Published:Updated:

இன்பாக்ஸ்

சிம்ரன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்ரன்

‘கைதி' படம் இந்தியில் ‘போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமிழில் போலீஸ் அதிகாரியாக நரேன் நடித்த வேடத்தில் இந்தியில் நடிகை தபு நடிக்கிறார்.

இன்பாக்ஸ்

இயக்குநர் சிவா - நடிகர் சூர்யா கூட்டணியின் ‘சூர்யா 42'க்கான படப்பிடிப்பு கோவாவைத் தொடர்ந்து சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. சூர்யா - திஷா பதானி தொடர்பான காட்சிகளை எடுத்து வருகின்றனர். படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்கை புத்தாண்டு அன்று வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். ‘‘ஐந்து வருடங்களுக்கு முன்பே கதையை ரெடி செய்துவிட்டேன். ஆனால், ‘கே.ஜி.எஃப்' போல பிரமாண்ட படங்கள் வந்த பிறகுதான் இப்படி ஒரு முயற்சியில் இறங்குவதற்கான உத்வேகம் வந்தது. ஸ்பாட்டில் சூர்யாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது'' என்கிறாராம் இயக்குநர் சிவா. ரோலக்ஸ் ரோரிங்..!

மறுபடியும் தயாராகிவிட்டார் பாரதிராஜா. இப்போதுதான் வெகுநாள்களுக்குப் பிறகு தங்கர்பச்சான் படத்திற்காக ராமேஸ்வரம் போயிருக்கிறார். அதோடு தினம் ஆறு பக்கம் என முடிவு செய்து தனது சுயசரிதையை எழுத ஆரம்பித்திருக்கிறார். அவரது ஆரம்பக்கட்ட வாழ்க்கை, இளையராஜாவின் நட்பு, சென்னைக்கு வந்து சினிமாவுக்கு அலைந்தது, ஜெயித்த பின்னணி, படங்கள், சொந்த வாழ்க்கை என சகலத்தையும் உண்மையாக உள்ளது உள்ளபடி சொல்லப்போகிறாராம். என் இனிய தமிழ் மக்களே!

இன்பாக்ஸ்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி மோசமாகத் தோற்றது. இந்தத் தோல்விக்கு உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியைக் காரணம் சொல்கிறார் வங்கதேச அணிப் பயிற்சியாளர் ரஸ்ஸல் டோமிங்கோ. ‘‘அதிகாலை 3 மணி வரை கண்விழித்து கால்பந்துப் போட்டியைப் பார்த்துவிட்டுக் களைப்பாக மேட்ச் ஆட வந்தால் எப்படி ஜெயிப்பீர்கள்?'' என்று தன் வீரர்களை அவர் கடிந்துள்ளார். இதுவும் மெஸ்ஸி மேஜிக்?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்திருக்கும் காவலூர் வைணு பாப்பு வானாய்வகம் ‘பொன்விழா’ கொண்டாடியிருக்கிறது. இந்திய இயற்பியலாளரும் விண் நாயகனுமான வைணு பாப்பு விண்வெளிப் பொருள்களை உற்றுக் கவனிக்க ஏற்ற இடமாக இந்த மலைப்பகுதியைத் தேர்வுசெய்தார். அவர் நினைவாகவே அவரது பெயர் இதற்குச் சூட்டப்பட்டிருக்கிறது. இங்கு நிறுவப்பட்டிருக்கும் பெரிய தொலைநோக்கி மூலம் பல துணைக் கோள்கள், புதிய வால் நட்சத்திரங்கள், வளிமண்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சர்வதேச வானியல் ஆய்வில் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வளவு பெருமைமிக்க தொலைநோக்கியின் 50-ம் ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. வான்பொருள் தேடும் இந்திய நம்பிக்கை!

