சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

சாய் பல்லவி
பிரீமியம் ஸ்டோரி
News
சாய் பல்லவி

மலையாள நடிகர் திலீப்பின் நண்பராக இருந்த இயக்குநர் பாலசந்திரகுமார், இப்போது அவருக்கு வில்லனாக மாறியிருக்கிறார்.

அரசு விழாவுக்காக டிசம்பர் 30-ம் தேதி தஞ்சாவூர் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திடீர் விசிட்டாக சரஸ்வதி மகால் நூலகம் சென்றார். இங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழைமையான ஓலைச்சுவடிகள் மற்றும் புத்தகங்களை வியப்புடன் பார்த்து இவை எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என ஆர்வத்துடன் கேட்டறிந்தார். ‘`எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, இங்கே வந்து நீண்டநேரம் இருந்து புத்தகங்களைப் படித்தார். 2010-ம் ஆண்டு கருணாநிதி ஆர்வத்துடன் இங்கு வந்தபோதிலும், வீல் சேர் நூலகத்தின் உள்ளே வரமுடியாததால், வாசலிலேயே சிறிது நேரம் இருந்துவிட்டு ஏக்கத்துடன் கிளம்பிச் சென்றார். தற்போது ஸ்டாலின் இங்கு வந்து சென்றுள்ளார். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் வந்து செல்வது இந்த நூலகத்தின் எதிர்கால வளர்ச்சிக்குக் கைகொடுக்கும்’’ என்கிறார்கள் நூலக ஊழியர்கள். புத்தகப் பிரியர்கள்!

இன்பாக்ஸ்

80-களுக்கு முன் ராமேஸ்வரம் பகுதியில் பெரிய தாதாவாக, கடத்தல்காரராக வலம் வந்தவர் கோட்டை முனி. அந்தப் பகுதியில் அக்காலத்தில் காட்பாதர்போலத் திகழ்ந்த கோட்டை முனியின் வாழ்க்கை இப்போது திரைப்படமாகிறது. அதில் ஹீரோவாக நடிக்க உள்ளார் ஆர்.கே.சுரேஷ். ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட ஆர்.கே.சுரேஷின் தந்தை களஞ்சியத்துக்குத் தெரிந்த நபராம் கோட்டை முனி. அதனால் அப்படத்தைத் தயாரித்து தன் தந்தையின் நட்புக்கு மரியாதை செய்கிறார். அடுத்த டான் கதை ரெடி!

கடலுக்குப் போனால் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையிலும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், கடந்த ஆண்டு தமிழகத்திலேயே அதிகமாக மீன் பிடித்தவர்கள் என்ற பாராட்டைப் பெற்று நாட்டுக்கு அதிக அந்நியச் செலவாணி ஈட்டித் தந்துள்ளனர். கடந்த ஆண்டில் தமிழக மீனவர்கள் 10 லட்சம் டன் மீன் பிடித்து நாட்டில் முதலிடம் பிடித்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 2.64 லட்சம் டன் மீன்கள் பிடித்து மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். ‘`இலங்கை எல்லைப் பிரச்னை மட்டும் இல்லையென்றால், இன்னும் பெரிய சாதனையைச் செய்திருப்போம்’’ என்கிறார்கள் ராமநாதபுரம் மீனவர்கள். உழைப்பின் பலன்!

மலையாள நடிகர் திலீப்பின் நண்பராக இருந்த இயக்குநர் பாலசந்திரகுமார், இப்போது அவருக்கு வில்லனாக மாறியிருக்கிறார். பிரபல நடிகையை காரில் கடத்திப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திலீப் சிறையில் இருந்த சமயத்தில், பாலசந்திரகுமாரைச் சிறைக்கு அழைத்துச் சந்தித்துள்ளார். அப்போது ‘நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய பல்சர் சுனிக்கும் தனக்கும் உள்ள நட்பை வெளியில் சொல்லிவிடக்கூடாது’ என சத்தியம் வாங்காத குறையாகக் கூறி அனுப்பியுள்ளார் திலீப். இப்போது நட்பில் விரிசல் விழுந்துவிட்டதால், பழைய விஷயங்களைக் கிளறி திலீப்புக்குக் குடைச்சல் கொடுக்கிறார் பாலசந்திரகுமார். கூடா நட்பு இப்படிக் கேடாகிவிட்டதே என நெருங்கிய வட்டாரங்களிடம் புலம்புகிறாராம் திலீப். முற்பகல் செய்யின்...

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் உயரதிகாரியாகப் பொறுப்பு வகித்து வருபவர் ஆன்டனி கிராஸ்ஸி. பறவை ஆர்வலரான இவர், மரக்கிளை ஒன்றில் அமர்ந்து அழகிய ஓவியம் போல போஸ் கொடுத்த நீலகிரி வுட் பிஜின் என்றழைக்கப்படும் அரிய வகை காட்டுப்புறாவைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதைத் தனது வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்தப் புகைப்படம் இந்திய தபால்துறையின் கண்ணில் பட, அதை மெருகேற்றி 5 ரூபாய் தபால் தலையில் இடம் பிடிக்கவைத்து, 5 லட்சம் தபால் தலைகளை அச்சிட்டிருக்கிறார்கள். இந்த விஷயம் ஆன்டனி கிராஸ்ஸிக்கு சமீபத்தில்தான் தெரிந்தது. தன் அனுமதி பெறாமல் புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொண்டதால் ஆரம்பத்தில் கோபப்பட்டாலும், 5 லட்சம் தபால் தலைகள் வெளியாகியிருப்பதால் பூரிப்பில் இருக்கிறார் அவர். பேசும் படம்!

இன்பாக்ஸ்

நீள்கோள வடிவமுடைய கோழி முட்டையைப் பார்த்திருப்போம். டிசம்பர் 29-ம் தேதி ஆம்பூர் அடுத்த கைலாசகிரியில் பெட்டிக்கடை நடத்திவரும் அதியமான், மாதனூர் அடுத்த வடகாத்திப்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சீனிவாசன் ஆகியோரது வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் இட்ட கோலிக்குண்டு அளவிலான சிறிய முட்டைகள் மக்களிடம் வியப்பை ஏற்படுத்தின. முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளியே வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வினோதம்!

இன்பாக்ஸ்

விராட் கோலியைத் திருமணம் செய்துகொண்டபின் அனுஷ்கா சர்மா கடந்த மூன்று ஆண்டுகளாக நடிக்கவில்லை. கணவருடனும் குழந்தையுடனும் அதிக நேரத்தைச் செலவிட்டுவந்த அனுஷ்கா சர்மா, புத்தாண்டில் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களிலும், ஒரு வெப் சீரியலிலும் நடிக்கவிருக்கிறார். அனுஷ்கா சர்மா நடித்த ‘சுல்தான்’ உட்பட சில படங்கள் 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் கொடுத்துள்ளன. இதனால் அனுஷ்காவின் ரீ என்ட்ரி பாலிவுட்டில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வருக வருக!

இன்பாக்ஸ்

சாய் பல்லவிக்கு அடுத்த ஆண்டு அமோகமாக இருக்கப் போகிறது. தமிழில் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறார். இதற்கிடையே தெலுங்கில் ராணாவுடன் நடித்து வரும் ‘விராட பர்வம்’ படத்தின் டப்பிங்கை முடித்துக் கொடுத்திருக்கிறார். தவிர, நெட்ப்ளிக்ஸிற்காக வெப்சீரிஸ் ஒன்றிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். திறமைக்குத் தேடிவரும் வாய்ப்பு!