Published:Updated:

இன்பாக்ஸ்

நிதி அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
News
நிதி அகர்வால்

பல்வேறு மருத்துவப் பயன்களை மனிதர்களுக்கு வாரி வழங்குவதாக நம்பப்படும் துரியன் பழங்களுக்கு கிராக்கி அதிகம்.

பப்ஜி மதனின் கைதுக்குப் பிறகு ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் குழந்தைகள் பற்றிய விவாதங்கள் மீண்டும் உயிர்பெற்றுள்ளன. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்தப் பிரச்னை இன்னும் அதிகம். குழந்தைகளின் மொபைல்களில் பெற்றோர்களே நேரக்கட்டுப்பாட்டைக் கொண்டுவர அறிவுறுத்தியது ஜப்பான் அரசாங்கம். அதை எதிர்த்து 17 வயதுச் சிறுவன் ஒருவன் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சீனாவில் 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மொபைலில் விளையாடக்கூடாது என்கிற சட்டம் இரண்டு ஆண்டுகளாகவே இருக்கிறது. அதையெல்லாம் மீறியும் அவர்கள் விளையாடுகிறார்கள். அதனால் விளையாட்டு நிறுவனங்களின் மூலம் ஃபேஷியல் ரெகக்னிஷன் சாப்ட்வேர் வைத்துக் குழந்தைகளைக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளனர். Midnight patrol என அறிவிக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தில், ‘குழந்தைகளே, விளையாடியது போதும், போய்த் தூங்குங்கள்’ என விளையாட்டிலேயே அறிவிப்பு வருகிறது. விளையாடுங்க, அளவா விளையாடுங்க!

கோலி, பாலி, டோலி என அனைத்து வுட்களிலும் தற்போது பூஜா ஹெக்டே ட்ரெண்டிங் ஹீரோயின். விஜய், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ், சல்மான் கான் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் பூஜா, தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குவோர் லிஸ்ட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். தெலுங்கில் நிதினுடன் நடிக்கும் புதுப் படத்தில் அம்மணி கேட்ட 3.5 கோடி சம்பளத்துக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளதாம் தயாரிப்புத் தரப்பு. அடேங்கப்பா!

‘Bookmyshow’ தளத்தில் ஒரு படம் வெளியாவதற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் அந்தந்தப் படங்களை லைக் செய்து வைத்திருப்பது வழக்கம். அந்த வகையில் ‘வலிமை’ படத்திற்கான பக்கத்தில் இப்போதே சுமார் 1.71 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். முன்னதாக ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்திற்கு 1.7 மில்லியன் பேர் லைக் செய்திருந்தனர். அந்த ரெக்கார்டை தற்போது ‘வலிமை’ முறியடித்திருக்கிறது. அப்டேட்டைக் கண்டா வரச் சொல்லுங்க!

இன்பாக்ஸ்

இன்ஸ்டாவில் திடீர் திடீரென செம ஆக்ட்டிவாக புதிய போட்டோக்களைத் தெறிக்க விடுகிறார் நிதி அகர்வால். தமிழில் இப்போது மகிழ்திருமேனியின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறார். தெலுங்கில் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’விலும் பளபளக்கிறார். ‘`இன்ஸ்டாவை நானேதான் ஹேண்டில் பண்றேன். ஏன்னா, ரசிகர்களோட நேரடியா பேசப் பிடிக்கும்’’ எனச் சொல்லும் நிதி, ஆட்டோகிராபில் ‘லாட்ஸ் ஆஃப் லவ்’ என்று எழுதிவிட்டே கையெழுத்திடுகிறார். நாங்களும் லவ்வுங்கோ!

