Published:Updated:

இன்பாக்ஸ்

சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
சிம்பு

கணவர் ராஜ் கௌஷல் திடீரென மாரடைப்பால் இறந்த சோகத்திலிருந்து ஒரு மாதம் கழித்து மீண்டிருக்கிறார் மந்த்ரா பேடி.

இன்பாக்ஸ்

கணவர் ராஜ் கௌஷல் திடீரென மாரடைப்பால் இறந்த சோகத்திலிருந்து ஒரு மாதம் கழித்து மீண்டிருக்கிறார் மந்த்ரா பேடி.

Published:Updated:
சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
சிம்பு

AAA படத்துக்கான ரெட் கார்டு விடாது கருப்பு போல் சிம்புவைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், எடைக்குறைப்பு, அடுத்தடுத்த படங்கள் என நதிபோல் ஓடிக்கொண்டிருக்கிறார் சிம்பு. ‘என்ன சார் இப்படி இளைச்சுட்டீங்க’ என்பதுபோல் ஈஸ்வரன் படத்தில் தோன்றியவர், தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்காக இன்னும் 15 கிலோ குறைத்திருக்கிறாராம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே பள்ளி மாணவர் போல்தான் தோன்றினார். மென்மையான நகர்ப்புறக் காதல் கதையான ‘நதிகளில் நீராடும் சூரியனு’க்கு பதில், சிம்புவின் லுக் & ஃபீலுக்கு ஏற்ப இந்தக் கதையைத் தேர்வு செய்திருக்கிறார்களாம். கரடுமுரடான அழகியல் கொண்ட கிராமப்புறக் கதை என்கிறார்கள். ரொம்ப தணிஞ்சுட்டாரே!

இன்பாக்ஸ்

மத்திய ஆயுத போலீஸ் படைக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்றது. இதில் விவசாயிகள் போராட்டம், கொரோனா நேரத்தில் டெல்லியில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு, மேற்கு வங்காளத் தேர்தல் வன்முறை ஆகியவை பற்றிக் கேள்விகள் கேட்டிருந்தார்கள். இதனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டென்ஷனாகிவிட்டார். ‘`போலீஸ் படையை அரசியலுக்குப் பயன்படுத்துவதற்கான முயற்சி இது. இந்தக் கேள்வித்தாள் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது’’ என்று அவர் கொதிக்க, ‘`உண்மைச் சம்பவங்கள் பற்றிக் கேள்வி கேட்பதில் தவறில்லை’’ என பதிலடி கொடுத்திருக்கிறது பா.ஜ.க. ரைட்டு!

இன்பாக்ஸ்

மரங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். காற்றில் வீழ்ந்த ராட்சத மரத்தில் இருந்த அரியவகை பெரணி மற்றும் ஆர்க்கிட் வகைத் தாவரங்களை மற்ற மரக்கிளைகளில் பதித்து மறுவாழ்வு அளிக்கப்பட்ட நம்பிக்கை நிகழ்வு கூடலூரில் நடந்திருக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, நாடுகாணி பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அந்தப் பழம்பெரும் மரத்தின் கிளைகளை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான பெரணிகள் மற்றும் ஆர்க்கிட் தாவரங்களின் வாழ்வும் அந்த மரத்தோடு மடியும் அபாயத்தில் இருந்தது‌. நாடுகாணி வனத்துறையினர் அவற்றைச் சேகரித்து, ஜீன்பூல் வனவியல் பூங்காவில் உள்ள அரியவகை மரக்கிளைகளில் நேர்த்தியாகப் பதித்து அவற்றுக்கு மறுவாழ்வு கொடுத்து வருகின்றனர். மறுவாழ்வு அளிக்கும் வனத்துறைக்கு வாழ்த்துப் பூங்கொத்து!

கணவர் ராஜ் கௌஷல் திடீரென மாரடைப்பால் இறந்த சோகத்திலிருந்து ஒரு மாதம் கழித்து மீண்டிருக்கிறார் மந்த்ரா பேடி. மீண்டும் மேக்கப் போட்டுக்கொள்ளும் படத்தை ஷேர் செய்து, ‘என் மிச்ச வாழ்க்கையின் முதல் நாள் இது’ என்று எமோஷனலாக எழுதியிருக்கிறார். இந்த சோகத் தருணங்களில் ஆறுதலாயிருந்தவர்களுக்கு நன்றியும் சொல்லியிருக்கிறார். காலம் ஆற்றும்!

இன்பாக்ஸ்

பீகாரின் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று சொல்லி ஆறாண்டுகள் ஆகின்றன. மத்திய அரசும் மெத்தனம் காட்ட இதுவரை ஒரு செங்கல்கூட வைக்கப்படவில்லை. இதைக் கண்டித்து மிதிலா மாணவர் சங்கம், வித்தியாசமான போராட்டத்தில் இறங்கியுள்ளது. கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் ஒரு லட்சம் செங்கல் சேகரித்துத் தாங்களே அடிக்கல் நாட்டவிருப்பதாக அறிவித்துள்ளது. இலக்கில் பாதி செங்கல் இப்போதே சேர்ந்துவிட்டது. சரியான பதிலடி!

