Published:Updated:

இன்பாக்ஸ்

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

பிரபுதேவா கைவசம் எத்தனை படங்கள் இருக்கின்றன என்பது அவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு அதிக படங்களில் ஒப்பந்தமாகி ஒவ்வொன்றாக முடித்துக்கொடுத்துவருகிறார்.

இன்பாக்ஸ்

பிரபுதேவா கைவசம் எத்தனை படங்கள் இருக்கின்றன என்பது அவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு அதிக படங்களில் ஒப்பந்தமாகி ஒவ்வொன்றாக முடித்துக்கொடுத்துவருகிறார்.

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

நெல்சன்-ரஜினி படம் சாத்தியமானதற்கு அனிருத்தின் அன்புதான் காரணமாம். அனி-நெல்சன் இருவரின் நட்பு கோடம்பாக்கம் அறிந்த ஒன்று. நெல்சனின் முதல் படமான `கோலமாவு கோகிலா'வில் முதலில் நயன்தாரா இல்லை. `இதில் நயன்தாரா நடித்தால் பொருத்தமா இருக்கும்' என்றதோடு, நயன் கால்ஷீட்டையும் வாங்கிக் கொடுத்தார் அனிருத். இப்படி ஒரு ஆழமான நட்பின் இறுக்கத்தால் நெல்சனிடம் ரஜினிக்கான கதையையும் ரெடி பண்ணச் சொன்னார். நெல்சனும் உடனே ரெடியானார். கையோடு ரஜினியிடம் உட்கார வைத்து, கதையையும் க்ளிக் செய்ய வைத்துவிட்டார் அனிருத். `நண்பன் என்றால் இப்படி இருக்கவேண்டும்' என்ற கெத்துப் பேச்சு பரவலாகக் கேட்கிறது. நண்பேன்டா!

இன்பாக்ஸ்

பிரபுதேவா கைவசம் எத்தனை படங்கள் இருக்கின்றன என்பது அவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு அதிக படங்களில் ஒப்பந்தமாகி ஒவ்வொன்றாக முடித்துக்கொடுத்துவருகிறார். பாலிவுட்டில் படம் இயக்குவதில் பயங்கர பிஸியாக இருந்த பிரபுதேவா, இப்போது தமிழ்ப்படங்கள் நடிப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டிவருகிறார். `பஹீரா', `மை டியர் பூதம்', `ஃப்ளாஷ் பேக்', `பொய்க்கால் குதிரை', `ரேக்ளா', பா.விஜய் இயக்கத்தில் ஒரு படம், `குலேபகாவலி' கல்யாண் இயக்கத்தில் ஒரு படம், சில மல்டிலிங்குவல் படங்கள் என வரிசை நீள்கிறது. இதுபோக, சில படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராபி. அப்போ எப்போ ரெஸ்ட்?!

ஷங்கர் எப்போது ராம் சரண் படத்தை முடிப்பார், `இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் ஆவலும் சினிமா ரசிகர்கள் பலருக்கு உண்டு. ராம் சரண் படத்தின் மூன்றாவது ஷெட்யூலை இயக்கிவருகிறார் ஷங்கர். கார்த்திக் சுப்புராஜ் கதை, ஷங்கர் இயக்கம், திரு ஒளிப்பதிவு, தமன் இசை, அன்பறிவ் ஸ்டன்ட், ஜானி நடனம் என பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை 2023 ஜனவரிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு 10 கோடி, ஒரு ஸ்டன்ட் சீக்வெக்ஸுக்கு 8 கோடி என மிக பிரமாண்டமாக உருவாகிவருகிறது படம். தில் ராஜூ தயாரிக்கும் 50வது படம் என்பதால் அதன் வெளியீடும் கோலாகலமாக இருக்கும் என்கிறார்கள். திருவிழா ரெடி!

`வலிமை' தெலுங்கு டீசரை மகேஷ்பாபு வெளியிட்டிருக்கிறார். தெலுங்கில் யாரை வைத்து டீசரை வெளியிடலாம் எனத் தயாரிப்புத் தரப்பில் பேச்சு எழுந்தபோது படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயாவே, `மகேஷ்பாபுவை வைத்து வெளியிட்டுவிடலாம். நானே அவரிடம் சொல்லிவிடுகிறேன்' எனச் சொன்னதோடு மட்டுமல்லாமல் மகேஷ்பாபுவிடமும் சொல்லி டீசரை வெளியிட வைத்தார். தமிழில் இன்னொரு படத்தில் கார்த்திகேயாவை வில்லனாக நடிக்கக் கேட்க, `இந்தப் பட ரிலீஸுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம்' எனச் சொல்லிவிட்டாராம். அக்கட தேசத்து அன்பு!

