Published:Updated:

இன்பாக்ஸ்

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் ஒரு பாடல் தவிர மற்ற வேலைகள் எல்லாம் நிறைவடைந்துவிட்டன. ஜனவரி இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்

பிரீமியம் ஸ்டோரி

திருமண முறிவுக்குப் பிறகு இன்னும் உற்சாகமாக சோஷியல் மீடியாவில் ஒர்க் அவுட் வீடியோக்களை இறக்க ஆரம்பித்துவிட்டார் சமந்தா. சமீபத்திய ஜிம் ஒர்க் அவுட் வீடியோ செம வைரல். ஏற்கெனவே ஃபிட்டான உடல்வாகு கொண்ட சம்மு, டாப்ஸி தயாரிப்பில் நடிக்கப்போகும் பாலிவுட் படத்துக்காக உடலை இன்னும் வருத்தித் தயாராகி வருகிறார். டோலிவுட், பாலிவுட், கோலிவுட்டில் அரை டஜன் படங்கள் கைவசம் இருக்கிறதாம். சமர்த்து சம்மு!

இன்பாக்ஸ்

ரொமான்டிக் ஹீரோ, ஆக்‌ஷன் ஹீரோ என இரண்டு பாக்ஸை டிக் செய்து தன் கரியரில் மேலே வந்துகொண்டிருந்தார் பரத். ஆனால், அவரின் படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு, இவர் நடித்த ‘காளிதாஸ்’ படம் பேசப்பட்டது. சமீபத்தில் துல்கர் சல்மானின் ‘குருப்’ படத்தில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக வந்தார். இன்னும் சில படங்கள் மலையாளத்தில் நடித்துவருகிறார். தமிழிலும் வாணி போஜனுடன் ஒரு படம், ஜனனியுடன் ‘முன்னறிவான்’ என இரண்டு த்ரில்லர் படங்கள் கைவசம். எழுந்து வாங்க பரத்!

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் ஒரு பாடல் தவிர மற்ற வேலைகள் எல்லாம் நிறைவடைந்துவிட்டன. ஜனவரி இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஏகப்பட்ட கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால், ‘அயலான்’ படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என்கிறார்கள். அடுத்ததாக, அட்லியின் உதவி இயக்குநராக இருந்த அசோக் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் ‘சிங்கப்பாதை’ படம் ஆரம்பமாகவிருக்கிறது. இதனை முடித்துவிட்டு, தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் படத்திற்குச் செல்கிறார் சிவகார்த்திகேயன். ஏப்ரல் மாதம் ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் இயக்கும் படம் தொடங்கவிருக்கிறது. செம பிஸி..!

இன்பாக்ஸ்

நடிகை கேத்ரீனா கைஃப் ஒரு வழியாகத் திருமண வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டார். சக நடிகர் விக்கி கௌஷலை சில மாதங்களாகக் காதலித்து வந்தார் கேத்ரீனா. சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்தது. டிசம்பர் இரண்டாம் வாரத்தில் ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர மாளிகையில் திருமணம் நடக்கவுள்ளது. திருமணத்திற்குப் பிறகு வசிப்பதற்காக மும்பையில் மாதம் 7 லட்ச ரூபாய் வாடகைக்கு ஒரு வீட்டைப் பிடித்திருக்கிறார் விக்கி. வாழ்த்துகள்!

தனுஷ்கோடி திடீர் பொள்ளாச்சி ஆகிவிட்டது. ‘நந்தா’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘அலைபாயுதே’ இந்திப் பதிப்பு ‘சாத்யா’, மலையாள ஹிட் படமான ‘மாயநதி’ என நிறைய படங்கள் இங்கு எடுக்கப்பட, பாலிவுட், டோலிவுட், மல்லுவுட் வரை இப்போது பிஸியான லொகேஷன் ஆகிவிட்டது. மாதம் ஒரு சினிமா எனக் களைகட்டுகிறது. சமீபத்தில் ‘லால் சிங் சத்தா’ என்ற அமீர்கான் படம் அங்கு படமாக்கப்பட்டது. தற்போது நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, ராம் இயக்கும் பைலிங்குவல் படத்தின் ஷூட்டிங் அங்கு போய்க்கொண்டிருக்கிறது. ஷூட்டிங் ஓய்வதில்லை!

வெங்கட் பிரபு கேங்கின் நடிகர் நிதின் சத்யா தற்போது முழுநேரத் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். `ஜருகண்டி', `லாக்-அப்' படங்களுக்குப் பிறகு மஹத் ஹீரோவாக நடிக்க `காதல் *கண்டிஷன்ஸ் அப்ளை' என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். அடுத்து பெரிய ஹீரோக்கள் படங்களைத் தயாரிக்க `ஸ்வேத் புரொடக்‌ஷன்ஸ்' என்ற பெயரில் நண்பர்களோடு ரெடியாகி விட்டார். தனுஷ் அல்லது கார்த்தி நடிக்க பெரிய பட்ஜெட்டில் 2022-ல் ஷூட் என்கிறார். இயக்கம்... வேறு யார்? வெங்கட்பிரபுதான்! ஹேங் ஓவர் படமா பாஸ்?

திருவள்ளூர் எஸ்.பி வருண் குமார் - பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ் தம்பதியருக்கு இந்த வாரம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருந்திருக்கின்றன. `Varun, Vandita, Vilohit என்ற அழகிய குடும்பத்தில் புதிதாக Viaansh, Vidit வந்திருக்கிறார்கள்!' என V எழுத்தில் பெயர்கள் வைத்து வளைகாப்பிலிருந்து மகப்பேறு வரை புரொஃபஷனலாக ஷூட் செய்து ஒரு மியூசிக்கல் வீடியோவை சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருக்கிறார்கள். V Family!

இன்பாக்ஸ்

மதுரையில் பாரதி யுவ கேந்திரா என்ற அமைப்பை நடத்திவருகிறார் நெல்லை பாலு. நகரிலுள்ள பார்வைத்திறன் குறைந்தவர்கள், உடல்நலமில்லாமல், வருமானமில்லாமல் இருப்பவர்களைக் கணக்கெடுத்து, அவர்களுக்கு மாதம்தோறும் தேவையான உணவுப்பொருள்களை நண்பர்கள் உதவியுடன் வழங்கி வந்தார். கொரோனா காலத்தில் சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கும், ஆதரவற்ற, நோயுற்ற மனிதர்களுக்கும் தேடிச்சென்று தினமும் உணவு வழங்கினார். இப்போது `அட்சயபாத்திரம்' என்ற பெயரில் மக்களிடம் பொருள்களையும், பணதையும் பெற்று தினமும் 300 பேருக்குத் தரமான உணவைத் தயார் செய்து வழங்கிவருகிறார். ``ஆதரவற்றவர்களுக்கு உணவுதான் முக்கியம். அதை அவர்களைத் தேடிச்சென்று தினமும் கொடுப்பது மனசுக்கு நிம்மதியைத் தருகிறது'' என்கிறார் நெல்லை பாலு. மனிதம் துளிர்க்கட்டும்!

நடிகர் ஜான் ஆபிரகாம் மும்பையில் தனது பாதுகாவலர்கள் துணையுடன் செல்லப் பிராணியான நாயைப் பிடித்தபடி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர், அவரைப் பார்த்ததும் வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். இதை கவனித்த ஜான் ஆபிரகாம், நேராகச் சென்று மொபைலைப் பிடுங்கினார். அந்த இரண்டு பேரும் பயந்துவிட்டனர். ஆனால், ஜான் ஆபிரகாம் போனை செல்ஃபி மோடில் வைத்து `ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ஹவ் ஆர் யு' என்று சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, போனை அவர்களிடம் திருப்பித் தந்துவிட்டு நடைப்பயிற்சியைத் தொடர்ந்தார். செமல்ல!

கனமழை தமிழகத்தின் பல மாவட்ட மக்களைத் துன்பத்தில் தள்ளியிருக்க, கரூர் மாவட்ட மக்களுக்கோ மகிழ்ச்சி. வறண்ட கரூர் மாவட்டத்தில், 20, 30 வருடங்களுக்கு மேலாக வறண்டு கிடந்த நீர்நிலைகள் எல்லாம் இந்த மழையில் நிரம்பியிருக்கின்றன. கரூர் மாவட்டத்தில் காவிரி, நொய்யல், அமராவதி உள்ளிட்ட ஆறுகள் பாய்ந்தாலும், இங்குள்ள 70 சதவிகிதம் பகுதிகள் வறட்சியாக, வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. இங்கு காடுகள் அளவும் வெறும் 4 சதவிகிதம்தான். அதனால், தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதிகளில் ஒன்றாக, இங்குள்ள க.பரமத்தி மாறியிருக்கிறது. இங்கெல்லாம் மானாவாரி விவசாயம்தான் நடக்கிறது. இந்த நிலையில்தான், கரூர் மாவட்டத்தில் வழக்கமாகப் பெய்யும் அளவைவிடக் கூடுதலாக 116.67 மி.மீ அளவு மழை பெய்திருக்கிறது. இதனால், விவசாயிகளும் மக்களும் மழையை நினைத்து ஆராதிக்கிறார்கள். அடடா மழைடா அடை மழைடா!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

நீலகிரி மாவட்டத்தில் சில நாள்களாக இடைவிடாமல் இரவு பகலாகத் தொடர் மழை வெளுத்து வாங்கியது. மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக கடுமையான குளிரும் வாட்டியெடுத்தது. கோத்தகிரி பகுதியில் இரவு நேரத்தில் காட்டை விட்டு வெளியேறிய கரடி ஒன்று, உணவு தேடி கன்னிகாதேவி குடியிருப்புக்கு வந்திருக்கிறது. மழை அதிகமாகப் பெய்து கொண்டிருந்ததால் அருகில் இருக்கும் பயணிகள் நிழற்குடைக்குள் ஒதுங்கி, மழை நிற்கும் வரை பொறுமையாகக் காத்திருந்தது கரடி. அந்த வழியாக இரவு ரோந்து போன காவல்துறையினர், மழையில் தொப்பலாக நனைந்து கரடி குளிரில் வெடவெடுத்துக்கொண்டிருந்த காட்சியைக் கண்டு மிரண்டுபோயினர். உடனடியாக அதை வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாவம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வம்பன் கிராமத்தில் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டுவருகிறது. 40 ஆண்டுகள் பாரம்பரியமுடைய இந்த ஆராய்ச்சி மையத்தில் 11 உளுந்து ரகங்கள், 4 பாசிப்பயறு ரகங்கள், 3 தட்டைப்பயிறு ரகங்கள், 3 துவரை ரகங்கள் உருவாக்கி வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் ஏராளமான விவசாயிகள் இவற்றைப் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டி வருகின்றனர். சமீபத்தில் வம்பன் ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்திய வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வம்பன்-11 உளுந்து ரகம் பல விவசாயிகளை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. பணப்பயறுகள்!

ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி பனந்தோப்பு கிராமத்தில் இருக்கிறது, கிழிந்த தார்ப்பாய் போர்த்திய ஒரு சிறிய குடிசை வீடு. அந்த வீட்டில் முதிய தாயுடன் வசித்துவருகிறார் பார்வையற்ற 29 வயது இளைஞர் கன்னியப்பன். தொடர் கனமழையால், குடிசையில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த கன்னியப்பன், நண்பர் ஒருவரது உதவியுடன் நவம்பர் 17-ம் தேதி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் போன் செய்தார். அழைப்பை எடுத்துப் பேசிய அதிகாரியிடம் தனது பரிதாப நிலையைக் கூறி அழுதார். சில நிமிடங்களுக்குள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்திக்குத் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நெமிலி ஒன்றியக் குழுத் தலைவர் வடிவேலுவை போனில் அழைத்துப் பேசிய அமைச்சர் காந்தி, கன்னியப்பனின் முகவரியைக் கொடுத்து தேவையான உதவிகளைச் செய்துகொடுக்கும்படி உத்தரவிட்டார். கன்னியப்பனின் வீட்டுக்கு விரைந்த வடிவேலு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவரது குடிசைக்கு மாற்றாக, அதே இடத்தில் பசுமை வீடு திட்டத்தின்கீழ் வீடு கட்டித் தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தார். இதெல்லாம் இரண்டு மணி நேரத்துக்குள் சாத்தியமானதுதான் ஆச்சரியமே. காந்தி வணக்கம்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டையைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி கல்யாணி. கணவர் உயிரிழந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரே மகளான 40 வயது ராணியுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். இட்லி வியாபாரம் செய்து தனது மகளைக் காப்பாற்றி வந்த கல்யாணியால், வயது முதிர்வு காரணமாக மகளைப் பராமரிக்க முடியவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் தனது மகளைக் காப்பகத்தில் சேர்த்துவிடும்படி வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து, சீர்காழி கார்டன் மனநல மறுவாழ்வு மையத்திலிருந்து அதன் இயக்குநர் ஜெயந்தி உதயகுமார் இந்த மூதாட்டியின் வீட்டுக்கு வந்து ராணியைக் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார். இத்தனை காலம் தாயுடன் வசித்துவந்த ராணி, தாயைப் பிரிவதைக்கூட அறியாமல் உற்சாகமாக ‘டாட்டா’ காட்டிச் சென்றது அனைவரையும் கண்கலங்க வைத்தது. பெயரில் மட்டுமே ராணி!

ஆந்திர புரட்சிக் கவிஞர் வரவர ராவின் கவிதைகளை ஆங்கிலத்தில் தொகுப்பாகக் கொண்டுவர பெங்குவின் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஆண்டு மத்தியில் நூல் வந்திருக்க வேண்டும். ஆனால், அந்த நூலை வெளியிடாமல் திட்டமிட்டே தாமதம் செய்வதாக பெங்குவின் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பீமா கோரேகான் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் வரவர ராவ். 65 கவிதைகளில் மூன்று கவிதைகள் இந்த வழக்கு பற்றியவை என்பதால், அவற்றைத் தவிர்க்க நினைக்கிறது பெங்குவின் நிறுவனம். அதற்கு வரவர ராவ் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகும் நூல் தாமதமாகிறது. முன்பு சிறையில் இருந்தபடி வரவர ராவ் எழுதிய கடிதங்களை `Captive Imagination' என்ற நூலாக பெங்குவின் வெளியிட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே வரவரராவ் கடிதங்கள் தமிழில் ‘சிறைப்பட்ட கற்பனை’ என்ற பெயரில் நூலாக வெளியாகி, ஆனந்த விகடனின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதும் பெற்றது. மீண்டு வாருங்கள் காம்ரேட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு