Published:Updated:

இன்பாக்ஸ்

அமலா பால்
பிரீமியம் ஸ்டோரி
அமலா பால்

ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடுகிற அளவில் மென்மையாக பட்டுப்புடவை நெய்திருக்கிறார், நல்லா விஜய்

இன்பாக்ஸ்

ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடுகிற அளவில் மென்மையாக பட்டுப்புடவை நெய்திருக்கிறார், நல்லா விஜய்

Published:Updated:
அமலா பால்
பிரீமியம் ஸ்டோரி
அமலா பால்

இந்தியில் தனது முதல் வெப் சீரிஸ் வெளியான மகிழ்ச்சியை, இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை போஸ்ட் செய்து கொண்டாடினார் அமலா பால். அதில் ஒரு பிகினி புகைப்படத்தைப் பார்த்துவிட்டு பலரும் அமலாவை ட்ரோல் செய்தனர். ‘எனக்கு விருப்பமான ஒரு வாழ்க்கையை நான் வாழ்கிறேன். சோஷியல் மீடியாவில் பெண்களைக் குறிவைப்பதை நிறுத்துங்கள். ஒரு பெண் தான் விரும்பிய உடையைத் தன் சொந்தத் தேர்வின் அடிப்படையிலேயே அணிகிறாள். நான் எப்படி அணிய வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையை யாருக்கும் வழங்கவில்லை’ என்று காட்டமாக பதில் சொல்லியிருக்கிறார் அமலா. ஆடை அறச்சீற்றம்!

இன்பாக்ஸ்

ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடுகிற அளவில் மென்மையாக பட்டுப்புடவை நெய்திருக்கிறார், நல்லா விஜய். தெலங்கானா மாநிலம் சிர்சில்லா நகரத்தைச் சேர்ந்த இந்த நெசவாளி, தூய பட்டில் உருவாக்கிய இந்த நீலநிறப் புடவை, கடந்த வாரம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங். தெலங்கானா முதல்வரின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமாராவ் இதை உலகெங்கும் கொண்டு செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார். இனி சேலை வைக்க தீப்பெட்டி வாங்குவாங்க!

இன்பாக்ஸ்

பொதுவாக 120 நாள்கள் வரைதான் அதிகபட்சமாக ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுப்பார் விஜய். ‘பீஸ்ட்’க்கும் அப்படித்தான். ஆனால், அடுத்து நடிக்கும் வம்சியின் படத்திற்குக் கூடுதல் நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். தமிழைப் போலவே தெலுங்கிலும் படம் பர்ஃபெக்‌ஷனாக வரவேண்டும் என்பதால் இந்த இன்வால்வ்மென்ட் என்கிறது கோடம்பாக்கம். பேன் இண்டியா தளபதி பிலிம்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

‘புஷ்பா’ கொடுத்த வெற்றிக்குப் பிறகு செம குஷியில் உள்ளாராம் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன். தனது உடைகளில் அதிக கவனம் செலுத்தும் அல்லு அர்ஜுன் அடுத்ததாக தனது பெயரிலேயே (‘AA’) ஆடை வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கவிருக்கிறார். இதற்கான டிசைனிங் வேலைகளைத் தொடங்கிவிட்டது இவரது டீம். கொரோனாவின் அலை சற்று ஓய்ந்ததும் இதை ஆரம்பிக்கிறார்கள். ‘இனி எல்லாம் ஸ்டைலிஷ் மயமே!’

‘டாக்டர்’ படத்தால் கவனம் பெற்ற ரெடின் கிங்ஸ்லி, இப்போது ‘பீஸ்ட்’ தவிர சிம்பு, வடிவேலு, சந்தானம் படங்களும் கைவசம் வைத்திருக்கிறார். முன்பு தன் கால்ஷீட் விஷயங்களை கவனிக்க மேனேஜர் வைத்திருந்தவர், இப்போது தானே கவனித்துக்கொள்கிறார். சம்பள விஷயங்களையும் அவரே பேசுகிறார். ‘‘வளர்ந்து வரும் நேரத்துல கெட்ட பெயர் வந்துடாம பார்த்துக்க’’ என இயக்குநர் நெல்சன் அட்வைஸ் செய்திருப்பதே காரணம். ரெடியாகிட்டார் ரெடின்!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கரூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த மே மாதம் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கி, அவரது குடும்பத்தை சக காவலர்கள் நெகிழ வைத்துள்ளனர். மணிகண்டன் கடந்த 2013-ம் ஆண்டு காவலராகத் தேர்வுபெற்றுப் பணியில் சேர்ந்தவர். அதே ஆண்டில் 13,000 காவலர்கள் ஒரே சமயத்தில் தேர்வு பெற்றனர். இவர்கள் மாவட்டம்தோறும், ‘2013 பேட்ச் காவலர்கள்’ என வாட்ஸ்அப் குரூப் வைத்துள்ளனர். தங்கள் பேட்ச்சைச் சேர்ந்த காவலர்கள் உயிரிழக்க நேர்ந்தால், சக காவலர்களிடம் நிதி திரட்டி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கிவருகின்றனர். அந்த வகையிலேயே, மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில், மணிகண்டனின் பெற்றோர், மனைவி அனுஷியா ஆகியோரிடம் தலா ரூ. 50,000 ரொக்கம் வழங்கப்பட்டது. மீதம் ரூ.15 லட்சத்தை இரு குழந்தைகள் பேரில் தலா ரூ. 7.5 லட்சம் வீதம் முதலீடு செய்து அதற்கான காப்பீட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. இணைந்த கைகள்!

மாஸ்க் அணியாதவர்களுக்கான அபராதம் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்ந்துவிட்டது. என்றாலும், கொஞ்சம் கேப் கிடைத்தாலே மாஸ்க்கைக் கழற்றிவிட்டு நிம்மதியாக மூச்சு விடுவோர் அதிகம். இவர்களுக்கு மத்தியில், மாஸ்க்கைக் கழற்ற அஞ்சும் மக்களும் இருக்கிறார்கள். ஊட்டியில் உறைபனி சீசன் ஆரம்பித்து மலையையே உறைய வைத்துக் கொண்டிருக்கிறது. அவலாஞ்சி, அப்பர் பவானி, கேரக்குந்தா ஏரியாக்களில் டெம்ப்ரேச்சர் அவ்வப்போது பூஜ்ஜியத்தைத் தொடுகிறது. காலை, மாலை நேரங்களில் குளிர் மேலும் வாட்டி வதைக்கிறது. இந்தப் பகுதிகளில் மக்கள் டபுள் மாஸ்க் அணிகின்றனர். “கொரோனாவைவிட குளிருக்கு பயந்தே மாஸ்க் போட வேண்டியதா இருக்கு’’ என உறைபனிக்குக் கேடயமாக மாஸ்க்குகளைப் பயன்படுத்திவருகின்றனர்.

கொரோனா நாள்களில் நிவாரணப் பணிகள் செய்து இந்தியா முழுக்க ஹீரோ ஆனார், வில்லன் நடிகர் சோனு சூட். அவர் பா.ஜ.க-வில் இணையப் போவதாக முதலில் செய்திகள் வந்தன. கடந்த ஆண்டு அவர் வருமான வரித்துறை சோதனைக்கு ஆளானபோது, அவருக்கும் பா.ஜ.க-வுக்கும் மோதல் வந்ததாகப் பேசப்பட்டது. இந்நிலையில் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறார். பஞ்சாப் தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார். ‘‘மாளவிகா அரசியலுக்கு வந்ததில் நான் பெருமைப்படுகிறேன். ஆனால் அவருக்காக நான் பிரசாரம் செய்ய மாட்டேன். எந்த அரசியல் சார்பும் இல்லாமல் ஒதுங்கியிருக்கவே நான் விரும்புகிறேன். அவராக உழைத்து வெற்றியை ருசிக்கட்டும்’’ என்கிறார் சோனு. நீங்க இவ்வளவு நாள் பண்ணுனது அரசியல் இல்லையா?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

கோவை ஒரு காலத்தில் மனிதர்கள் வாழ முடியாத காடாக இருந்தது. தற்போது வனவிலங்குகள் வாழத் தகுதியில்லாத ஊராக மாறிக்கொண்டிருக்கிறது. காடுகள் அழிக்கப்பட்டு உணவுக்காக ஊருக்குள் வரும் யானைகள் முகாம்களில் அடைக்கப்பட்டும் அல்லது ரயில்கள் மோதி உயிரிழந்தும் வருகின்றன. மற்ற யானைகள் பிளாஸ்டிக் குப்பைகளை சாப்பிடும் அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. சமீபத்தில் மருதமலை அருகே யானை சாணத்திலிருந்து 300 கிராம் பிளாஸ்டிக் குப்பைகள் கண்டறியப்பட்டன. இந்த விவகாரம் வெடித்த பிறகு மருதமலை வட்டாரத்தில் சுமார் 200 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்திருக்கிறது வனத்துறை. கைப்பற்றியதே 200 கிலோ என்றால், யானைகள் வயிற்றில் எவ்வளவு சென்றிருக்கும்? காட்டுயிரை நேசிப்பது முக்கியம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் கோட்டை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இப்போது இந்தக் கோட்டைக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவேகானந்தர் தெரு முடியும் இடத்தில் கோட்டையின் கன்னிமூலைப் பகுதி உள்ளது. இது முன்பு கோட்டை கொத்தளமாக இருந்ததாம். இங்கு மூலிகையால் பெண் தேவதையின் ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இதற்கு முன்பு குடியிருந்த பலருக்கும் துர்மரணம் ஏற்பட்டுள்ளதாம். அதனால் இப்போதும் இந்தப் பகுதிக்குப் போகவே மக்கள் அச்சப்படுகிறார்கள். அடுத்த பேய்ப்படத்துக்குக் கதை ரெடி!

