தான் ஹாலிவுட்டுக்கு DUNE. பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் எதுவும் கைகூடவில்லை. ஒருவர் படம் எடுக்க ஆசைப்பட்டு, அவர் எடுக்க நினைத்த அந்தச் சம்பவமே டாக்குமென்டரி ஆன வரலாறுகள் டியூன் படத்துக்கு உண்டு. இப்போது படம் தயார். அரைவல், சிகாரியோ, பிளேடு ரன்னர் என தான் எடுத்த எல்லாப் படங்களிலும் தனி முத்திரை பதித்துவரும் டென்னிஸ்தான் படத்தின் இயக்குநர். திமோதி, ரெபக்கா ஃபர்கஸன், ஜேசன் மோமோ, படிஸ்டா என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றிருக்கிறது. அமெரிக்கத் திரையரங்குகளில் அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கும் திரைப்படம், கொரோனா மனது வைத்தால் நம் நாட்டிலும் வெளியாகலாம். வரும் ஆனா வராது!

உத்தரகாண்ட் மாநில அமைச்சர் சுவாமி யதீஷ்வரானந்த், விநோதமான ஒரு சம்பவம் செய்து இந்தியா முழுக்க பிரபலமாகியுள்ளார். வேறு இரண்டு அமைச்சர்களுடன் ஓர் ஆலோசனைக்கூட்டத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார் யதீஷ்வரானந்த். அவரது முகத்தில் இருக்க வேண்டிய மாஸ்க், கால் கட்டை விரலில் மாட்டியிருக்கிறது. இந்தப் புகைப்படம் வைரலானதும், `உருமாறிய கொரோனா வைரஸை எதிர்கொண்டு மூன்றாவது அலையை முறியடிக்க புது டெக்னிக் சொல்லித் தருகிறார் அமைச்சர்' என அவரைக் கிண்டல் செய்கிறார்கள் எதிர்க்கட்சியினர். இதெல்லாம் என்ன புதுசா?

இன்பாக்ஸ்

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களை எடுத்து இணையத்தில் விற்றதற்காகக் கைதாகியுள்ளார். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க 25 லட்ச ரூபாய் வரை லஞ்சம் தருவதாக மும்பை போலீஸிடம் அவர் பேரம் பேசியிருக்கிறார். இந்நிலையில், ``நான் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கே பிசினஸ் செய்வது சுலபம். யாருக்கும் லஞ்சம் தரத் தேவையில்லை. இந்தியாவில் அப்படி இல்லை. நான் லஞ்சத்துக்கு எதிரானவன் என்பதால் நஷ்டங்களைச் சந்தித்தேன்'' என ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோவைத் தேடி எடுத்து அவரை ட்ரோல் செய்கிறார்கள் நெட்டிசன்கள். ஊழ்வினை!

டீக்கடைகளுக்கு அடுத்தபடியாக அரசியல் பேசும் இடங்களில் சலூன் கடையும் ஒன்று. கவர்ச்சிப் படங்கள், அரசியல் விவாதம் ஏதுமின்றி, தன் கடைக்கு வருபவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, சலூன் கடைக்குள் நூலகத்தை அமைத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த பொன். மாரியப்பன். தூத்துக்குடி, மில்லர்புரம் பகுதியில் உள்ளது இவரது `லைப்ரரி சலூன்.’ சுமார் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில் புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். செல்போனில் மூழ்கிக் கிடக்கும் தன் வாடிக்கையாளர்களுக்காக நூலகம் தொடங்கியதாகக் கூறுகிறார் மாரியப்பன். இதனால் கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதுடன், தங்கள் கைவசமுள்ள புத்தங்களையும் நூலகத்திற்காகக் கொடுத்துச் செல்கிறார்கள் பலர். ``என்னோட கடைக்கு வர்றவங்க யாரும் செல்போன் பார்ப்பதில்லை. முடிவெட்டிய பிறகும் சில நிமிடங்கள் உட்கார்ந்து புத்தகத்தைப் படித்துவிட்டு, பொறுமையாக வீட்டுக்குப் போறவங்களும் உண்டு” என்கிறார் மாரியப்பன். கற்க கசடற!