இன்பாக்ஸ்

கொரோனா விதிகளின்படி எல்லோரும் மாஸ்க் அணிந்திருக்கிறார்களா என, தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பழைய பேருந்து நிலையம் அருகே பஸ்ஸில் ஏறி ஆய்வு செய்தார். அப்போது மாஸ்க் அணியாமல் இருந்த பெண் ஒருவருக்கு கலெக்டர் 500 ரூபாய் அபராதம் விதித்தார். இதையடுத்து அந்தப் பெண் அழ ஆரம்பித்தார். ``ஏம்மா அழுறீங்க'' என்று கலெக்டர் கேட்க, ``அபராதம் செலுத்த எங்கிட்ட பணம் இல்ல சார்'' எனத் தன்னுடைய ஏழ்மை நிலையைத் தெரிவித்துள்ளார் அந்தப் பெண். உடனே அருகிலிருந்த ஏ.டி.எம் சென்ற கலெக்டர், பணம் எடுத்து வந்து அந்தப் பெண்ணுக்கு 500 ரூபாய் கொடுத்து அபராதம் செலுத்தச் சொன்னார். மாஸ்க்கும் வாங்கிக் கொடுத்தார். சட்டம் தன் கடமையைச் செய்யும்!

தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது காந்தியவாதிகளின் நீண்டகாலக் கோரிக்கை. இதன் முதல்படியாக சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகளின் ஊர்களிலாவது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று காந்தியவாதிகளான தியாகி லெட்சுமிகாந்தன் பாரதி, வெங்காடம்பட்டி திருமாறன், செங்கோட்டை ராம்மோகன் ஆகியோர் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., காமராஜர், பாரதியார், வாஞ்சிநாதன், கக்கன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்ந்த ஊர்களைச் சுற்றிலும் 5 கி.மீ தூரத்துக்கு மதுக்கடைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளனர். பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளாராம். நல்லது நடந்தால் சரி!

இன்பாக்ஸ்

கலாய்களும், மீம்ஸ்களும் ரவுண்டு கட்டிப் பறந்தாலும் டோலிவுட் பேட்டையில் பாலகிருஷ்ணா செம பிஸி! அடுத்தடுத்து படங்களை அறிவித்து வருபவர் தற்போது கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் தனது 107வது பட வேலைகளைத் தொடங்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இதில் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

இன்பாக்ஸ்

பூடான் நாட்டில் சமீபத்தில் தெற்காசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நடந்தது. இதில், இந்திய ஊரக இளைஞர் அணி, 19 வயதுக்குப்பட்டோருக்கான கபடிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்தது. இந்த அணியிலிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜயகுமார், தீபன்ராஜ் ஆகிய வீரர்கள் தொடரில் கலந்துகொள்ள பணமில்லாமல் தவிக்க, இதுதெரிந்த தமிழகச் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஒவ்வொருவருக்கும் 30,000 ரூபாய் கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். தொடரில் கலந்துகொண்ட மற்றொரு வீரரான வேதாரண்யம் தேத்தாகுடியைச் சேர்ந்த வசிஷ்ட கணேஷ் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார். தங்கமகன்கள்!

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்யா தாக்கரே ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டார். கடந்த வாரம் இளைய மகன் தேஜஸ் தாக்கரேவின் பிறந்த நாள். சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’வில் எப்போதும் இல்லாத வகையில் இதற்காக முதல் பக்கத்தில் விளம்பரம் வெளிவர, இவரும் அரசியலுக்கு வருகிறார் என்று பேச்சு கிளம்பிவிட்டது. வனவிலங்கு போட்டோகிராபரான தேஜஸ், மேற்குத்தொடர்ச்சி மலைகளில் எப்போதும் சுற்றுபவர். நண்டுகள், தவளை, பாம்பு என இருபதுக்கும் மேற்பட்ட புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்தவர். அவர் அரசியலுக்கு வரமாட்டார் என அடித்துச் சொல்கிறது இன்னொரு கோஷ்டி. சரிதான்!

இன்பாக்ஸ்

மலையாள நடிகர் மம்மூட்டி திரையுலகில் பொன்விழாவைக் கொண்டாடுகிறார். கொரோனா காரணமாக, தனக்கு விழா நடத்த வேண்டாம் என கேரள அரசுக்கு மம்மூட்டி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் தலைமையில் மம்மூட்டியைச் சந்தித்த அக்கட்சியின் நிர்வாகிகள், அவரைப் பாராட்டு மழையில் நனைத்துவிட்டனர். கேரள பாரம்பர்ய பட்டு நேரியலை நடிகர் மம்மூட்டிக்குப் பொன்னாடையாக அணிவித்து வாழ்த்தினர். சுரேஷ் கோபியைப் போன்று இவரும் பா.ஜ.க பக்கம் சாய்வாரா என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருக்கிறது. அதானே!

இன்பாக்ஸ்

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற சாதனையை, டோக்கியோ ஒலிம்பிக்கின் 10 மேஜிக் மொமென்ட்ஸில் ஒன்றாக உலக அத்லெடிக்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த நிமிடத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் நீரஜைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கும் குறைவாக இருந்தது. அடுத்த ஓரிரு நாள்களில் அது 32 லட்சமாக உயர்ந்திருக்கிறது. உலகிலேயே அதிகம் பேர் ஃபாலோ செய்யும் அத்லெட் அவர்தான். எதிர்நீச்சலடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism