Published:Updated:

இன்பாக்ஸ்

துல்கர் சல்மான்
பிரீமியம் ஸ்டோரி
துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் ‘குருப்.’

இன்பாக்ஸ்

துல்கர் சல்மான் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் ‘குருப்.’

Published:Updated:
துல்கர் சல்மான்
பிரீமியம் ஸ்டோரி
துல்கர் சல்மான்

‘வழக்கு மனுக்களைச் சுருக்கமாகத் தாக்கல் செய்யுங்கள்’ என வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறியிருக்கிறது. டி.வி-யில் கட்டண சேனல்களுக்குக் கட்டணம் நிர்ணயிக்கும் விவகாரம் குறித்து ஒரு அப்பீல். இதற்காக வந்த வழக்கறிஞர் 51 வால்யூம்களாக மனுவைக் கொடுத்தார். ஒவ்வொரு வால்யூமும் 100 பக்கங்கள் வரை இருந்தது. இதைப் பார்த்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘`இப்படியெல்லாம் நீதிபதிகளை மிரட்டாதீர்கள். இதுபோல் தாக்கல் செய்யப்படும் மனுக்களை லாரியில் ஏற்றி நீதிபதிகளின் வீடுகளுக்கு எடுத்துப் போக வேண்டியுள்ளது. அவர்கள் இதைப் படித்து விஷயத்தை அறிந்துகொள்ள நீண்ட நேரம் ஆகிறது. இதைச் சுருக்கி ஒரே வால்யூமாகக் கொடுங்கள்’’ என்று சொல்லிவிட்டார். நியாயம்தானே!

இன்பாக்ஸ்

துல்கர் சல்மான் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் ‘குருப்.’ மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவரவிருக்கும் படத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் பெரிய தொகைக்கு டீல் பேசிவிட்டதாகப் பேசப்பட்டுவருகிறது. எல்லாம் ஓ.டி.டி மயம்!

தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு நிதி வருவதும் மோசமாகக் குறைந்திருக்கிறது. இதனால் கட்சி அலுவலகத்தில் பல சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் எம்.பி-க்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் கட்சி நிதி தர வேண்டும் என்று விதி இருக்கிறது. புதிதாக வந்த பல எம்.பி-க்களுக்கு இந்த விதி தெரியாது என்பதால், அவர்கள் பணம் தரவில்லையாம். எல்லோருக்கும் இதை நினைவூட்டிக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். சத்திய சோதனை!

‘வடசென்னை 2’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் அதனுடைய ப்ரீக்வெலான ‘ராஜன் வகையறா’ படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல, ‘சார்பட்டா பரம்பரை’ கதையில் வரும் கதாபாத்திரங்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதை ஒரு ப்ரீக்வெல் கதையாக வைத்திருக்கிறாராம், இயக்குநர் பா.இரஞ்சித். இது வெப் சீரிஸாக வரலாம் எனப் பேச்சுகள் கிளம்பியிருக்கின்றன. சார்பட்டா பரம்பரை The Beginning!

கொரோனா இரண்டாம் அலை நமக்கெல்லாம் தணிந்த நிலையிலும், கேரளாவில் இன்னும் வேகம் குறையவில்லை. கேரளாவின் திருச்சூர், கொண்டாட்டங்களின் தலைநகரம். 200 ஆண்டுப் பழைமை வாய்ந்த திருச்சூர் பூரம், முதன்முறையாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு மக்கள் யாரும் இல்லாமல் பூரம் கொண்டாடப்பட்டது. அதேபோல ஓணம் பண்டிகையின் 4-வது நாள் ‘புலிகளி’ திருவிழா நடக்கும். உடலில் புலி ஓவியம் வரைந்து, புலி வேடத்துடன் வீதிகளில் உலாவந்து நடனமாடுவார்கள். கடந்த ஆண்டு ‘புலிகளி’ ரத்து செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் இந்த ஆண்டும் புலிகளி நடப்பது சந்தேகம்தான். மீண்டு வருவோம் மக்களே..!

இன்பாக்ஸ்

தஞ்சையைச் சேர்ந்த மூன்று ராணுவ வீரர்கள், இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதையடுத்து, ரயில் மூலம் தஞ்சாவூர் வந்தனர். ஓய்வு பெற்ற, பணியிலிருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேள தாளங்கள் முழங்க மாலை அணிவித்து அவர்களுக்கு உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். ரயில் நிலைய வாசலிலேயே மூன்று ராணுவ வீரர்களும் இணைந்து மாற்றுத் திறனாளிகளான ஐந்து பேருக்கு சுயதொழில் தொடங்க உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்யூட்!

‘இந்தியன் 2’ பஞ்சாயத்து ஒருபுறம் இருக்க, ராம்சரணை வைத்து நேரடியாகத் தெலுங்கில் படமெடுக்கக் கிளம்பிவிட்டார் இயக்குநர் ஷங்கர். தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் பிரமாண்டமாக செட் அமைத்து எடுக்கவுள்ளனர். படத்தை அடுத்த ஜூலைக்குள் முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம் ஷங்கர் & டீம். இதையாவது கண்ணுல காட்டுங்க!

அடுத்தடுத்த ராஜினாமாக்கள், ‘பிரதமர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 2019 மே மாதம் மோடி இரண்டாவது முறையாகப் பிரதமரானார். அவரின் முதல் ஆட்சிக்காலம் முழுக்க பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளராக இருந்தவர் நிருபேந்திர மிஸ்ரா. 2019 ஆகஸ்ட் மாதம் திடீரென அவர் பதவி விலகினார். முதன்மை ஆலோசகராக இருந்த பி.கே.மிஸ்ரா இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவி விலகினார். இன்னொரு ஆலோசகரான அமர்ஜித் சின்ஹா கடந்த வாரம் ராஜினாமா செய்துவிட்டார். இப்போது பிரதமர் அலுவலகத்தில் பாஸ்கர் குல்பே என்ற ஒற்றை ஆலோசகர் மட்டுமே மிச்சம் இருக்கிறார். என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது!

விலைவாசியைக் குறைப்பது எப்படி என வெனிசுலா அரசிடம் ஆலோசனை கேட்கலாம். உலகிலேயே விலைவாசி எகிறி அடிக்கும் நாடுகளில் அது ஒன்று. ஐந்து லிட்டர் தண்ணீர் கேன் வாங்க, அந்த நாட்டின் பொலிவார் கரன்சியில் 74 லட்சம் தேவைப்படும். நம் ஊரில் 2,000 ரூபாய் நோட்டுதான் அதிக மதிப்புள்ள கரன்சி. அங்கே 10 லட்சம் பொலிவார் நோட்டு இருக்கிறது. விலைவாசியைப் பார்த்துப் பலருக்கும் ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுக்க, வரும் அக்டோபர் மாதம் முதல் வெனிசுலா ஆறு பூஜ்ஜியங்களைக் குறைக்கிறது. அதாவது, 10 லட்சம் பொலிவார் அப்போது 1 பொலிவார் நாணயம் ஆகிவிடும். இதனால் ஏதாவது மாறுமா என்றால், ‘வாய்ப்பில்லை ராசா’ என்பதுதான் பதில். கேட்கவே தலைசுத்துதே!

கேரள மாநிலம் திருச்சூர் படிஞாறக்கோட்டை பகுதியில் ஆன்லைனில் மாட்டிறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்து வருகின்றனர் ஸிண்டோ - ஜில்மோள் தம்பதி. இவர்களுக்கு மத்திய அரசு பத்து லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. மாட்டிறைச்சி விற்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகையா என ஆச்சர்யம் வேண்டாம். இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. ஸிண்டோ-ஜில்மோள் தம்பதி பத்து வகை இறைச்சிகளை பிரெஷ்ஷாக விற்பனை செய்யும் விதத்தை விளக்கியுள்ளனர். அவர்கள் இறைச்சி விற்பனை செய்யும் பாணியை அங்கீகரித்து, அந்தத் தம்பதிக்குப் பத்து லட்சம் ரூபாய் வழங்கி ஊக்குவித்துள்ளனர். அதிசயம்தான்!