இன்பாக்ஸ்

விழுப்புரம் எஸ்.பி.எஸ் சோழன் தெருவைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது வீட்டிற்கு கடந்த 2020 முழு ஊரடங்கு நேரத்தில் பூனைக்குட்டி ஒன்று வந்துள்ளது. வாசல் அருகே பசியில் கத்திக்கொண்டிருந்த அதற்கு உணவு வைத்துள்ளனர். பின்னர் அது அவர் குடும்பத்தாருடன் பழகத் தொடங்கியுள்ளது. அதற்கு ‘புசி’ எனப் பெயர் வைத்து அன்பாக கவனித்து வந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இந்தப் பூனை சேட்டை செய்வதாகப் புகார் செய்யவே, சமீபத்தில் பூனையை அழைத்துச் சென்று 15 கி.மீ தூரத்தில் தளவானூர் என்ற ஊரில் விட்டுவிட்டு வந்துள்ளார் கென்னடி. ஆனால், பூனையின் பிரிவைத் தாங்க முடியாமல் திரும்பவும் சென்று தேடிப் பார்த்துள்ளார். பூனை அங்கு இல்லை. ஆறு நாள்கள் கழித்து அந்தப் பூனை கென்னடி வீட்டின் கதவைத் தட்டி உள்ளே வந்து அவர் மடியில் ஏறி அமர்ந்து அழுததாம். பூனையைக் கண்டதும் மகிழ்ச்சியில் உறைந்துபோயுள்ளனர் கென்னடி குடும்பத்தினர். ‘‘பிள்ளை போல வளர்த்த பூனையை விட்டுட்டு வந்துவிட்டோமே என மன வருத்தத்தில் இருந்தேன். ‘என்னை ஏன் அப்படி விட்டுட்டு வந்த’ என்பது போல என் மடியில் அமர்ந்து புசி அழுதது மனசுக்குக் கஷ்டமாகிடுச்சு’’ என்கிறார் கென்னடி. பாசப் பூனையின் ஹோம் கம்மிங்!

இன்பாக்ஸ்

பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாய்க் காட்சியளித்தது, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி ஜோடியின் காதல் திருமண விழா. ஆற்காட்டைச் சேர்ந்த சதீஷ்குமாரும், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த பழனியம்மாளும்தான் மணமக்கள். இடுப்புக்குக் கீழே செயலிழந்த சதீஷ்குமாரால் நடக்க முடியாது. பழனியம்மாள் உயரம் மிகக் குறைவானவர். கால்களிலும் பாதிப்பு இருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மூலம் நட்பு ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்குப் பெற்றோர் பச்சைக் கொடி காட்டியதால், துன்பத்துக்கே துன்பம் தந்து இன்பமாய் வாழத் தொடங்கியிருக்கிறார்கள். கற்களாய் சொற்களைப் பலர் எறிந்தபோதும், மனவுறுதியை ஊன்றுகோலாக்கி எழுந்து நிற்கிறார்கள். வாழ்த்துவோம் அவர்களை!

இன்பாக்ஸ்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் வசிக்கும் ஆதரவற்ற மீனாட்சியம்மாளுக்கு வயது 75. பேருந்து நிலையத்தில் ஏதேனும் பிரச்னை என்றால், உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்து பிரச்னை தீர்வதற்கு உதவிவருகிறார். போலீஸாரும் அப்பகுதியில் எது நடந்தாலும் மீனாட்சியம்மாளிடம் கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்கின்றனர். எந்நேரமும் அவர் அங்கேயே இருப்பதால் போலீஸாருக்கும் உதவியாக இருக்கிறது. பேருந்து நிலையத்துக்குக் காவலாக இருக்கும் அவரை ‘போலீஸ் பாட்டி’ என்றே அழைக்கின்றனர். பாட்டி சொல்லைத் தட்டாதீங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism