Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

விஜய்யுடன் 14 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா இணைவதால், ரெட்ரோ ஸாங் ஒன்றும் நிச்சயம் இருக்கும் என்கிறார்கள்.

இன்பாக்ஸ்

விஜய்யுடன் 14 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா இணைவதால், ரெட்ரோ ஸாங் ஒன்றும் நிச்சயம் இருக்கும் என்கிறார்கள்.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பா.இரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் கோலார் தங்கவயல் பின்னணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, ‘கோப்ரா' இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அதற்கான ஷூட்டிங் தொடங்குகிறது. ‘கோப்ரா 2'ஆக இருக்குமோ?

இன்பாக்ஸ்

‘மாயாவி', ‘ஆறு', ‘சிங்கம்', ‘சிங்கம் 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சூர்யா படத்திற்கு இசையமைக்கிறார், தேவிஸ்ரீ பிரசாத். ‘சிறுத்தை' சிவா இயக்கும் படம் அது. ஏற்கெனவே, ‘வீரம்' படத்தில் சிவா - தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணி அமைத்தி ருந்தார்கள். எனர்ஜெடிக் காம்போ ரெடி!

இன்பாக்ஸ்

தலைவாசல் விஜய் மலையாள அரசு விளம்பரப் படத்திற்காக கதகளி நடனம் ஆடியிருக்கிறார். இந்த ஒப்பனைக்கே ஐந்து மணி நேரம் ஆகுமாம். கதகளி அதிகமும் பாவனைகள் சார்ந்தது. அங்கே வசனத்திற்கு இடமில்லை. இதற்கு முன்பு மோகன்லால் ஒரு படத்தில் கதகளிக் கலைஞராக நடித்திருக்கிறார். அதன்பிறகு தலைவாசல் விஜய்தான் கதகளிக் கலைஞராக நடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். கலைக்கு மரியாதை!

மோகன்லாலை வைத்து பிருத்விராஜ் இயக்கிய ‘லூசிபர்' மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ‘காட்ஃபாதர்' என்ற பெயரில் அதை ரீமேக் செய்து வரும் மோகன்ராஜா, இம்மாதத்தோடு அதன் படப்பிடிப்பை நிறைவு செய்கிறார். இதற்கிடையே பிருத்விராஜையும், மோகன் லாலையும் சந்திப்பவர்கள் பலரும் ‘லூசிபர் 2' எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இப்போது இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டார் பிருத்விராஜ். மோகன்லாலும் கைவசம் இருக்கும் படத்தை முடித்துவிட்டு, ‘லூசிபர் 2'-ல் இணைய ரெடி. விரைவில் அறிவிப்பு வருகிறது. குரேஷி பாய் வர்றார்!

இன்பாக்ஸ்

தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள்கள் ஷிவானி, சிவாத்மிகா. இவர்களில் ஷிவானி ராஜசேகர், ஹிப்ஹாப் ஆதியின் ‘அன்பறிவு' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அடுத்து, ‘நெஞ்சுக்கு நீதி' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் படத்தில் ஷிவானிதான் ஹீரோயின். படத்திற்கு ‘சிங்கப்பூர் சலூன்' எனப் பெயர் வைத்திருப்பதாகத் தகவல். தலைப்பே புதுசா இருக்கே!

அடுத்து குற்றப்பரம்பரை படத்தை இயக்க ஆரம்பித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் பாரதிராஜா. ஆனால், அவர் இப்போது நடித்துக்கொடுத்த படங்களில் நல்ல பெயர் கிடைக்க, நடிப்பு வாய்ப்புகள் குவிகின்றன. தவிர்ப்பதற்காக அதிக தொகை கேட்டாலும் அதற்கும் சம்மதிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதனால் நடிப்பில் தீவிரமாகி கிட்டத்தட்ட பத்துப் படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா. நடிப்பிலும் இமயம்!

இன்பாக்ஸ்

‘மண்டேலா' மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்' படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். தேசிங்கு, சென்ற ஆண்டே சிவாவுக்குக் கதை சொன்னார். சிவா அதில் சில மாற்றங்கள் செய்யச் சொன்னார். தேசிங்கு ஃப்ரெஷ் கதை ஒன்றை ரெடி செய்து சிவாவிடமும் சொல்ல, அது க்ளிக் ஆகிவிட்டது. சூப்பர்ஜி!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் காதலில் விழுந்தி ருக்கிறார். அவர் காதலிக்கும் நபர் யார் என்று கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறது. தன் அக்கா ஜான்வி கபூர் பல ஆண்டுகளாகக் காதலித்ததாகக் கூறப்படும் அக்‌ஷத் ராஜனை இப்போது தங்கை குஷி காதலித்து வருகிறார். இருவரும் கலிபோர்னியாவிற்கு பிக்னிக் சென்று வந்துள்ளனர். இதற்கு ஜான்வி கபூர் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறிப்போய் இருக்கிறார். ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும்போது ஜான்வி கபூர் அக்‌ஷத் ராஜனைக் காதலித்தார். காதலுக்குத்தான் கண்ணில்லையே!

