Published:Updated:

இன்பாக்ஸ்

தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
News
தமன்னா

ராகுல் காந்தியை பா.ஜ.க-வின் ஸ்மிர்தி இரானி சுலபமாகத் தோற்கடித்த உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி மீது மிகுந்த கவனம் வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

டோலிவுட், பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்திவருகிறார் தமன்னா. வெங்கடேஷ் - வருண் தேஜுடன் `F3', கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான `லவ் மாக்டெய்ல்' படத்தின் தெலுங்கு ரீமேக், சிரஞ்சீவியுடன் `போலா ஷங்கர்', இந்தியில் ரித்தேஷ் தேஷ்முக்குடன் `Plan A Plan B', நவாஸுதீன் சித்திக்குடன் `போலே சுடியான்' எனப் பல படங்கள் வரிசைகட்டிக் காத்திருக்கின்றன. தமிழில் `நவம்பர் ஸ்டோரி' ஹிட்டானதைத் தொடர்ந்து, நிறைய ஹீரோயின் சென்ட்ரிக் கதைகள் வருகின்றனவாம். சோ பிஸி ப்ளீஸ் வெயிட்..!

இன்பாக்ஸ்

பொயப்பட்டி ஸ்ரீனு - பாலகிருஷ்ணா கூட்டணியில் உருவான மூன்றாவது படமான `அகண்டா'வும் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. பாலகிருஷ்ணாவுக்கும் முந்தைய படங்கள் சரியாகப் போகவில்லை. பொயப்பட்டி ஸ்ரீனுவுக்கும் ராம்சரணை வைத்து இயக்கிய `வினய விதய ராமா' படத்திற்கும் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆக, நீண்ட நாள் கழித்து இருவருக்கும் வெற்றி கிடைத்திருப்பதால் கொண்டாடித் தீர்க்கின்றனர். பொயப்பட்டி ஸ்ரீனுவிடம் சிரஞ்சீவி கதை சொல்லும்படி கேட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வருகின்றன. ஆக்‌ஷன் தமாக்கா..!

காமெடிதான் தனக்கு வரும் என்று நினைக்காமல் எமோஷன் காட்சிகளிலும் பக்காவாக ஸ்கோர் செய்கிறார் யோகிபாபு. `மண்டேலா' படம் அதற்கு உதாரணம். சமீபமாக, பா.இரஞ்சித் தயாரிப்பில் `பொம்மை நாயகி' என்ற படத்தை நடித்து முடித்திருக்கிறார். அப்பா - மகளுக்கிடையே நடக்கும் கதை. தற்போது அறிமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் எமோஷனலான காதல் கதை ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம். அதற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்..!

இன்பாக்ஸ்

ஐ.எம்.எஃப் நிதி அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் என்ற நம்பர் 2 இடத்தைப் பிடித்திருக்கிறார், இந்தியரான கீதா கோபிநாத். ஏற்கெனவே இந்த அமைப்பின் முதன்மைப் பொருளாதார நிபுணர் பொறுப்பை ஏற்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தவர் இவர். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டு மைசூரில் வளர்ந்த கீதா, இளம் வயதில் படிப்பில் படு சுட்டி. மருத்துவம், என்ஜீனியரிங் எனச் சேரும் அளவுக்கு மார்க் எடுத்தாலும், பொருளாதாரத்தை விரும்பித் தேர்வு செய்தவர். அப்போது ஐ.ஏ.எஸ் அவர் இலக்காக இருந்தது. ஆனால், `எம்.பி.ஏ படித்தால் நல்ல சம்பளம் கிடைக்கும்' என அந்த திசையில் போனார். கல்லூரி நாள்களில் மாடல் ஆக வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்றவர். இப்போது பொருளாதார உலகின் ஃபேஷன் அடையாளமாகியிருக்கிறார். சிங்கப்பெண்ணே!

ராகுல் காந்தியை பா.ஜ.க-வின் ஸ்மிர்தி இரானி சுலபமாகத் தோற்கடித்த உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி மீது மிகுந்த கவனம் வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. அந்தத் தொகுதிக்கு என்று ஸ்பெஷல் திட்டங்கள் அடிக்கடி அறிவிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்ட், 5,100 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் துப்பாக்கித் தொழிற்சாலை. ரஷ்யாவின் கலஷ்னிகோவ் நிறுவனத்துடன் பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து இங்கு AK-203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கவுள்ளன. இந்திய ராணுவம் இனி இந்த வகைத் துப்பாக்கிகளையே பிரதானமாகப் பயன்படுத்தும். குறி வச்சாச்சு!

அக்‌ஷய் குமாரின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘சூர்யவன்சி’க்கு நல்ல வரவேற்பு. படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆரம்பத்தில் ரூ.75 கோடிக்கு விலை பேசியிருந்தது. ஆனால், அப்படத்திற்கு தியேட்டரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 100 கோடியாக இது உயர்ந்துவிட்டது. மகாராஷ்டிராவில் கொரோனாக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தியேட்டர்களில் வெளியான முதல் படமாகப் பார்க்கப்படும் சூர்யவன்சி, உலகம் முழுவதும் 287 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. வசூல்வன்சி!

