Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ராஜ்கமல் நிறுவனத்தை பெரும்பட நிறுவனமாக ஆக்கும் முயற்சியில் இருக்கிறார் கமல்.

இன்பாக்ஸ்

ராஜ்கமல் நிறுவனத்தை பெரும்பட நிறுவனமாக ஆக்கும் முயற்சியில் இருக்கிறார் கமல்.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

T23 புலியை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக வேட்டைத் திறனை இழந்திருந்த அந்த ஆண் புலி, கடந்த ஆண்டு இறுதியில் கூடலூர், மசினகுடி பகுதிகளில் அடுத்தடுத்து கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கி வந்தது. கடைசியில் முதுமலைப் புலிகள் காப்பகத்திற்குள் நுழைந்தது. புலிகள் நிறைந்த காட்டில் ஒற்றைப் புலியைத் தேடிப் பிடிக்கும் சவாலான பணியை வனத்துறை ஏற்றது. பல துறைகளின் கூட்டு முயற்சியில் 20 நாள்களுக்கும் மேலாகப் போராடி T23 புலியை உயிருடன் பிடித்து சாதித்தனர். இதற்காக பாரம்பரிய அறிவுடன் களமாடிய பழங்குடி வேட்டைத் தடுப்புக் காவலர்கள் காலன், மாதன், பொம்மன் ஆகிய மூன்று பேருக்கும் உலக புலிகள் தினத்தில், மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. ‘ஆட்கொல்லி' என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட இருந்த புலியை உயிருடன் மீட்ட இவர்களுக்குப் பசுமை வாழ்த்துகள் குவிகின்றன. இயற்கைக் காவலர்கள்!

இன்பாக்ஸ்

கோவை மாநகர எல்லைக்குள் இருக்கும் குளக்கரைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல நூறு கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டன. பல்வேறு விமர்சனங்களைக் கடந்து, இந்தக் குளக்கரைகளை வணிகரீதியாக ஹிட்டாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. படகுச்சவாரி உள்ளிட்ட நீர் விளையாட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளனர். சமீபத்தில் வெளியான ஆர்.ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் சில காட்சிகள் உக்கடம் குளக்கரையில்தான் எடுக்கப்பட்டன. இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட குளக்கரைகள் உள்ளிட்ட அனைத்து ஸ்பாட்களையும் குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து சினிமா மற்றும் சீரியல் ஷூட்டிங்குக்கு விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஸ்டார்ட் கேமரா... ஆக்‌ஷன்..!

இன்பாக்ஸ்

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்', ‘நானே வருவேன்', ‘வாத்தி' ஆகிய படங்கள் அடுத்தடுத்த வரிசையில் ரிலீஸ் ஆகின்றன. அடுத்து ‘சாணிக் காயிதம்' அருண் மாதேஸ்வரனின் `கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கிறார். செப்டம்பரில் அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இதனிடையே அவர் ‘பியார் பிரேம காதல்' இளன் படத்தில் இணைகிறார். `கேப்டன் மில்லர்’ படம் சுதந்திரத்திற்குமுன் நடக்கும் ஒரு பீரியட் பிலிம் என்கிறார்கள். தனுஷின் படங்களில் அது பெரிய பட்ஜெட் படமாகக்கூட வரலாம் எனவும் தகவல். அடுத்த விருதுக்கு ரெடி!

இன்பாக்ஸ்

சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதற்கு முன்பு இருவரும் சேர்ந்து ஐதராபாத்தில் பிரமாண்ட பங்களா ஒன்றை வாங்கியிருந்தனர். அந்த வீட்டை விவாகரத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து விற்று, பணத்தைப் பிரித்துக்கொண்டனர். ஆனால், அந்த வீட்டின் நினைவுகள் சமந்தாவை விடவில்லை. ஏற்கெனவே விற்ற விலையைவிட அதிக பணம் கொடுத்து அந்த வீட்டை சமந்தா வாங்கி அதில் தன் அம்மாவுடன் வசித்துவருகிறார். சில நேரங்களில் சில சென்டிமென்ட்!

இன்பாக்ஸ்

ராஜ்கமல் நிறுவனத்தை பெரும்பட நிறுவனமாக ஆக்கும் முயற்சியில் இருக்கிறார் கமல். அதற்காக நிதி திரட்ட முதல்கட்டமாக அமெரிக்காவுக்கு ஒரு மாதம் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கே இருக்கிற ஹாலிவுட் தயாரிப்பாளர்களிடம் பேசுகிறார். இந்தப் பயணத்தை முடித்துத் திரும்பியதும், அடுத்து பிரிட்டன் போகிறார். வேகமெடுக்கிற கமலைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். நாயகன் மீண்டும் வர..!

இன்பாக்ஸ்

அஜித் 61-க்கு சரியான வில்லனைத் தேர்ந்தெடுக்க அஜித், இயக்குநர் வினோத் இரண்டு பேரும் ஆலோசனை செய்து சஞ்சய் தத்தைத் தேர்ந் தெடுத்திருக்கிறார்கள். அவருக்குக் கதை சொல்ல வரலாமா என்று கேட்டதற்கு, ‘‘அவ்வளவு தூரம் வந்து அலைய வேண்டாம்... வீடியோ காலிலேயே பேசிவிடலாம்'' என்று சொல்லிவிட்டாராம். கதையைக் கேட்ட அடுத்த கணமே ஓகே சொல்லிவிட்டாராம். சஞ்சய்க்கு அஜித்தோடு ஒர்க் பண்ண வேண்டும் என்று ஆசை இருந்ததே இதற்குக் காரணம். வலிமையான வில்லன்!

ஜாக்கி ஷெராப் மகன் டைகர் ஷெராப், பாலிவுட் நடிகை திஷா பதானியைக் காதலித்துவந்தார். காதலை வெளியில் சொல்லாவிட்டாலும், இருவரும் தனி வீட்டில் சேர்ந்தே வாழ்ந்தனர். இப்போது அவர்கள் பிரிந்து விட்டதாகத் தகவல். பல முறை திருமணப் பேச்சை திஷா எடுத்துப் பார்த்தும் ‘இப்போது வேண்டாம்' என்று டைகர் ஷெராப் தெரிவித்துவிட்டதால் வேறு வழியில்லாமல் பிரிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. மீண்டு வருக!

மனைவி கிருத்திகாவின் இயக்கத்தில் நடிக்க ரெடியாகிறார் உதயநிதி. கிருத்திகாவிடம், ‘எனக்கும் ஒரு கதை ரெடி பண்ணு' என உரிமையாய் உதயநிதி கேட்கவும், அவருக்குப் பொருந்துகிற மாதிரி த்ரில்லர் கதை ஒன்று ரெடியாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் கிருத்திகா. உதய் ஷாக் ஆகி, ‘‘க்ரைம் ஜானர் வேணாம். ‘வணக்கம் சென்னை', ‘காளி' மாதிரி கதையா எதிர்பார்க்கறேன்'' என்று சொல்லிவிட்டார். எனவே, இப்போது உதயநிதிக்காக பக்கா கமர்ஷியல் கதை ஒன்றை ரெடி செய்கிறார் கிருத்திகா. அதுவும் ரெட் ஜெயன்ட்ஸ்தானே?

இன்பாக்ஸ்

பேராவூரணி அருகே உள்ள செருபாலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லதா. இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி. சொந்த வீடு இல்லாமல் இரண்டு பிள்ளைகளுடன் அவதிப்பட்ட அவரது நிலை அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், லதாவிற்கு வீடு கட்டித் தர முன்வந்தார். ஆனால், சொந்த இடம் இல்லாததால் வீடு கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவர் தனது சொந்த இடத்தை லதாவிற்கு வீடு கட்டுவதற்காக இலவசமாகக் கொடுத்துள்ளார். இதில் நெகிழ்ந்த கலெக்டர், தன் விருப்ப நிதியுடன், தன் நண்பர்களிடமும் நிதி திரட்டி அழகிய வீட்டைக் கட்டினார். கலெக்டர் முன்னிலையில் ஊரே கூடி லதாவின் வீட்டுக்குப் புதுமனை புகுவிழா நடத்தி மகிழ்ந்துள்ளனர். இணைந்த கைகள்!

இன்பாக்ஸ்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து, கல்வி பயில வைக்கிறார் பெண்ணியச் செயற்பாட்டாளரான சுகந்தி வினோதினி. பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்த சுகந்தி வினோதினி, பழங்குடியினக் குழந்தைகளுக்கு சேவையாற்றுவதற்காகவே தன் பணியை ராஜினாமா செய்தவர். பழங்குடி இருளர் குடியிருப்புகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் அரசிடம் கோரிக்கை வைத்து, போராடிப் பெற்றுத் தந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் கைனூர் கிராமத்தில், கணவரையிழந்து தன் 3 பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக சைக்கிளில் டீ விற்கும் பெண் ஒருவரைக் கண்டறிந்ததும் 26.000 ரூபாய் கொடுத்து உதவினார். ‘கல்வி ஒன்றே சமூகத்தின் மாற்றம்’ என்று முழக்கமிடும் சுகந்தி வினோதினியின் பின்னால் புத்தகப் பையுடன் அணி திரண்டு நிற்கிறார்கள் பழங்குடியினக் குழந்தைகள். கல்வித்தாய்!

வல்லபநாதர்-ராஜராஜேஸ்வரி
வல்லபநாதர்-ராஜராஜேஸ்வரி

திருவாரூர் மாவட்டம் பூவனூரில் பழைமையான சதுரங்க வல்லபநாதர் கோயில் உள்ளது. இறைவன் வல்லபநாதரும் இறைவி ராஜராஜேஸ்வரியும் இங்கு சதுரங்கம் விளையாடியதாகவும், அதில் இறைவன் வெற்றி பெற்று இறைவியைத் திருமணம் செய்ததாகவும் கோயிலின் தலவரலாறு கூறுகிறது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து மாணவர்களுக்கு செஸ் போர்டுகள் வழங்கப்பட்டன. சதுரங்க வல்லபநாதர்-ராஜராஜேஸ்வரி அம்பாள் படங்களைக் கொண்ட செஸ் போர்டுக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்து பக்தர்களுக்குப் பிரசாதமும் வழங்கினர். ‘‘செஸ் விளையாட்டின் பூர்வீகம் தமிழ்நாடு என்பதற்கான ஆதாரமாக இக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சர்வதேச சதுரங்க விளையாட்டு தினம் கொண்டாடப்பட வேண்டும்’’ என்கிறார் ஜோதிமலை திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள். சிறப்பு!