இன்பாக்ஸ்

‘பொன்னியின் செல்வன்' வெளியாகப்போகும் மகிழ்ச்சி ஒருபுறம், இன்னொரு பக்கம் ஹீரோயின் சென்ட்ரிக்கான ‘தி ரோடு', ‘பிருந்தா' என்ற வெப்சீரீஸ் ஆகியவற்றின் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார் த்ரிஷா. விஜய் - லோகேஷின் ‘விஜய்67' படத்திற்காக த்ரிஷாவிடம் பேசி வருகிறார்கள். ஏற்கெனவே இப்படத்தில் சமந்தா இருந்தாலும் (வில்லியாக நடிக்கிறார்) த்ரிஷாவின் கதாபாத்திரம் வலுவாகப் பேசப்படும் என்கிறார்கள். விஜய்யுடன் 14 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா இணைவதால், ரெட்ரோ ஸாங் ஒன்றும் நிச்சயம் இருக்கும் என்கிறார்கள். அப்படிப் போடு!

இன்பாக்ஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமத்தில் அய்யன்குளம் அமைந்துள்ளது. புதர் மண்டி, பயனற்ற நிலையிலிருந்த இக்குளத்தை, நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாள்களில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. குளத்தைத் தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, தண்ணீர் எளிதில் வரவும் வெளியேறவும் வாய்க்கால் அமைத்துள்ளனர். குளத்தைச் சுற்றிலும் கம்பிவேலி அமைத்து தென்னை, நாவல், நெல்லி, மா, கொய்யா, பலா, முள் இல்லா மூங்கில் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும் நட்டுள்ளனர். பசுமை போற்றுவோம்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

டாப்ஸ்லிப் யானைப் பாகன்களின் பணியைப் பாராட்டி, மத்திய வனத்துறை அமைச்சகம் ‘கஜ் கவ்ரவ்' விருதை அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே டாப்ஸ்லிப் யானைப் பாகன்களுக்குத் தனி மரியாதை இருக்கிறது. மற்ற இடங்களில் அங்குசத்தை முன்னிலைப்படுத்திக் காட்டு யானைகளை, கும்கிகளாக மாற்றுவார்கள். ஆனால், இங்கு கரும்பைக் கொண்டுதான் பயிற்சி கொடுப்பார்கள். அன்பு அதிகம் இருப்பதாலேயோ என்னவோ, இங்கு பயிற்சி கொடுக்கப்படும் யானைகள் இந்திய அளவில் முத்திரை பதித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், யானைகளுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள பாகன்கள் குடும்பம். மலசர் பழங்குடி மக்கள்தான் தலைமுறை தலைமுறையாக யானைகளுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர். சில நேரங்களில் யானைகளால் தாக்கப்பட்டு இவர்கள் உயிரிழப்பதும் உண்டு. இருந்தபோதும் யானைப் பெயர்களைக் கைகளில் பச்சை குத்திக்கொள்வது, தங்கள் வாகனங்களுக்கு யானைப் பெயர்களை வைப்பது என யானைகளை மையப்படுத்தியே அவர்கள் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. வனமகன்கள்..!

இன்பாக்ஸ்

கரூரில் மாவட்ட நிர்வாகத்துடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து புத்தகத் திருவிழா நடத்துகின்றனர். இந்தப் புத்தகத் திருவிழாவுக்கான அடையாளச் சின்னமாக, கடவூர் காடுகளில் அதிக அளவு வசிக்கும் தேவாங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘நூலன்’, ‘நூலி' என்று அடையாளமிட்டு இந்தச் சின்னங்கள் வடிவமைக் கப்பட்டது. சிறப்பு!

அந்தப் பக்கம் ஊட்டி, இந்தப் பக்கம் வால்பாறை என்று கோவை மக்களின் வீக் எண்ட் ஹில் ஸ்டேஷன்களில் அதிகம் கழியும். மூன்றாவது ஆப்ஷனாக தற்போது ஆனைக்கட்டியும் இணைந்துள்ளது. தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள ஆனைக்கட்டி மலையை ‘மினி ஊட்டி' என்றே அழைக்கின்றனர். சிறிய மலையாக இருந்தாலும், காடுகள், வனவிலங்குகள், பசுமை என அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது ஆனைக்கட்டி. ‘ஐயப்பனும் கோஷியும்' படம் இங்குதான் எடுக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் படையெடுப்பதால் ஆனைக்கட்டியைச் சுற்றி ஏராளமான ரிசார்ட்கள் வந்துவிட்டன. வீக் எண்ட் மட்டுமல்லாமல், வார நாள்களிலும் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. தற்போது பலர் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். மஜாப்பா... மஜாப்பா..!