பிரபாஸின் ‘சலார்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக லாக்டௌனுக்கு முன்னரே மும்பை பறந்த ஸ்ருதிஹாசன், இன்னும் அங்கே உள்ள தன் வீட்டில்தான் தங்கியிருக்கிறார். ஸ்ருதியிடம், ‘`உங்க மொபைல்ல ஸ்க்ரீன் சேவரா என்ன படம் வச்சிருக்கீங்க?” எனக் கேட்டால், உடனே வருகிறது பதில். ‘முருகன். ஏன்னா என் இஷ்ட தெய்வம் அவர்” என்கிறார் கூலாக. பக்தி... பயபக்தி!

நாகை மாவட்டத்துப் புதிய கலெக்டர் அருண் தம்புராஜ், ஒவ்வொரு துறை அலுவலகத்துக்கும் திடீர் விசிட் அடித்து ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். நகராட்சி அலுவலகத்துக்குச் சென்ற அவர், ‘`பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தால், எத்தனை நாள்களில் வழங்குவீர்கள்?’’ என்று கேட்டிருக்கிறார். ‘`15 - 20 நாள்களுக்குள் வழங்கிவிடுவோம்’’ என்று பதில் வந்தது. ‘`இன்றைக்கு இருக்கிற டெக்னாலஜியில் ஏன் இத்தனை நாள்கள் ஆகின்றன, இரண்டு நாள்களில் வழங்க முடியாதா?’’ என்று கேட்டிருக்கிறார். ‘`வழங்கலாம்’’ என்று அதிகாரிகள் சொல்ல, ‘பிறப்பு இறப்புச் சான்றிதழ்களை விண்ணப்பித்த இரண்டாம் நாளே பெற்றுக்கொள்ளலாம்’ என்று வாசலில் போர்டு வைக்கச் சொல்லிவிட்டார். சூப்பர் கலெக்டர்!

இன்பாக்ஸ்

‘ஸ்பைடர் மேன்: ஹோம்கம்மிங்’ படம் மூலம் பிரபலமானவர்கள் டாம் ஹோலண்டும், ஜெண்டயாவும். அடுத்தடுத்த பாகங்களிலும் அவர்கள்தான் ஜோடி என்பதால், இயல்பாகவே கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாமே எக்கச்சக்கம். சில ஆண்டுகளாகவே இருவரும் டேட்டிங், சாட்டிங் என இருந்தாலும், அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்காமல் இருந்தனர். எல்லாம் வதந்தி என முடிவுக்கு வந்த நிலையில், இருவரும் காரில் சிரித்துப் பேசிக்கொண்டு முத்தமிடும் படத்தை ஒரு மீடியா இப்போது ஸ்கூப் அடித்துள்ளது. ஆனாலும் உங்க கடமை உணர்ச்சிக்கு...

கோவைக்கும் யானைக்கும் பெரிய பாசப்பிணைப்பு உண்டு. மேட்டுப்பாளையம் பகுதியில் மூன்று வயதே ஆன ஆண் கன்று யானைக் கூட்டத்திலிருந்து தனித்து விடப்பட்டுள்ளது. அது பெரிய யானைகளுக்கு பயந்து அடர்ந்த வனப்பகுதிக்குச் செல்வதில்லை. வனத்தை ஒட்டியே தனியே சுற்றி வருகிறது. அந்தக் கன்று, தினசரி 4 முறை மேட்டுப்பாளையம் – கோத்தகிரிச் சாலையைக் கடக்கிறது. சாலையின் இரண்டு பக்கங்களும் பார்த்து மெதுவாக வரும் யானைக்கன்று, ஹாரன் அடிக்கும் அல்லது முன்னேறி வரும் வாகனங்களைத் தும்பிக்கையைத் தூக்கி ஒரு மிரட்டு மிரட்டிச் செல்கிறது. கன்று என்பதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அதைச் சீண்டும் சம்பவங்களும் நடக்கின்றன. இறக்கமான சாலை என்பதால், இங்கு அனைத்து வாகனங்களும் வேகமாகச் செல்லும். விபரீதம் ஆவதற்குள் நடவடிக்கை எடுங்க பாஸ்!

முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக தனது சொந்த ஊரான திருவாரூக்கு ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். இதனால் தி.மு.க உடன்பிறப்பு களைவிடவும் புத்தகக்கடைக்காரர்கள் அதிகம் மகிழ்ச்சி அடைந்தார்கள். முதலமைச்சரானதும், ‘பூங்கொத்து வேண்டாம்... புத்தகங்கள் கொடுங்கள்’ என ஸ்டாலின் சொல்லியிருந்தார். சொந்த ஊருக்கு வருகை புரிந்த முதல்வருக்குப் பரிசளிக்க, புத்தகக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. தேடித் தேடி ‘இந்தத் தலைப்பு தாங்க’, ‘இந்த எழுத்தாளர் எழுதின புத்தகம் தாங்க’ எனப் பலரும் வாங்கியதாகப் புத்தகக் கடைக்காரர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள். வாசிப்போம்... நேசிப்போம்!

பல்வேறு மருத்துவப் பயன்களை மனிதர்களுக்கு வாரி வழங்குவதாக நம்பப்படும் துரியன் பழங்களுக்கு கிராக்கி அதிகம். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் கல்லாறு மற்றும் பர்லியாறு அரசுப் பழப்பண்ணைகளில் விளையும் துரியன் பழங்களுக்கு மவுசு இன்னும் அதிகம். ஒவ்வொரு துரியன் சீசனிலும் இந்தப் பழ மரங்களை ஏலம் விடுவது வழக்கம். இதற்குப் பழ வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவும். இந்த முறை நடைபெற்ற ஏலத்தில் கல்லாறு பண்ணைப் பழ மரங்கள் 6.7 லட்ச ரூபாய்க்கும், பர்லியாறு பண்ணை மரங்கள் 4 லட்ச ரூபாய்க்கும் ஏலம் போயின. ஏலத்தின்போது வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறி, குன்னூர் நகரின் போக்குவரத்தே ஸ்தம்பித்தது. ‘இந்த ரகளைக்குக் காரணம் துரியன் பழம்’ என்பதை அறிந்த உள்ளூர் மக்கள் திகைத்துவிட்டனர். பழம்னாலே பஞ்சாயத்துதான்போல!

தன் சித்தியான நடிகை ஸ்ரீதேவி பற்றி முதல்முறையாக மனம் திறந்திருக்கிறார், நடிகர் அர்ஜுன் கபூர். போனி கபூரின் முதல் மனைவி மோனாவுக்குப் பிறந்தவர் அர்ஜுன் கபூர். ‘`அப்போது நான் பள்ளி மாணவன். நெருங்கிய பள்ளி நண்பர்கள்கூட, ‘உன் புது அம்மா எப்படி இருக்காங்க’ என்று கேட்டுச் சிரித்தபோது மனம் நொறுங்கிப்போனேன். நானும் என் சகோதரி அன்ஷுலாவும் அவருடன் இணைய முடியவில்லை. ஸ்ரீதேவி இறந்தபிறகே அவரின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷியைச் சந்தித்தேன். அடிக்கடி சந்தித்தாலும், இப்போது வரை தனித்தனிக் குடும்பங்களாகவே இருக்கிறோம்’’ என்கிறார் அர்ஜுன் கபூர். காலம் எல்லாவற்றையும் மாற்றும்.

அஜித்துக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் 2015-ல் வெளியான ‘யட்சன்’ திரைப்படத்திற்குப் பிறகு பாலிவுட் சென்றார். அங்கு சித்தார்த் மல்ஹோத்ரா, க்யாரா அத்வானியை வைத்து ‘ஷேர்ஷா’ படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு ஜனவரி மாதமே படம் முடிந்துவிட்டாலும் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளித் தள்ளிப் போனது. இந்தியில் தனது முதல் படம் என்பதால் தியேட்டரில் வெளியிட ஆவலுடன் காத்திருந்தது விஷ்ணு & டீம். ஆனால், தற்போது தொடரும் அலைகளால் படம் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. பில்லா 3 எப்போ சாரே..?!