இன்பாக்ஸ்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் நாற்பது மாடி அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வந்த சிம்ரன், இப்போது தன் பூர்வீகமான டெல்லிக்குத் திரும்பிவிட்டார். தமிழில் பெரிய நிறுவனங்கள், டாப் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிக்கும் ஐடியாவில் இருக்கும் அவர், அதற்காக மட்டுமே சென்னை வருகிறார். சென்னை சலோ..!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விவசாயத்துக்கு மட்டுமல்ல சினிமாப் படப்பிடிப்புகளுக்கும் பெயர் பெற்ற வளாகம். இதன் பிரமாண்ட உள்கட்டமைப்பை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. கடந்த காலங்களில் அஜித் நடித்த ‘ஜி’, சூர்யாவின் ‘சில்லுனு ஒரு காதல்’ படப்பிடிப்புகள் இந்த வளாகத்தில்தான் எடுக்கப்பட்டன. விஜய் நடிப்பில் வெளியான கோக கோலா விளம்பரமும் இங்கு எடுக்கப்பட்டதுதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அங்கு பெரிய அளவுக்குப் படப்பிடிப்புகள் நடக்காமல் இருந்தன. இந்நிலையில், வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கத் திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் இங்கு படப்பிடிப்புகளை எதிர்பார்க்கலாம். ரோலிங் சார்..!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படையின் லெப்டினென்டாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டேன்லி குட்லேண்ட் என்பவர் இந்தியாவில் பணியாற்றிருக்கிறார். நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் 1914 முதல் 1919 வரை கழித்தி ருக்கிறார். பசுமை சுமந்த இந்த நினைவுகளைக் கடிதங்களாக எழுதிச் சென்றுள்ளார். இவரது கடிதங்கள் ‘Engaged in War' என்ற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன. ஸ்டேன்லி குட்லேண்ட் வாழ்ந்து சிலாகித்து எழுதிய இடங்களை, நேரில் வந்து பார்க்க வேண்டும் என்ற வேட்கை அவர் பேரன் ஆண்ட்ரூ குட்லேண்டிற்கு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாகக் கிளம்பி வந்து, தாத்தா வாழ்ந்த இடங்களைக் கண்டு வியந்திருக்கிறார். தாத்தாவின் நினைவுகள் சுமந்த இடங்களை நூற்றாண்டுகளைக் கடந்து அவரது பேரன் தேடி வந்த நிகழ்வு, வெலிங்டன் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நிஜத்தில் ஒரு மதராசபட்டினம்!

இன்பாக்ஸ்

‘கைதி' படம் இந்தியில் ‘போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமிழில் போலீஸ் அதிகாரியாக நரேன் நடித்த வேடத்தில் இந்தியில் நடிகை தபு நடிக்கிறார். ஏற்கெனவே ‘த்ரிஷ்யம் 2’, ‘குத்தே’ ஆகிய படங்களிலும் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். ‘‘இப்போது போலா படத்திலும் ஹாட்ரிக்காக போலீஸ் வேடத்தில் நடித்துவருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும், மற்ற வேடங்களையும் புறக்கணிப்பதில்லை'' என்கிறார். தபு ஐ.பி.எஸ்!

இன்பாக்ஸ்

தஞ்சாவூரில் செயல்பட்டு வந்த காமராஜர் காய் கனி மார்க்கெட் 60 ஆண்டுகள் பழைமையானது. அதிலிருந்த கடைகள் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன. திருநங்கை சத்யா என்பவர் காமராஜர் மார்க்கெட்டில் தனக்குக் கடை ஒதுக்க வேண்டும் எனக் கூறி மாநகராட்சியால் நடத்தப்பட்ட ஏலத்தில் கலந்துகொண்டார். மேயரிடமும் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி தமிழகத்திலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு காய்கறி மார்க்கெட்டில் கடை ஒதுக்கப்பட்டது. மேயர் சண். ராமநாதன் முதல் சாவியை சத்யாவிடம் வழங்கினார். ‘காய்கறிக் கடையைச் சிறப்பாக நடத்தி திருநங்கைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்வேன்' என சத்யா நெகிழ்ந்திருக்கிறார். பெருமிதம் காட்டுங்க!