Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இது இன்ஸ்டா காலம். தங்கள் பர்சனல் படங்களோடு மார்க்கெட்டிங் வீடியோ மற்றும் படங்களை பிராண்டிங் செய்து கல்லா கட்டுகிறார்கள் இன்றைய நவயுக வி.ஐ.பி ஜோடிகள்.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைக்கிறார் ஸ்ரேயா. ராஜமௌலியின் `ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் சரோஜினியாக நடித்ததில் சிலிர்ப்பவர், சமீபத்தில் கணவர் மற்றும் குழந்தை ராதாவுடன் கோவாவில் ரிலாக்ஸ் ட்ரிப் போயிருக்கிறார். ``என் மகள் என் வாழ்க்கையை நிறைய மாத்திட்டா. அவளோடு நிறைய நேரம் செலவிடுறேன். எவ்ளோ வேலையா இருந்தாலும் அவளோட ஞாபகம் வந்திடுது. என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அவ ஆகிட்டா. இந்த உணர்வு அற்புதமா இருக்கு...'' எனப் பூரிக்கிறார் ஸ்ரேயா. ஆனந்த யாழை மீட்டுகிறாள்...

இன்பாக்ஸ்

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் கைநிறைய புத்தகங்களை எப்போதும் கருத்தாக வெளியிடுவார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இந்த முறையும் அவரது பேவரிட் ரஷ்ய கலாசார மையத்தில் டிசம்பர் 25 அன்று புத்தகங்களை வெளியிடுகிறார். டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை முன்வைத்து எஸ்.ரா எழுதிய `மண்டியிடுங்கள் தந்தையே' என்ற புத்தகமும் அதில் ஒன்றாக வெளியாகிறது. சர்வதேசாந்திரி!

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் தனது பள்ளித் தோழி ரேச்சலைத் திருமணம் செய்திருக்கிறார். ஏர் ஹோஸ்டஸாகப் பணிபுரிந்தவர் ரேச்சல். கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக டெல்லியில் மிக எளிமையாக நடந்த திருமணத்துக்குக் கட்சிக்காரர்கள், அரசியல் தலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. தேஜஸ்வியின் நண்பரான உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மட்டும் வந்திருந்தார். நீண்ட காலமாக திருமணத்தைத் தள்ளிப்போட்டு வந்தார் தேஜஸ்வி. பீகார் துணை முதல்வராக இருந்தபோது, மக்கள் தொடர்புகொள்வதற்காக அவர் தனது போன் நம்பரைக் கொடுத்திருந்தார். `என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்' என்று அப்போது அந்த நம்பருக்கு சுமார் 44,000 புரொபோஸல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது! திருமண சீசன்!

இன்பாக்ஸ்

`புஷ்பா' ராஷ்மிகா மந்தானா, இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ராவுடன் கமிட் ஆன `மிஷன் மஜ்னு'வில் அவரது போர்ஷன் ஷூட் செய்யப்பட்டுவிட்டது. வருகிற மே மாதம் ரிலீஸ். இதைத் தொடர்ந்து அமிதாப்புடன் `குட் பை'யில் நடித்துவருகிறார். அதில் நடிக்க வேண்டியவர் கியாரா அத்வானி. கியாராவின் கால்ஷீட் டைரி நிரம்பிவழிவதால் ராஷ்மிகா இப்போது டாப் கியரில்! ராக்கெட் ராஷ்மிகா!

இது இன்ஸ்டா காலம். தங்கள் பர்சனல் படங்களோடு மார்க்கெட்டிங் வீடியோ மற்றும் படங்களை பிராண்டிங் செய்து கல்லா கட்டுகிறார்கள் இன்றைய நவயுக வி.ஐ.பி ஜோடிகள். சமீபத்தில் Indian Institute of Human Brands என்ற நிறுவனம் `யாரெல்லாம் பிராண்டிங் வேல்யூ உள்ள ஜோடி' என டாப் பட்டியல் போட்டிருக்கிறது. அதில் முதலிடம் பிடித்திருப்பது முகேஷ் அம்பானி - நீத்தா அம்பானி தம்பதி. இரண்டாமிடம் காதலர்களான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே. மூன்றாமிடம்தான் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுக்குக் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் மணம் முடித்த விக்கி கௌஷல் - கத்ரீனா கயிப்புக்கே ஒன்பதாம் இடமாம்! க்ளிக்கியதெல்லாம் பொன்!

சமீபத்திய வருமானவரித் துறையின் அதிரடி ரெய்டுகளால் ஆடிப்போயிருக்கிறது மலையாள சினிமா. பெரிய ஸ்டார்களின் தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன் எனக் கொச்சியிலுள்ள மூவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனையிடப்பட்டதில் சில முக்கிய டாக்குமெண்ட்டுகள் கிடைத்தனவாம். `கொரோனா லாக்டௌனிலும் வாரம் பத்துப் படங்கள் தடையில்லாமல் ரிலீஸானதன் பின்னணியில் ஹவாலா பணம் இருக்கிறது' என்ற குற்றச்சாட்டு கிளம்பியதால்தான் இந்த அதிரடி ரெய்டு என்று காதைக் கடிக்கிறார்கள். முக்கிய தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர், சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் என்பதால் இந்த ரெய்டுகளை உன்னிப்பாக கவனிக்கிறது ஒட்டுமொத்த மல்லுவுட்டும். என்னமோ போ சேட்டா!

ஷங்கர், ராஜமௌலி படங்களின் பிரமாண்டத்துக்கு இணையான பிரமாண்டத்துடன் நடந்து முடிந்திருக்கிறது பாலிவுட் நடிகர்கள் கத்ரினா கைஃப் - விக்கி கௌசல் திருமணம். பாலிவுட் காதல் டு கல்யாணம் என்றாலே செல்லுமிடம் எல்லாம் போட்டோக்களில் சிக்குவார்கள். ஆனால், ரகசியமாகவே நடந்துவந்தது இவர்களின் காதல் நிகழ்வுகள். கல்யாண போட்டோக்கள்கூட கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெளியே வந்தன. ட்விட்டரிலிருக்கும் டெல்லி போலீஸ் அக்கௌண்ட் கூட, `பாஸ்வேர்டுகளை விக்கி கத்ரினா திருமணம் போல் ரகசியமாய் வைத்துக்கொள்ளுங்கள்' என நக்கல் அடித்திருக்கிறது. இந்தத் திருமண பட்ஜெட்டில் பெரும் பங்கை கத்ரினா கைஃப் பார்த்துக்கொண்டாராம். ஆனாலும், பாலிவுட் மீடியாக்கள் இதெல்லாம் பெரிய செலவே இல்லை என தீபிகா, அனுஷ்கா போன்ற பிரபலங்களின் திருமண பட்ஜெட்டைப் பட்டியல் போடுகிறார்கள். கோலி - அனுஷ்கா திருமணத்துக்கு நூறு கோடி செலவு செய்யப்பட்டதுதான் சமீபத்திய மெகா பட்ஜெட் திருமணமாம். மொய் வந்துச்சுங்களா...

இன்பாக்ஸ்

கரூர் மாநகரில் உள்ள வணிக நிறுவனங்களில் சில்லறை கேட்பதுபோல் பணத்தைத் திருடுவது, தனியாகச் செல்லும் பெண்களிடம் நகைகளைப் பறிப்பது என்று குற்றச்செயல்கள் அதிகரித்துவருகின்றன. திருட்டைத் தடுக்க சி.சி.டி.வி மூலம் கண்காணிக்க விரும்பியது மாவட்ட போலீஸ். இருந்தாலும், அவர்களால் முழுமையாக எல்லாப் பகுதிகளிலும் சி.சி.டி.வி கேமராக்களை அமைக்க முடியவில்லை. இதைக் கேள்விப்பட்ட கரூர் வர்த்தகர்கள், தங்கள் செலவில் 100 சி.சி.டி.வி கேமராக்களை அமைத்திருக்கிறார்கள். ரூ. 17 லட்சம் செலவில், கரூர் மாநகரின் திருக்காம்புலியூர் ரவுண்டானா தொடங்கி கோவை சாலை வரை, ஜவஹர் பஜார் முதல் 5 ரோடு வரை என மொத்தம் 3.7 கிலோமீட்டர் தூரத்துக்கு சி.சி.டி.வி கேமராக்களை அமைத்திருக்கிறார்கள். சி.சி.டி.வி கேமராக்களுக்கு வயர் கொண்டு செல்ல தனி போஸ்ட்டுகள், தனி லைன், தரமான வயர்கள் என்று சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். விழா நடத்தி இவற்றைக் காவல்துறைக்கு ஒப்படைத்த வர்த்தகர்கள், `இன்னும் நிறைய சி.சி.டி.வி கேமராக்களை அமைத்துத் தரவிருக்கிறோம். எந்தத் திருடனும் இனி திருடவும் முடியாது, ஓடி ஒளியவும் முடியாது' என்று தம்ஸ் அப் காட்டுகிறார்கள். பீ கேர்ஃபுல் கேடிகளா!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தங்களை மகிழ்ச்சிப்படுத்துகிற திரைப்பட போஸ்டராக இருக்கட்டும், பரோட்டா மாஸ்டராக இருக்கட்டும், எவருக்கும் விழா எடுத்துச் சிலிர்க்க வைத்துவிடுவார்கள் மதுரை மக்கள். வைகையின் இரு கரைகளில் பிரிந்துகிடந்த மதுரை மாநகரை ஒன்றாக்கி கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஏ.வி பாலத்தின் பிறந்த நாளை மட்டும் சும்மா விட்டுவிடுவார்களா? ஆல்பர்ட் விக்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியால் அந்தக் காலத்திலேயே கோரிப்பாளையத்தையும் நெல்லுப்பேட்டையையும் இணைக்கும் வைகை ஆற்றின் நடுவே அழகாகவும் அகலமாகவும் கட்டப்பட்ட பாலம் ஆல்பர்ட் விக்டர் பாலம் என்றே அழைக்கப்படுகிறது. பாலம் கட்டப்பட்ட தேதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆல்பர்ட் விக்டருக்கு நன்றி தெரிவித்து விழா கொண்டாடி மகிழ்கிறார்கள் மக்கள். அந்த வகையில் டிசம்பர் 8-ம் தேதி ஏ.வி பாலத்தின் 136வது பிறந்த நாளை கேக் வெட்டி வைகை நதி இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் உற்சாகமாகக் கொண்டாடித் தீர்த்தன. பாசக்கார பசங்க!

இன்பாக்ஸ்

கோலிவுட்டின் புது வரவான `என்ன சொல்லப் போகிறாய்' ஹீரோ அஸ்வின், படத்தின் ஆடியோ ஃபங்ஷனில் 40 கதைகள் கேட்டுத் தூங்கிய கதையைச் சொல்லப்போக மீம் கண்டெண்ட் ஆனார். இதேபோன்ற சம்பவத்தில் சிக்கியிருக்கிறார் மலேசிய தமிழ் சினிமாவின் பிரபலம் பால கணபதி வில்லியம் என்ற BGW. பாப் பாடகராக, தயாரிப்பாளராக, நடிகராக சமீபத்திய டீன்களின் சென்சேஷனான இவருக்கு மலேசியாவைத் தாண்டியும் எக்கச்சக்க ஃபேன்ஸ் உண்டு. 31 வயதான வில்லியம், `அழகா பொறந்தது என் தப்பா?' என்று ஒரு விழாவில் விளையாட்டாகப் பேசிவிட, `நாம பேசக்கூடாது, நம்ம ஒர்க்தான் பேசணும் நண்பா!' என அட்வைஸில் வறுத்தெடுத்துவிட்டார்கள் நெட்டிசன்ஸ். `இதுபோல சர்ச்சைகளில் சிக்கியே பல பெரிய புராஜெக்ட்கள் இவரிடமிருந்து கைநழுவிப்போகுது!' என ரொம்பவே வருத்தப்படுகிறார்கள் BGW army.. மில்லினியல்ஸ் உலகமே தனி!