Published:Updated:

இன்பாக்ஸ்

திவ்யபாரதி -
பிரீமியம் ஸ்டோரி
திவ்யபாரதி -

சமந்தாவை முக்கியமான தமிழ் இயக்குநர்கள் பலர் ஸ்கிரிப்டோடு போய் சந்திக்கிறார்கள். கதையெல்லாம் கேட்டுவிட்டு `ஸாரி' சொல்லிவிடுகிறாராம் சம்மு.

இன்பாக்ஸ்

சமந்தாவை முக்கியமான தமிழ் இயக்குநர்கள் பலர் ஸ்கிரிப்டோடு போய் சந்திக்கிறார்கள். கதையெல்லாம் கேட்டுவிட்டு `ஸாரி' சொல்லிவிடுகிறாராம் சம்மு.

Published:Updated:
திவ்யபாரதி -
பிரீமியம் ஸ்டோரி
திவ்யபாரதி -
இன்பாக்ஸ்

`பேச்சுலர்' படம் மூலம் இளைஞர்களின் க்‌ரஷ்ஷாக மாறியவர் திவ்யபாரதி. இந்தப் படம் வெளியாகும் முன்பே அடுத்தடுத்த படங்களில் நடித்து தனது லைன் அப்பை ரெடி செய்துகொண்டார். அதில் ஒன்று முகென் ராவுடன் `மதில் மேல் காதல்.' ஒரு மாடர்ன் லவ் கதை. மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான `இஷ்க்' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் திவ்யபாரதிதான் நாயகி. தவிர, சேரன் இயக்கத்தில் `ஜர்னி' என்ற வெப் சீரிஸிலும் நடித்துவருகிறார். இன்ஸ்டாவில் இவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை எகிறிக்கொண்டே இருக்கிறது. வாழ்த்துகள்!

கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி

`உப்பென்னா', `ஷியாம் சிங்க ராய்' என கீர்த்தி ஷெட்டி நடித்த படங்கள் ஹிட் ஆகின்றன. லிங்குசாமி இயக்கத்தில் `வாரியர்' என்ற பைலிங்குவல் படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகியிருந்தாலும், நேரடித் தமிழ்ப்படம் என்னவோ பாலா - சூர்யா படம்தான். பாலா, லிங்குசாமி என அடுத்தடுத்து தமிழ் இயக்குநர்கள் படத்தில் நடிப்பதால் தமிழ் கற்றுக்கொண்டு சரளமாகப் பேசுகிறார். அடுத்ததாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் நடிக்கவிருக்கிறார். வரலாற்றுப் படமொன்றில் இளவரசியாகவோ போர் புரியும் வீராங்கனையாகவோ நடிக்க வேண்டும் என்பது அவரின் பெருங்கனவாம். அப்படியொரு கதை இருந்தால் தாராளமாக கீர்த்தியை அணுகலாம்! வாள் வீசும் சுந்தரி!

பாலா இயக்கும் படத்தை முடித்துவிட்டு, `சிறுத்தை' சிவா படத்திற்குச் செல்கிறார் சூர்யா. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பதாக இருந்த இப்படத்தைத் தெலுங்குத் தயாரிப்பாளரான UV க்ரியேஷன்ஸ் தயாரிக்கவிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது பூஜா ஹெக்டேவாம். `பீஸ்ட்'டிற்குப் பிறகு, அவர் நடிக்கும் தமிழ்ப் படம் இது. `கே.ஜி.எஃப்' மூலம் இந்தியாவையே தன் இசையால் திரும்பிப்பார்க்க வைத்த ரவி பஸ்ருரிடம் பேசிவருகிறார்கள். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். குட் காம்பினேஷன்!

இன்பாக்ஸ்

சமந்தாவை முக்கியமான தமிழ் இயக்குநர்கள் பலர் ஸ்கிரிப்டோடு போய் சந்திக்கிறார்கள். கதையெல்லாம் கேட்டுவிட்டு `ஸாரி' சொல்லிவிடுகிறாராம் சம்மு. விஜய் கால்ஷீட்டோடு வந்தால் தானும் நடிக்க ரெடி என்று சொல்லிவிட்டாராம். தெலுங்கில் தன்னை அறிமுகப்படுத்திய கெளதம்மேனனுக்கு மட்டும் நன்றியறிதலுக்காக இப்போதே கால்ஷிட் கொடுத்துவிட்டார். இதுதவிர இந்தியில் ஐந்து படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதில் நடிகை டாப்ஸியின் சொந்தத் தயாரிப்பும் ஒன்று. சமந்தா காட்டில் பெருமழை!

இன்பாக்ஸ்

25 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 5,500 ரூபாயுடன் மும்பை வந்த நடிகர் சோனுசூட், எங்கெங்கோ தங்கி சினிமா வாய்ப்புகளைத் தேடினார். மிகவும் போராடி தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். தன்னைப் போன்று தினமும் மும்பைக்குப் படவாய்ப்புகளைத் தேடி வரும் பலருக்கும் உதவுவதற்காக சோனுசூட் தனி மையம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறார். பட வாய்ப்புகள் தேடி வரும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்குத் தேவையான பயிற்சியும் இந்த மையத்தில் கொடுக்கப்படுமாம். ரியல் ஹீரோ!

இன்பாக்ஸ்

அமீர் கானின் மகள் சாரா அலி கானும் கார்த்திக் ஆர்யனும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க, இருவரும் காதலிப்பதாகச் செய்திகள் பரவின. அதை இருவரும் மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை. கரண் ஜோகர் தற்போது இருவரின் காதலை உறுதிப்படுத்தியிருக்கிறார். காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாரா அலிகான், கார்த்திக் ஆர்யன்மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறாராம். சில்லுனு ஒரு காதல்!

தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் வேல்முருகன், கஜா புயலில் சேதமடைந்த மண் குடிசையில் தன் தாய் மற்றும் பாட்டியுடன் வசித்துவந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு வாட்ஸ் அப்பில் தனது நிலையைச் சொல்லி கான்க்ரீட் வீடு கட்டித்தர முடியுமா என உதவி கேட்டுள்ளார் வேல்முருகன். அரசுச் செலவு மற்றும் தனியார் அறக்கட்டளை உதவியுடன் அழகிய பசுமை வீடு ஒன்றைக் கட்டிக்கொடுத்து, குத்துவிளக்கு ஏற்றி வீட்டைத் திறந்து வைத்துள்ளார் ஆட்சியர். வேல்முருகன் குடும்பம் மட்டுமல்ல, அந்த ஊரே நெகிழ்ந்திருக்கிறது. மாற்றங்கள் நிகழ்த்துமே மனிதம்!

இன்பாக்ஸ்

நீலகிரி தோடர் பழங்குடிகள், Toda Buffalo எனப்படும் உலகின் தனித்துவம் வாய்ந்த வளர்ப்பு எருமைகளை வளர்த்துவருகின்றனர். இந்த மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த எருமைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. செமி வைல்டு அல்லது செமி டொமஸ்டிக் என அழைக்கப்படும் இந்த எருமைகளைக் கட்டி வைத்துப் பராமரிப்பது கிடையாது. வனாந்தரத்தில் மேய்ந்து, அவை விரும்பும்போது மந்துகளுக்குத் திரும்பும் (தோடர்கள் வாழும் கிராமத்தை மந்து என்றே அழைக்கிறார்கள்!). அப்படி மேய்ச்சலுக்குச் சென்ற தோடர் எருமை மந்தைகள் சில மந்துகளுக்குத் திரும்பி வருடக்கணக்காகிவிட்டதாம். அடர் வனத்தில் இவை வனவிலங்குபோல வாழப் பழகியதைக் கண்டு வனத்துறைக் களப்பணியாளர்கள் அதிசயித்திருக்கிறார்கள். காட்டில் திரிந்த சில வன விலங்குகளைப் பழக்கி வளர்ப்புப் பிராணிகளாக்கிய வரலாற்றை அறிந்து வளர்ந்த நமக்கு, வளர்ப்புப் பிராணிகள் மீண்டும் வன விலங்குகளாக மாறிய வரலாறு கிடைத்திருக்கிறது. இயற்கை வாழ்வு!

இன்பாக்ஸ்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளியின் மகனான மாற்றுத்திறனாளி இளைஞர் வெங்கடாசலம், தேசிய அளவிலும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று தங்கம், வெண்கலம் வென்று தொடர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டதால், இடுப்புக்குக் கீழ் உணர்வில்லாமல் போய்விட்டது. முடங்கிப்போகாமல் கடும் பயிற்சி எடுத்து, வீல் சேரில் அமர்ந்தபடியே தடகளப் போட்டிகளில் தடம் பதித்துக்கொண்டிருக்கிறார். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் வெற்றி கண்டிருக்கிறார். சமீபத்தில் கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வீல்சேர் கூடைப்பந்துப் போட்டியிலும் தங்கம் வென்று, தமிழகத்தைத் தலைநிமிரச் செய்திருக்கிறார் வெங்கடாசலம். தங்கமகன்!

இன்பாக்ஸ்

‘நான்தான் திருச்சி கலெக்டர். கொஞ்சம் அர்ஜென்ட்டா பணம் தேவைப்படுது, கிடைக்குமா?’ என கடந்த மாதம் திருச்சி கலெக்டர் சிவராசுவினுடைய போட்டோ மற்றும் பெயரைப் பயன்படுத்தி, மோசடி ஆசாமிகள் வசூல் வேட்டையில் இறங்கியது பரபரப்பை உண்டாக்கியது. சமீபத்தில் திருச்சி கலெக்டராகப் பொறுப்பேற்ற பிரதீப்குமார் போட்டோவை வாட்ஸப் டிபியாக வைத்துக்கொண்டு, ஒரு கும்பல் இதேபோல வசூல் வேட்டையில் இறங்கியிருப்பது, கலெக்டர் அலுவலகத்தையே கலவரப்படுத்தியிருக்கிறது. மோசடி கும்பல் அனுப்பிய மெசேஜை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்த கலெக்டர் பிரதீப்குமார், ‘பொதுமக்களே அலர்ட் ஆக இருங்க’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். பயமில்லாம பண்றாய்ங்களே..!

இன்பாக்ஸ்

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலை சிறந்த மலை வாசஸ்தலமாக விளங்குகிறது. ஆனால், இங்கு வரும் பலர் இயற்கையைச் சிதைக்கும்விதமாக, மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை ஆங்கங்கே வீசிச் செல்வது தொடர்கதையானது. இதைத் தடுக்க நினைத்த நாமக்கல் மாவட்ட நிர்வாகம், `இங்குள்ள 3 டாஸ்மாக் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் பத்து ரூபாய் அதிகம் விலை வைத்து விற்கப்படும். காலி மதுபாட்டிலைக் கொடுத்து, அந்தத் தொகையை டாஸ்மாக்குகளில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்' என்று அறிவித்தது. இந்த உத்தரவு அமலுக்கு வந்த ஒரு மாத காலத்தில், 35,926 காலி மதுப்பாட்டில்களைத் திரும்பக் கொடுத்து பணத்தைப் பெற்றுச் சென்றிருக்கிறார்களாம் குடிமகன்கள். என்னா கடமையுணர்ச்சி!