சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

‘சூரரைப் போற்று’ பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுதா கொங்கரா அதன் இந்தி ரீமேக் வேலைகளில் இருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது அதிகமும் குவைத்தில்தான் தங்குகிறார். அங்கேயே தங்கி இசையமைப்பது அவருக்குப் பிடித்திருக்கிறது. பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் அவர் இங்கு வருகிறார். அல்லது பிள்ளைகள் குவைத் போய் திரும்பிவிடுகிறார்கள். கைவசமிருக்கும் 14 படங்களும் அங்கிருந்தே இசை வடிவம் பெறுகின்றன. குவைத்திலிருந்து சில இசைக்குறிப்புகள்!

இன்பாக்ஸ்

பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் புதிதாக எந்தப் படம் டைரக்ட் செய்து முடிந்தாலும் டைரக்டர்கள் பாலா, சசிகுமார் இருவருக்கும் போன் போட்டு மும்பைக்கு வரவழைத்துப் போட்டுக் காண்பிக்கிறார். டிஸ்கஷன் நடத்துகிறார். இரண்டு பேரின் மீதும் அவ்வளவு மரியாதை. நட்பே துணை!

இன்பாக்ஸ்

தன் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சோகத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை ஷாருக் கான். ஏற்கெனவே நடந்துகொண்டிருந்த ‘பதான்’ படத்தின் படப்பிடிப்பிலும் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். அவரது படம் கடைசியாக 2018-ல் வெளியானது. சமூக வலைதளங்களிலும் முகம் காட்ட மறுக்கிறார். இதனால் மிகவும் வருத்தமடைந்த அவரின் ரசிகர்கள், #WEMISSYOUSRK என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கினர். வரணும்... பழைய பன்னீர்செல்வமா வரணும்!

இன்பாக்ஸ்

‘வலிமை’ ரிலீஸ் குறித்தும், அடுத்து நடிக்கும் படம் பற்றியும் அஜித்திடம் விவாதிக்க விரும்பினார் போனி கபூர். ‘`நாம நேர்ல பேசிக்கலாம்’’ என்று ஒன்லைனாகச் சொன்ன அஜித், அன்றே மும்பைக்குப் பறந்து போனிகபூரைச் சந்தித்தார். இப்போதைய கணிப்புப்படி ‘வலிமை’ ரிலீஸ் மார்ச்சில் இருக்கலாம் என்கிறார்கள். கொரோனாப் பரவல் பிப்ரவரியில் குறைந்திருந்தால் ‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்புக்குக் கிளம்புவதுடன், தீபாவளிக்கு அதை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். முடிவில்லா அப்டேட்ஸ்!

சூர்யாவின் வீட்டில் மினி லைப்ரரி உள்ளது. அப்பா சிவகுமார் படித்த, படிக்கும் புத்தகங்களை அதில் அழகாக வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார். இதுதவிர தன் நண்பர்கள் படிக்கச் சொல்லிப் பரிந்துரைக்கும் புத்தகங்களையும் உடனே வரவழைத்து, கையோடு படித்துவிடுகிறார் சூர்யா. அப்பா, அண்ணனைப் பார்த்து கார்த்தியும் புத்தகப்பிரியர் ஆகியிருக்கிறார். நல்லதோர் குடும்பம்!

சைலன்டாகத் தனக்கான மார்க்கெட்டை விரிவடையச் செய்துவருகிறார் துல்கர் சல்மான். மலையாளம், தமிழ்ப் படங்களில் நடித்து பாப்புலரான பிறகு, ‘மகாநடி’ படத்தில் ஜெமினி கணேசனாக நடித்து டோலிவுட்டிலும் நன்மதிப்பைப் பெற்றுவிட்டார். அவர் தமிழில் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். தவிர, சோனம் கபூருடன் ‘ஜோயா ஃபேக்டர்’, இர்பான் கானுடன் ‘கார்வான்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் துல்கரின் என்ட்ரி சக்சஸ்தான். அடுத்து பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கத்தில் ‘Chup: Revenge of the Artist’ என்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தை முடித்திருக்கிறார். ‘தி ஃபேமினி மேன்’ வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருப்பதன் மூலம் ஓ.டி.டி உலகத்திலும் தடம் பதிக்கவிருக்கிறார் துல்கர் சல்மான். ஆல்ரவுண்டர்!

இன்பாக்ஸ்

மகன் பிரணவை முன்னுக்குக் கொண்டுவர ஒரு அப்பாவாக கடுமையாக உழைக்கிறார் மோகன்லால். 15 பாடல்களைக் கொண்ட ‘ஹிருதயம்’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் பிரணவ். கொரோனா காரணமாக சினிமா வெளியாவதில் சிக்கல் வருமோ என்ற படபடப்பு மோகன்லாலுக்கு இருக்கவே செய்தது. ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாக வதந்தியும் பரவியது. ஆனாலும், மோகன்லால் முயற்சியால் ஜனவரி 21-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிவிட்டது. கேரளாவில் மட்டும் 450 திரையரங்குகளில் வெளியான ‘ஹிருதயம்’ நன்றாக ஓட வேண்டும் என்று இதயம் படபடக்கக் காத்திருக்கிறார் மோகன்லால். துடிக்கும் அப்பாவின் இதயம்!

‘சூரரைப் போற்று’ பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுதா கொங்கரா அதன் இந்தி ரீமேக் வேலைகளில் இருக்கிறார். அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தை முடித்துவிட்டு, சிம்புவை வைத்துப் படமொன்று இயக்கவும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அடுத்து, ரத்தன் டாடாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்கும் திட்டமும் சுதாவிடம் இருக்கிறதாம். அதில் மாதவன் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். பருந்தாகுது ஊர்க்குருவி!

ஆன்மிகக் கதைகள், சித்தர் வரலாறு, அமானுஷ்ய கதைகள், மர்மத் தொடர்கள் மூலம் பிரபலமான எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சாற்றலிலும் புகழ்பெற்றவர். மதுரையில் வாரம்தோறும் கோயில்கள், மண்டபங்களில் இவர் ஆன்மிக உரையாற்றிவருகிறார். சிறப்பு!

நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பொங்கலுக்குப் பின்னர் தைப்பூச நாளில் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நடக்கும் இது, பொங்கல் விழாவுக்கு இணையானதாக இருக்கும். பெண் குழந்தைகள் தங்கள் வீட்டின் முற்றத்தில் களிமண் கொண்டு சிறிய வீடு கட்டுவார்கள். அந்த வீட்டில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வெற்றிலைமீது வைப்பார்கள். வீட்டின் முன்பாக புதிய அடுப்பு உருவாக்கி அதில் புதுப் பானையில் பொங்கலிடுவார்கள். பொங்கலைப் படையலிட்ட பின்னர், பிள்ளையாரை இலையுடன் தூக்கிச் சென்று அருகில் இருக்கும் நீர்நிலையில் கரைத்துவிட்டு வந்து பொங்கலை உண்டு மகிழ்கிறார்கள். சின்னஞ்சிறு மனங்களின் பொங்கல்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளர் தேவிபாரதிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சுடுமண் சிற்பமும், ரூபாய் ஒரு லட்சமும் கொண்ட விருது இது. கூடவே, தேவிபாரதியின் 12 சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாகி 500 பேருக்கு வாசித்தறிய அனுப்பியிருக்கிறார்கள். திக்கெட்டும் பரவட்டும் தமிழ்!

முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குக்கின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் அவரது சிலை தமிழக அரசு சார்பில் நிறுவப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கூடலூர் லோயர் கேம்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னி குக் நினைவு மணிமண்டபம் பராமரிப்பின்றி உள்ளது. பென்னி குக் பயன்படுத்திய பொருள்களைச் சேகரித்து இங்கு வைக்க வேண்டும் என்பது தேனி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. ‘இதை நிறைவேற்றாமல், இந்தியாவில் உள்ள புனேயில் பிறந்த பென்னி குக்கிற்கு எதற்காக இங்கிலாந்தில் சிலை நிறுவ வேண்டும்’ என தேனி மாவட்ட விவசாயிகள் கேட்கிறார்கள். நல்லது நடக்கட்டும்!

நார்வே முன்னாள் அமைச்சரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான எரிக் சோல்ஹிம், கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட கொல்லிமலை சாலையின் டாப் ஆங்கிள் படங்களை வெளியிட்டு, `அற்புதமான மலைப்பிரதேச ரோடு இது' என்று ட்வீட் செய்திருந்தார். இதைப் பார்த்த மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா, `உங்க ட்வீட்டைப் பார்த்தபிறகுதான், எனது நாட்டைப் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். கொல்லிமலை சாலையைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது' என்று பதில் தந்தார். இப்போது சோஷியல் மீடியாவில் கொல்லிமலை அதிக கவனம் பெற்றுள்ளது. காளப்பன்நாயக்கன்பட்டி வழியாக உள்ள இந்தச் சாலை 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் போடப்பட்டு 60 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதைத்தவிர, முள்ளுக்குறிச்சியில் இருந்து மாற்றுப்பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் வசதிகளை மேம்படுத்தி முதன்மையான சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ``கொல்லிமலை பற்றி மற்ற நாட்டினருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், உள்ளூரைச் சேர்ந்த சுற்றுலா அமைச்சர் மதிவேந்தனுக்குத் தெரியவில்லை'' என்கிறார்கள் மக்கள். கொல்லி எனும் பேரழகு!