அந்நிய முதலீடுகள் இந்தியா வருவதற்குத் தடையாக இருப்பது, முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் விவகாரம். இதை நீக்குவதற்காக நாடாளுமன்ற மக்களவையில் ஆகஸ்ட் 6-ம் தேதி வரிவிதிப்பு சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பா.ஜ.க-வின் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் பொறுப்பாளர் அஷ்வனி மகாஜன், ‘திருடர்களுக்கு சலுகை கொடுக்கும் இந்த மசோதாவால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அரசு இழக்கும்’ என ட்விட்டரில் விமர்சனம் செய்தார். பா.ஜ.க-வின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு பொறுப்பாளர் விஜய் சௌதாய்வாலே, ‘நீங்கள் அந்நிய முதலீடே வேண்டாம் என்கிறீர்களா?’ என்று அதற்கு பதிலடி கொடுத்தார். ‘ஒரு கொள்கை முடிவின் சாதக பாதகங்கள் பற்றிப் பேசுவது குற்றமா?’ என்று மகாஜன் மீண்டும் கேட்க, ‘தேசநலனுக்காக எடுக்கப்படும் முடிவுகள் எதுவுமே குற்றமில்லை’ என்று விஜய் பதில் சொன்னார். இப்போது விஜய்யை விவாதத்துக்கு அழைத்திருக்கிறார் மகாஜன். இதேபோலவே காங்கிரஸிலும் இந்த மசோதாவுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக இரட்டைக் குரல்கள் ஒலிக்கின்றன. காங்கிரஸ்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இன்பாக்ஸ்

தும்பிக்கையில் காயம் ஏற்பட்டு மசினக்குடியில் உலவிக்கொண்டிருந்த ரிவால்டோ என்ற ஆண் காட்டு யானையை கடந்த மே மாதம் பிடித்து வனத்துறையினர் சிகிச்சை கொடுத்தனர். மூன்று மாதங்களாக மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரிவால்டோவை நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் காட்டுக்குள் விட்டனர். அதன் இருப்பிடத்தை அறிவதற்காக ரேடியோ காலர் பொருத்தி, இரவோடு இரவாக லாரியில் ஏற்றி 40 கி‌.மீ தொலைவில் உள்ள முதுமலை சிக்கல்லா வனத்தில் விட்டனர். மறுநாளே அது மசினக்குடிக்கு வந்துவிட்டது. அதை என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறார்கள் வனத்துறையினரும் யானை ஆய்வாளர்களும். நினைவில் முகாமுள்ள மிருகம்!

இன்பாக்ஸ்

இந்தியத் துறைமுகங்களிலேயே முதல்முறையாக தூத்துக்குடித் துறைமுகத்தில் எலெக்ட்ரிக் கார்கள் துறைமுகப் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக எனர்ஜி எபிஷியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம், 3 கார்களை வழங்கியுள்ளது. 8 மணி நேரம் சார்ஜ் செய்தால், பேட்டரி 100 சதவிகிதம் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். 231 கி.மீ தூரம் வரை அதன்பின் செல்ல முடியும். போலாம் ரைட்!

இன்பாக்ஸ்

ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துகொண்டிருந்த நீலகிரி மாவட்டம், கொரோனாச் சூழலால் முடங்கியுள்ளது. மலை ரயில் ஓடவில்லை. தாவரவியல் பூங்கா மூடியுள்ளது. கோடை விழாவும் ரத்து செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்குத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இப்போது புனரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி தாவரவியல் பூங்கா இரண்டாவது சீசனுக்குத் தயாராகி வருகிறது. இரண்டு லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளனர். கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் நீடிக்கும் சூழலில், மலர் நாற்றுகளை நடவு செய்து வரும் பூங்காப் பணியாளர்களின் செயல் மக்களிடமும் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்துள்ளது. அத்தனை கண்ட பின்னும் பூமி இன்னும் பூ பூக்கும்!

டாக்டர் எம்.கிருஷ்ணன்
டாக்டர் எம்.கிருஷ்ணன்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றியவர் டாக்டர் எம்.கிருஷ்ணன். தற்போது, திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் இவர். மதுரையைச் சேர்ந்த இவர்தான், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படும் முதல் தமிழர். ஒலிக்கட்டும் தமிழ்க்குரல்!