இன்பாக்ஸ்

ஒமைக்ரான் என்ற பெயருடன் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் நிலையில், `இதற்காக கொரோனாத் தடுப்பூசியில் மாற்றம் செய்ய வேண்டுமா' என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ``தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தடுப்பூசி போடாதவர்களே நோயுடன் மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆகிறார்கள்'' என்கிறார் தென்னாப்பிரிக்கா சுகாதார அமைச்சர் ஜோ பாஹ்லா. WHO எமர்ஜென்சி இயக்குநர் மைக் ரியான், ``இப்போது இருக்கிற தடுப்பூசிகளே நல்ல பாதுகாப்பைத் தருகின்றன'' என்கிறார். என்றாலும் பல தடுப்பூசி நிறுவனங்கள், ஒமைக்ரானுக்கு எதிராகத் தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்ற ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டன. ``கொரோனா வைரஸ் மாறுவதுபோல ஏதோ ஒரு கட்டத்தில் நாம் தடுப்பூசிகளையும் மாற்ற வேண்டும். அப்படி ஒரு மாற்றம் செய்ய, குறைந்தபட்சம் 100 நாள்கள் அவகாசம் தேவைப்படும்'' என்கிறார் பயோ என் டெக் நிறுவனத் தலைவர் உகுர் சாஹின். விடாத வைரஸ்!.

மாவட்டத்தில் நீண்டகாலமாக உள்ள வேலைவாய்ப்பின்மை, மீனவர் பிரச்னைகளுக்கு எந்தவொரு தீர்வையும் ஏற்படுத்தாவிட்டாலும் ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து செய்து தொகுதி மக்களிடம் பாராட்டைப் பெற்றுவருகிறார் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி. பள்ளி, கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாத, மாவட்டத்திலுள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் காலம் முழுவதுக்குமான கல்விக்கட்டணத்தைத் தன் சொந்த நிதியிலிருந்து செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு 600 மாணவர்களின் கல்விக்கட்டணத்தை ஏற்றுள்ளார். வறட்சி மாவட்டத்தில் தகுதியான மாணவர்களின் உயர்கல்விக் கனவு கானலாகிவிடக்கூடாது என்ற நோக்கில், ஒரு மாணவனின் கல்விக்கட்டணம் லட்சக்கணக்கில் இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறார். இதற்காக ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்யும் அவருக்கு, கூட்டணிக் கட்சியினர் பாராட்டு விழா நடத்தியுள்ளார்கள். கற்றல் நன்று!

இன்பாக்ஸ்

சர்வதேச விண்கற்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நான்கு பேர், 13 சிறுகோள் மாதிரிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்களைப் பாராட்டி ‘நாசா’ சான்றிதழ் வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணி, ஷாஜாதி பேகம், ஷரோன் லிடியா மற்றும் லலித் விக்ரமன் என்ற நான்கு மாணவர்களும், அமெரிக்காவின் ஹவாய் தொலைநோக்கி எடுத்த படங்களில், பிரத்யேக மென்பொருள் உதவியுடன் 64 நகரும் வான் பொருள்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றில் 13 வான்பொருள்கள் விண்கற்களாக இருக்கலாம் எனக் கருதி, ஆய்வுக்காக நாசாவுக்கே அனுப்பிவைத்துள்ளனர். அவை உறுதி செய்யப்படும் பட்சத்தில், அந்த சிறுகோள்களுக்குப் பெயர் வைக்கும் உரிமையை இந்த நான்கு மாணவர்களும் பெறுவார்களாம். மகிழ்ச்சி!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது வழக்கம். சிலர், மற்ற நாள்களிலும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வருவதுண்டு. இப்படி, மாற்றுத்திறனாளிகளும் வருவார்கள். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு 200 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி ஒரு மாற்றுத்திறனாளி தரையில் ஊர்ந்து செல்வதை சிலர் சமூகவலைதளங்களில் பதிவு செய்ய, உடனே மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க இரண்டு ஆட்டோக்களுக்கு தற்காலிகமாக ஏற்பாடு செய்தார். இந்நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பெயரில் இயங்கி வரும் பவுண்டேஷன் சார்பில் ஒரு பேட்டரி காரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வழங்கியிருக்கிறார். அறம் செய்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த இளங்கோவன் மகன் காளிதாஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். கிராமியப் பாடல்களை நேர்த்தியாகப் பாடும் திறமை உள்ள காளிதாஸ், சமீபத்தில் சேலத்தில் நடந்த மாநில அளவிலான கலை உற்சவப் போட்டியில் கிராமியப் பாடல் பிரிவில் 2-ம் இடம் பிடித்து அசத்தினார். புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு, உடனே அவரைத் தன் அலுவலகத்திற்கு வரவழைத்துப் பாடவைத்துள்ளார். `ஆத்தா உன் சேலை அது ஆகாயத்தைப் போல' என்று அம்மாவைப் பற்றிய பாடலை மாணவன் காளிதாஸ் பாடி முடித்ததும் ஆட்சியரின் கண்கள் கலங்கின. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ, தற்போது பல கச்சேரிகளில் கலந்துகொள்ள காளிதாஸுக்கு வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. திறமைக்கு மரியாதை!

தங்களது கோரிக்கைகளுக்காகக் கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்துவதுதான் உலக வழக்கம். ஆனால், குன்னூர் வணிகர்கள் வெள்ளைக்கொடி ஏற்றி விநோதப் போராட்டம் நடத்துகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான 900-க்கும் அதிகமான கடைகளை வாடகைக்கு எடுத்து வணிகர்கள் நடத்திவருகின்றனர். கடந்த ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் உயர்த்திய கடை வாடகையைக் குறைக்க வலியுறுத்தி இவர்கள் போராட்டம் நடத்திவந்தனர். கடைகளின் வாடகையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். ஆனால், அதே வாடகையே இன்னமும் வசூலிக்கப்படுகிறது. இந்த வாக்குறுதியை முதல்வருக்கு நினைவூட்ட, நகராட்சிக் கடைகளின் 900 வணிகர்கள் வெள்ளைக்கொடிகளை ஏற்றிப் போராட்டம் நடத்திவருகின்றனர். மாத்தி யோசி!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்திருக்கும் அகரம் கிராமத்தில் வசித்துவருகின்றனர் நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த சக்திவேல்-முத்துலட்சுமி தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமிக்கு டிசம்பர் 2-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் அகரம் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றுவிட்டாலும், சாலை வசதியில்லாததால் அதற்கு மேல் செல்ல முடியவில்லை. அதனால் முத்துலட்சுமி ஆம்புலன்ஸுக்கு நடத்தி அழைத்து வரப்பட்டார். திடீரென பிரசவ வலி அதிகமானதால் அலறித் துடித்துத் தரையில் அமர்ந்த முத்துலட்சுமியைப் பரிசோதித்த ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் சௌந்தரராஜன், உடனே அவருக்கு பிரசவம் பார்க்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்திருக்கிறார். உடனே அங்கிருந்தவர்களை புடவையைச் சுற்றிப் பிடிக்கும்படி கூறிய சௌந்தரராஜன், முத்துலட்சுமிக்கு பிரசவம் பார்த்தார். சுகப்பிரசவத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து அதே ஆம்புலன்ஸில் தாயும் சேயும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துரிதமாகச் செயல்பட்டு இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய சௌந்தரராஜனை `ஆண் தேவதை’ என்று பாராட்டி வருகிறது மெய்நிகர் உலகம். உயிர்ச் சேவை!

கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுவருகின்றன. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பொழிமுகம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் துறைமுகத்தின் கட்டுமானம் சரியில்லாததால் அடிக்கடி படகுகள் விபத்துக்குள்ளாவதாக மீனவர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். அதே சமயம், `துறைமுகம் அமைந்துள்ள பகுதி எட்டு விதமான கோணங்களில் காற்று வீசும் பகுதி. துறைமுகத்துக்குத் தேர்வு செய்த இடம் சரியில்லை' என முதியவர்கள் சிலர் கூறிவருகின்றனர். கட்டுமானப் பிரச்னையா, காற்றுப் பிரச்னையா எனத் தெரியாமல் குழம்பிப்போயுள்ளனர் அதிகாரிகள். ஆக, கடைசிவரை சொல்லமாட்டீங்க?

இன்பாக்ஸ்

ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 10,500 சதுர கி.மீ கடல் பரப்பளவை `மன்னார் வளைகுடா கடல்வாழ் உயர்கோள காப்பகம்’ என கடந்த 1989-ம் ஆண்டு அறிவித்தது மத்திய அரசு. இதற்கு யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகாரம் அளித்துள்ளது. 21 தீவுகளை உள்ளடக்கியதாக இந்த தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் விலங்குச்சல்லி தீவு, பூவரசன்பட்டி என இரண்டு சிறிய தீவுகளும் கடலில் மூழ்கிக் காணாமற்போய்விட்டன. மன்னார் வளைகுடாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள வான்தீவு, கடல் அரிப்பால் பரப்பளவில் பாதியாகக் குறைந்துவிட்டது. இத்தீவுப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு பனைமர விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. இத்தீவுப் பகுதியில் நடப்பட்ட சுமார் இரண்டாயிரம் பனைமர விதைகள், முளைத்து தற்போது ஒரு அடி முதல் இரண்டு அடி வரை வளர்ந்துள்ளன. இப்போது இதேபோல, பத்துத் தீவுகளில் இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்யும் பணி விரிவுபடுத்தப்பட்டது. இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியிலும் பாராட்டிப் பேசியுள்ளார். செம்மண் பூமியிலும், கரிசல் பூமியிலும் செழித்து வளரும் பனை மரங்கள், சுற்றிலும் உப்பு நீராலும் பாறைகளாலும் சூழப்பட்ட தீவுக்குள்ளும் முளைத்து வளர்ந்து மண்ணைக் காக்கின்றன. இயற்கை எனும் பேராற்றல்!