1980-களில் குழந்தைகள் மத்தியில் மிகப் பிரபலமாக விளங்கியது `சக்திமான்' டி.வி தொடர். சுமார் 8 ஆண்டுகள் குழந்தைகளின் ஹீரோவாகத் திகழ்ந்தார் சக்திமான். 450 எபிசோடுகள் ஓடிய சக்திமானுக்கு நிகராக ஸ்பைடர்மேன் போன்ற படங்கள் வந்தாலும், சக்திமான் இன்னும் குழந்தைகள் மனதில் நிலைத்து நிற்கிறார். சின்னத்திரையில் மட்டுமே கண்டுகளித்த சக்திமானைத் திரைப்படமாகத் தயாரிக்க சோனி டி.வி நிறுவனம் முடிவு செய்துள்ளது. மூன்று பாகங்களாக வெளிவரவிருக்கும் இதில், இந்தியாவின் முக்கியமான சூப்பர்ஸ்டார் ஒருவர் நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பலரது பெயர்கள் இப்போது அடிபடுகின்றன. நல்லதொரு நாஸ்டாலஜியா!

கோவை நகரில் தடுக்கி விழுந்தால் ஒரு மேம்பாலம் என்கிற வகையில், கிட்டத்தட்ட அனைத்து முக்கியச் சாலைகளிலும் பாலம் கட்டும் பணிகள் நடந்துவருகின்றன. அ.தி.மு.க ஆட்சியில் திறக்கப்பட்ட காந்திபுரம் மேம்பாலத்துக்குப் பச்சை நிறம் அடிக்கப்பட்டது. தேர்தல் நெருக்கத்தில், கட்டப்பட்டு வந்த சில மேம்பாலங்களுக்கும் பச்சை நிறத்தை டச் செய்து சென்றனர். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, திருச்சி சாலை மேம்பாலத்துக்குச் சிவப்பு, நீலம், மஞ்சள் வண்ணங்களைப் பூசியுள்ளனர். தற்போது கவுண்டம்பாளையம் மேம்பாலமும் இதேபோல கலர்ஃபுல்லாக மாறிவருகிறது. கோவைவாசிகள் மத்தியில், “பாலங்களை இப்படியே பராமரிக்க வேண்டும். பாலத்தின் தூண்களை போஸ்டர்களால் ஆக்கிரமித்து அட்ராசிட்டி செய்ய அனுமதிக்கக் கூடாது” என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், தூண்களில் தலைவர்களின் படங்களை ஒட்டுவது, தமிழ் எழுத்துகளை வைப்பது என்று முடிவு செய்திருக்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி!

காவல் துறையில் பெண்களின் எண்ணிக்கையை 33% அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது. இப்போது 10.3% அளவு பெண்களே இந்தியாவில் காவல் பணிகளில் இருக்கின்றனர். `பெண்களுக்கு என்றே புதிதாக காலியிடங்களை உருவாக்கினால்தான் இது சாத்தியமாகும்' என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது நாடாளுமன்ற நிலைக்குழு. மாற்றம் நிகழட்டும்!

இன்பாக்ஸ்

அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி, மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடுவார் மலையாள நடிகர் ஹரீஷ் பேரடி. சமீபத்தில் தனுஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்து, `மலையாளத்தில் வாய்ப்புகள் குறைந்ததால், தமிழில் தேசிய விருதுகள் வாங்கிய இதுபோன்ற கலைஞர்களின் அப்பாவாகவோ அண்ணனாகவோ வில்லனாகவோ நடித்து, கஞ்சி அல்லது பொங்கல் சாப்பிட்டு உயிர்வாழ்கிறேன். எல்லா மலையாளிகளும் ஆசி வழங்கவேண்டும்' எனப் பதிவிட்டுள்ளார். கேரளாவில் அனைத்து தியேட்டர்களையும் திறக்க வேண்டும் எனவும், சினிமாக் கலைஞர்களைக் கேரள அரசு நசுக்குவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு கோபப்பட்டிருந்தார் ஹரீஷ் பேரடி. இப்போது கேரள அரசைச் சீண்ட தனுஷை அவர் பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்கிறார்கள் கேரள ரசிகர்கள். கோவக்கார சேட்டன்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை வனத்துறை அலுவலகத்தில், கடல் ஆமை முட்டை பொரிப்பகம் உள்ளது. அழிந்துவரும் அரிய ஆலிவர் ரெட்லி இன ஆமைகள் கடலோரத்தில் இடும் முட்டைகளைச் சேகரித்து வந்து இந்தப் பொரிப்பகத்தில் பாதுகாத்து, அவை குஞ்சுகளானவுடன் அவற்றைக் கடலில் விடுகின்றனர். இந்தப் பணி கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடேசன் என்ற தற்காலிகப் பணியாளர் ஒரு லட்சம் ஆமை முட்டைகளைச் சேகரித்துள்ளார். அவரின் சேவையைப் பாராட்டி நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் 10,000 ரூபாய் வழங்கி கௌரவித்தார். உயிர்க் கொடை!

நீலகிரிக்குப் பெருமை சேர்க்கும் நீலக்குறிஞ்சி மலர்களுக்கு அடுத்தபடியாக, பழங்குடிகளாலும் ஆய்வாளர்களாலும் பெரிதும் கொண்டாடப்படும் மலர்களில் ஒன்றாக `ரோடோடென்ரோன் நீலகிரிகம்' எனப்படும் மலைப்பூவரசு மலர்கள் விளங்குகின்றன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 அடி உயரத்துக்கு மேல் அமைந்திருக்கும் குளிர்ந்த மலைகளில் அடர்‌ சிவப்பு வண்ணத்தில் பூக்கும் இந்த மலர்கள், உறைபனிக் காலத்தின்‌ பரிசாகவே உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. நேபாளத்தின் தேசிய மலராகவும், நாகாலாந்து மற்றும் ஹிமாச்சலின் மாநில மலராகவும் மணம் வீசி வருகிறது. இமயமலையின் தாய் மலை நீலகிரி என்பதை உறுதிப்படுத்தும் சான்றாக இருக்கும் இந்த ரோடோடென்ரோன் பூக்கள், தற்போது தொட்டபெட்டா, அவலாஞ்சி, முக்கூர்த்தி போன்ற பகுதிகளில் பூத்துள்ளன. சிகரம் சூடிய பூ!

வேலூர் மார்க்கெட் என்றாலே ‘மணிக்கூண்டு’தான் ஃபேமஸ். போர் நினைவுச் சின்னமாக ஆங்கிலேயர் காலத்தில் 1928-ல் திறக்கப்பட்ட இதற்கு `குயின் மேரி’ எனப் பெயர் சூட்டினர். கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே, இந்த மணிக்கூண்டுக்கு நேரம் சரியில்லை. கட்டடம் விரிசலடைந்து, மரம், செடிகளெல்லாம் முளைத்துள்ளன. மணிக்கூண்டின் சுவர்கள் சிதைந்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதைச் சீரமைத்துப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள், வேலூர் வியாபாரிகள். அப்படிச் செய்துகொடுத்தால், தங்கள் பங்குக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை திருக்குறள் ஒலிக்கச் செய்யும் ஒலிபெருக்கியைப் பொருத்தித் தருவதாகவும் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். கூண்டுக்கு ஆயுள் கூடட்டும்!

தன் லட்சியம் 12 வருடங்களுக்குப் பிறகு நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கிறார், நெல்லையைச் சேர்ந்த அரவிந்த் பெருமாள். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பள்ளியில் படிக்கும்போதே ஆசிரியராக வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்லூரிப் படிப்பை முடித்ததும் இரண்டாம் நிலைக் காவலராக நெல்லை சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். ஆனாலும் தொடர்ந்து படித்த அவர், முனைவர் பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார். `அமைப்பு சாரா தொழிலாளர்களின் பொருளாதார நிலை’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட அவர், சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இப்போது அவருக்கு நாகர்கோவிலில் உள்ள எஸ்.டி இந்து கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைத்திருக்கிறது. 12 வருடத்துக்குப் பின்னர், தனது மனதுக்குப் பிடித்த ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார் அவர். முயற்சியின் பலன்!